கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

திங்கள், 31 அக்டோபர், 2011

பெரும்பாண் ஆற்றுப்படை-2


பத்துப் பாட்டுக்களில் நான்காவது
தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார்
பாடிய

பெரும்பாண் ஆற்றுப்படை





முது வேனிற் பருவம்

அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகி,
பகல் கான்று, எழுதரு பல் கதிர்ப் பருதி
காய் சினம் திருகிய கடுந் திறல் வேனில்,





யாழ்

பாசிலை ஒழித்த பராஅரைப் பாதிரி
வள் இதழ் மா மலர் வயிற்றிடை வகுத்ததன் 5

உள்ளகம் புரையும் ஊட்டுறு பச்சை;
பரியரைக் கமுகின் பாளை அம் பசும் பூக்
கரு இருந்தன்ன, கண் கூடு செறி துளை;
உருக்கியன்ன, பொருத்துறு போர்வை;
சுனை வறந்தன்ன, இருள் தூங்கு வறு வாய்; 10

பிறை பிறந்தன்ன, பின்ஏந்து கவைக் கடை;
நெடும் பணைத் திரள் தோள் மடந்தை முன்கைக்
குறுந்தொடி ஏய்க்கும், மெலிந்து வீங்கு திவவின்;
மணி வார்ந்தன்ன, மா இரு மருப்பின்;

பொன் வார்ந்தன்ன புரி அடங்க நரம்பின் 15

தொடை அமை கேள்வி இட வயின் தழீஇ,






பாணனது வறுமை

வெந் தெறல் கனலியொடு மதி வலம் திரிதரும்
தண் கடல் வரைப்பில், தாங்குநர்ப் பெறாது,
பொழி மழை துறந்த புகை வேய் குன்றத்துப்
பழுமரம் தேரும் பறவை போல, 20

கல்லென் சுற்றமொடு கால் கிளர்ந்து திரிதரும்
புல்லென் யாக்கைப் புலவு வாய்ப் பாண!





பரிசு பெற்றோன் தன் செல்வ நிலையை எடுத்து உரைத்தல்

பெரு வறம் கூர்நத கானம் கல்லெனக்
கருவி வானம் துளி சொரிந்தாங்கு,
பழம் பசி கூர்ந்த எம் இரும் பேர் ஒக்கலொடு 25

வழங்கத் தவாஅப் பெரு வளன் எய்தி,
வால் உளைப் புரவியொடு வயக் களிறு முகந்துகொண்டு,
யாம் அவணின்றும் வருதும்-





இளந்திரையனின் மாண்பு

நீயிரும்,
இரு நிலம் கடந்த திரு மறு மார்பின்
முந்நீர் வண்ணன் பிறங்கடை, அந் நீர்த் 30

திரை தரு மரபின், உரவோன் உம்பல்,
மலர் தலை உலகத்து மன் உயிர் காக்கும்
முரசு முழங்கு தானை மூவருள்ளும்,
இலங்கு நீர்ப் பரப்பின் வளை மீக்கூறும்
வலம்புரி அன்ன, வசை நீங்கு சிறப்பின், 35

அல்லது கடிந்த அறம் புரி செங்கோல்,
பல் வேல் திரையற் படர்குவிர் ஆயின்;
கேள், அவன் நிலையே; கெடுக நின் அவலம்!





நாட்டின் அறப் பண்பாடு

அத்தம் செல்வோர் அலறத் தாக்கி,
கைப் பொருள் வெளவும் களவு ஏர் வாழ்க்கைக் 40

கொடியோர் இன்று, அவன் கடியுடை வியன் புலம்;
உருமும் உரறாது; அரவும் தப்பா;
காட்டு மாவும் உறுகண் செய்யா; வேட்டு, ஆங்கு,
அசைவுழி அசைஇ, நசைவுழித் தங்கி,
சென்மோ, இரவல! சிறக்க நின் உள்ளம்! 45

நல்வழி-6

21.
நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும்
தரும்சிவந்த தாமரையாள் தான்


22.
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுங்(கு)
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்


