கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

புதன், 19 அக்டோபர், 2011

தமிழர் நிலத்திணைகள்-3 முல்லைத்திணை


மனித வரலாற்றின் ஆரம்ப கட்டங்களில் மலைகளிலும், குகைகளிலும் வாழ்ந்த மனிதர்கள், மக்கள் தொகைக் பெருக்கத்தின் காரணமாக அடுத்துள்ள கானகப் பகுதியான முல்லை நிலத்திற்குச் சென்றனர். மனிதன், இதற்குள் நாய், எருமை, பசு, ஆடு போன்ற விலங்குகளைப் பழக்கி, வளர்க்கக் கற்றுக்கொண்டான்.

மனித இனத்தின் நாகரிக வளர்ச்சியின் இரண்டாவது நிலையான "ஆயர் நிலை" இவ்வாறு எய்தப்பட்டது. முல்லை நிலத்தில் ஆடு, மாடுகள் விரைந்து பெருகும். அதனால் முதன் முதலாகத் தனிநபர் சொத்துரிமை இங்குதான் ஏற்பட்டது. இனக்குழுக்கள் தனித்தனிக் குடும்ப முறை ஆகியவை உருவாயின. சமுதாயத்தின் இரண்டாவது வளர்ச்சி நிலை இது.

காதல் மணம், மணச்சடங்குகள் இன்மை (புலிப்பல் தாலி, தாழையுடை தவிர) ஆகிய தன்மைகளைக் கொண்டதும், "களவு" என்று பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பதுமான இயற்கை மணமுறை முல்லை நிலத்தில் சிறிது சிறிதாக மாறி, "கற்பு" மணம் ஏற்பட்டது.

தனிநபர் சொத்துரிமை, கற்புமணம் ஆகியவை தந்தை வழிச் சமுதாயம் உருவாக வழிவகுத்தது. காரணம், ஏராளமான ஆடு, மாடுகளைத் தன் சொத்தாக உடைய தலைவன் தன் செல்வம் காரணமாக அதிகாரமும், ஆதிக்கமும் பெற்றான். கூட்டுக்குடும்பமுறை உருவானது. பெரிய குடும்பத்தின் தலைவன் நாளடைவில் "சிற்றரசன்" ஆனான். தமிழகத்தில் இவ்வாறு அரசன் உருவானான் என்பதைக் காட்டும் சொல், "கோன்" (கோன் - இடையன், அரசன்; இடைச்சி - ஆய்ச்சி, அரசி). ஆடு, மாடு மேய்க்க உதவும் "கோலே" பின்னாளில் அரசனின் "செங்கோல்" ஆயிற்று.

ஆயின் முல்லை நிலத்தில் குறுநில அரசுகளே உருவாயின என்றும், மருத நிலத்தில் தான் பேரரசு உருவாகியதென்றும் கருதலாம்.

ஆநிரையைச் செல்வமெனப் போற்றும் முல்லை நிலச் சிற்றரசுகளிடையே ஏற்பட்ட சிறுசிறு போர்களே (ஆநிரை கவர்தல்) தொடக்ககாலப் போர்களாக இருந்தன. எனவே, பண்டைத் தமிழகத்தின் முதற்போர் முறையாக, ஆநிரை கவர்தல் அமைந்தது. கிராமிய வாழ்வை - கற்பனையான பொற்கால வாழ்வைச் சித்திரிக்கும் பாடல்களே "முல்லைப் பாடல்கள்" என்பர் மேலை நாட்டு மொழி இயல் வல்லுநர்கள். தமிழகத்தில் உள்ள முல்லைத் திணைப் பாடல்களைப் போன்றே கிரேக்கம், இலத்தீன், எபிரேயம், வடமொழி மற்றும் இந்திய மொழிகளிலும் முல்லைப் பாடல்கள் உள்ளன.

இந்திய நாகரிகத்தின் இரண்டாம் நிலையாக முல்லை நில வாழ்க்கை அமைந்துள்ளது. தமிழகத்தில் சிற்றரசர்களும், வேளிர்களும் உருவானது முல்லை நிலத்தில்தான். இலத்தீன், தமிழ் ஆகிய செவ்வியல் மொழிகளில் இருப்பது போல் வடநாட்டில் ஏனோ, எந்த மொழியிலும் முல்லைப் பாடல்கள் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடைச்சங்க இலக்கியங்களாக எட்டுத்தொகையும், பத்துப்பாட்டுமே கருதப்படும்.

எட்டுத்தொகை நூல்களில் அக இலக்கியங்களான நற்றிணையில் 30 பாடல்கள்
குறுந்தொகையில் 45
ஐங்குறுநூற்றில் 100
கலித்தொகையில் 40
அகநானூற்றில் 40 பாடல்கள்
முல்லைப் பாடல்களாகும்.

பத்துப்பாட்டில் நெடுநல்வாடை, முல்லைப்பாட்டு ஆகிய இரண்டு பாடல்களும் முல்லைத் திணைப் பாடல்கள். முல்லை நிலப் பாடல்கள் மொத்தம் 234. மிகக்குறுகிய 3 அடிச் சிற்றெல்லையில் ஐங்குறுநூற்றுப் பாடலையும், மிக அதிகமாக 188 அடிகளைக் கொண்ட நெடுநல்வாடைப் பாடலையும் காண்கிறோம்.

எட்டுத்தொகை நூல்களில் ஐங்குறுநூறு(100), முல்லைப் பாடல்கள் பாடிய பேயனாரை அடுத்து இடைக்காடரும், மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனாரும் மிக அதிகமாக முல்லைப் பாடல்கள் பாடியுள்ளார்கள்.

முல்லைப் பாடல்களைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை 73. பாடிய புலவர்கள் பெயர்கள் தெரியாத பாடல்கள் எண்ணிக்கை 6.

உலகச் செம்மொழிகளான கிரேக்கம், இலத்தீன், எபிரேயம் ஆகிய மொழிகளிலுள்ள முல்லைப் பாடல்களின் எண்ணிக்கையைவிட, தமிழ் மொழியில் உள்ள முல்லைப் பாடல்களின் எண்ணிக்கை அதிகம்.

முல்லைப் பாடல்கள் வழி நாம் அறியும் சில சங்கச் செய்திகளாவன:-

விரிச்சி கேட்டு நிற்கும்பொழுது நற்சொல் கேட்பின், நன்மை நடக்கும் என்றும்
நல்லது அல்லாத சொல் கேட்பின், நன்மை நடவாது என்றும் நம்பினர் அக்கால மக்கள்.
இன்றும் கிராம மக்களிடையே இந்தப் பழக்கம் தொடர்கிறது.

யானைகளோடு பேசப் பாகர்கள் வடமொழியைப் பயன்படுத்தினர்
போர்க்களங்களில் மங்கையர் பணி புரிந்தனர்
ஏழடுக்கு மாளிகைகளில் மக்கள் வசித்தனர்
நாழிகைக் கணக்கர், "நாழிகை வட்டில்" கொண்டு காலத்தைக் கணித்தனர்
அரசுச் செய்திகளைப் பிறர் அறியாதிருக்க ஊமையர்களை (மிலேச்சர்) அரசர்கள் தங்களுக்குக் காவலாக வைத்திருந்தனர்.

இதுபோன்ற சங்கச் செய்திகள் பலவற்றை முல்லைப் பாடல்கள் வழி அறிய முடிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;