23.
வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை


24.
நீறில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ் - மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் பாழே
மடக்கொடி இல்லா மனை


25.
ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு

திசைச்சொற்கள் -6

ஒல்லாந்து மொழிச் சொற்கள்

(1) இலாச்சி
(2) உலாந்தை
(3) கக்கூஸ்
(4) கந்தோர்
(5) கேத்தில்
(6) சக்கடத்தார்
(7) சாக்கு
(8) துட்டு
(9) தொலுக்கு
(10) தோம்பு
(11) தோப்பு
(12) நொத்தாரிசு
(13) பிசுக்கால்

எதிர்கருத்துச் சொற்கள்- ஊ

(1) ஊடல் - கூடல்
(2)ஊதாரி - பிசினி
(3)ஊதாரித்தனம் - சிக்கனம்

சிற்றிலக்கியம் 14

குறத்தி வருதல்
தலைவி அனுப்பிய தோழி தூது சென்று வருகின்றாள். வரும் போது ஒரு குறத்தியும் அவளுடன் வருகின்றாள். அவள் பாட்டுடைத் தலைவனைப் புகழ்ந்து கொண்டே வருகின்றாள். இந்த இடத்தில் குறத்தியின் தோற்றம் வருணிக்கப்படும். குறத்தி தலைவியிடம் தன் நாடு, மலை ஆகியவற்றைப் பற்றியும் கூறுகின்றாள்.


மூதுரை-26

நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்
அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர்.

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

ஒத்தகருத்துச் சொற்கள் - ஈ

(1) ஈசன் - இறைவன 
 (2)ஈழம் - இலங்கை ஸ்ரீலங்கா
 (3)ஈமசடங்கு - இறுதிசடங்கு 
(4)ஈதல் - கொடுத்தல்
 (5)ஈர்ப்பு - இழுப்பு
 (6)ஈமம் - சுடுகாடு
(7)ஈறு - முடிவு 
(8)ஈனம் - குறைபாடு 
(9)ஈனல் - கதிர்
 (10)ஈன்றாள் - தாய் 
(11)ஈகை - கொடை
 (12)ஈசன் - கடவுள் 
 (13)ஈடு - அடகு 
 (14)ஈடு - பிணை
 (15)ஈடுபாடு - விருப்பம்
 (16)ஈடேறுதல் - உயர்வடைதல்
 (17)ஈடேற்றம் - மீட்சி 
 (18)ஈட்டம் - கூட்டம் 
 (19)ஈட்டல் - தேடுதல்
 (20)ஈஸ்வரன் - இறைவன்
( 21)ஈணவள் - ஈன்றவள்
(24)ஈனவள் - இழிந்தவள்

உலக நீதி - 10

5
வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம்
     மனையாளைக் குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம்
வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்
     வெஞ்சமரில் புறம் கொடுத்து மீள வேண்டாம்
தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்
     தாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
வாழ்வாரும் குறவருடை வள்ளி பங்கன்.
     மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே!

சிற்றிலக்கியம் 13

தலைவி தோழியைத் தூது அனுப்புதல்
தலைவனிடம் காதல் கொண்ட தலைவி தன் தோழியைத் தலைவனிடம் தூதாக அனுப்புகின்றாள். தலைவனை அழைத்து வர வேண்டும் இல்லை என்றால் அவன் அணிந்துள்ள மாலையையாவது வாங்கி வர வேண்டும் என்று கூறித் தோழியைத் தூது அனுப்புகின்றாள்.


சங்க காலத்தின் முடிவு

கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் சங்ககாலம் மெல்ல முடிவுக்கு வரத் தொடங்கியது. சுமார் இரண்டரை நூற்றாண்டுகள் தமிழகத்தை களப்பிரர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர். களப்பிரர்கள் ஆட்சிகுறித்து நமக்கு சொற்ப தகவல்களே கிடைக்கின்றன. இக்காலத்தில் புத்த சமயமும், சமண சமயமும் முக்கியத்துவம் பெற்றிருந்தன. பின்னர் களப்பிரர்களை விரட்டிவிட்டு வடக்கு தமிழ்நாட்டில் பல்லவர்களும், தெற்குத் தமிழ்நாட்டில் பாண்டியர்களும் தத்தம் ஆட்சியை நிறுவினர்.

மூதுரை-25


நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்தாற்போல்
கற்றாரைக் கற்றாறே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்                      



கொன்றை வேந்தன்-6

பகர வருக்கம்

59.    பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்
60.    பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்
61.    பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்
62.    பீரம் பேணி பாரம் தாங்கும்
63.    புலையும் கொலையும் களவும் தவிர்
64.    பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்
65.    பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்
66.    பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்
67.    பையச் சென்றால் வையம் தாங்கும்
68.    பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்
69.    போனகம் என்பது தான் உழந்து உண்டல்

ஒத்தகருத்துச் சொற்கள் - கா

(01) காப்புறுதி - இழப்பீட்டுக்கான உறுதி    
(02)காரணம் - கரணியம்
(03)காரியம் - கருமியம்
(04)கார்த்திகேயன் - அரலன்
(05)கார்த்திகை (மாதம்) - நளி
(06)கார்த்திகை (விண்மீன்) - ஆரல்
(07)காவியம் – வனப்பு, செய்யுட் தொடர்
(08)காளமேகம் - கார்முகில்



சனி, 29 அக்டோபர், 2011

பொருநர் ஆற்றுப்படை-2


பத்துப் பாட்டுக்களில் இரண்டாவது
சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார்
பாடிய

பொருநர் ஆற்றுப்படை

இது கரிகாற் பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது. இந் நூல் பரிசில் பெற்ற பொருநன், பரிசில் பெற விழையும் பொருநனை ஆற்றுப் படுத்தியதாக அமைந்துள்ளது.

பொருநனை விளித்தல்

அறாஅ யாணர் அகன் தலைப் பேர் ஊர்,
சாறு கழி வழி நாள். சோறு நசை உறாது,
வேறு புலம் முன்னிய விரகு அறி பொருந!

வடமொழிச்சொற்களுக்குஇணையானதமிழ்சொற்கள்

1.அக்கிரமம் - கொடுமை
2.அக்கிரமம் -முறைகேடு
3.அக்கிணி - தீ
4.அக்கிணி - அழல்
5.அக்கிணி - நெருப்பு
6.அகிம்சை - இன்னாசெய்யாமை

எதிர்கருத்துச் சொற்கள் - உ

  (1) உசிதம் - அநுசிதம்
  (2) உடன்பாடு - எதிர்மறை
  (3) உடைப்பு - அடைப்பு
  (4) உண்மை - இன்மை
  (5) உண்மை - பொய்மை
  (6) உதயம் - அஸ்தமனம்
  (7) உதித்தல் - மறைதல்
  (8) உத்தமம் -அதமம்
  (9) உத்தமன் -அதமன்
(10) உருகுதல் - இறுகுதல்
(11) உரூபி - அரூபி
(12) உபகாரம் -அபகாரம்
(13) உம்பர் - இம்பர்
(14) உமிழ்தல் - விழுங்குதல்
(15) உயர்வு - தாழ்வு
(16) உய்தி - அழிவு
(17) உருசி - அருசி
(18) உருவம் - அருவம்
(19) உலோபி - வள்ளல்
(20) உவகை - வெறுப்பு
(21) உழைப்பு - சோம்பல்
(22) உள்ளுறை - வெளிப்படை
(23) உள்ளே - வெளியே
(24) உறக்கம் - விழிப்பு
(25) உறவு - பகை
(26) உறுதி - மெலிவு
(27) உற்சாகம் - சோம்பல்
(28) உன்னதம் - இழிவு

நன்னெறி-5

31
பேரறிஞர் தாக்கும் பிறர்துயரம் தாங்கியே
வீரமொடு காக்க விரைகுவார் - நேரிழாய்!
மெய்சென்று தாக்கும் வியன்கோல் அடிதன் மேல்
கை சென்று தாங்கும் கடிது.

32
பன்னும் பனுவல் பயன்தேர் அறிவிலார்
மன்னும் அறங்கள் வலியிலவே - நன்னுதால்!
காழ் ஒன்று உயர் திண் கதவு வலியுடைத்தோ
தாழ் ஒன்று இலதாயில் தான்.

33
எள்ளாது இருப்ப இழிஞர் போற்றற்கு உரியர்
விள்ளா அறிஞர் அது வேண்டாரே - தள்ளாக்
கரை காப்பு உளது நீர் கட்டு குளம் அன்றிக்
கரை காப்பு உளதோ கடல்.

34
அறிவுடையார் அன்றி அது பெறார் தம்பால்
செறி பழியை அஞ்சார் சிறிதும் - பிறைநுதால்
வண்ணம் செய்வாள் விழியே அன்றி மறை குருட்டுக்
கண் அஞ்சுமோ இருளைக் கண்டு.

 35
கற்ற அறிவினரைக் காமுறுவர் மேன்மக்கள்
மற்றையர் தாம் என்றும் மதியாரே - வெற்றி நெடும்
வேல் வேண்டும் வாள் விழியாய்! வேண்டா புளிங்காடி
பால் வேண்டும் வாழைப்பழம்.

 36
தக்கார்க்கே ஈவர் தகார்க்கு அளிப்பார் இல்என்று
மிக்கார்க்கு உதவார் விழுமியோர்-எக்காலும்
நெல்லுக்கு இறைப்பதே நீரன்றிக் காட்டுமுளி
புல்லுக்கு இறைப்பாரோ போய்.

 37
பெரியார் முன் தன்னைப் புகழ்ந்து உரைத்த பேதை
தரியாது உயர்வு அகன்று தாழும் - தெரியாய் கொல்
பொன் உயர்வு தீர்த்த புனர் முலையாய்! விந்தமலை
தன் உயர்வு தீர்ந்தன்று தாழ்ந்து.

38
நல்லார் செய்யும் கேண்மை நாள்தோறும் நன்றாகும்
அல்லார் செய்யும் கேண்மை ஆகாதே - நல்லாய் கேள்
காய் முற்றின் தின்தீங் கனியாம் இளம் தளிர் நாள்
போய் முற்றின் என் ஆகிப் போம்.

39
கற்று அறியார் செய்யும் கடுநட்பும் தாம்கூடி
உற்றுழியும் தீமை நிகழ்வு உள்ளதே - பொற்றொடீஇ
சென்று படர்ந்த செழுங்கொடி மென் பூ மலர்ந்த
அன்றே மணமுடைய தாம்.

40
பொன் அணியும் வேந்தர் புனையாப் பெருங்கல்வி
மன்னும் அறிஞரைத் தாம் மற்று ஒவ்வார் - மின்னுமணி
பூணும் பிற உறுப்புப் பொன்னே அது புனையாக்
காணும் கண் ஒக்குமோ காண்.  

சிற்றிலக்கியம் 12

தலைவி பற்றிய செய்திகள்
குறவஞ்சி நூல்களில் தலைவியின் பெயர்களின் இறுதியில் வல்லி அல்லது மோகினி என்ற சொல் காணப்படும். வசந்தவல்லி ஜகன் மோகினி என்ற பெயர்களைச் சான்றுகளாகக் கூறலாம். தலைவி தலைவன் உலா வருவதைக் காண்கின்றாள். காதல் கொள்கின்றாள். காதல் காரணமாக மயங்கி விழுகின்றாள். அவள் தோழியர்கள் அவள் மயக்கத்தை நீக்க முயல்கின்றனர்.



சங்க காலத்தில் கைத்தொழில்கள்

 ஏற்றம் பெற்றிருந்தன. நெசவு, உலோகத் தொழில், தச்சுவேலை, கப்பல் கட்டுதல், மணிகள், விலையுயர்ந்த கற்கள், தந்தம் ஆகியவற்றை பயன்படுத்தி ஆபரணங்கள் செய்தல் போன்றவை ஒருசில கைத்தொழில்களாகும். இத்தகைய பொருட்களுக்கு நல்ல தேவைகள் இருந்தன. ஏனென்றால் சங்ககாலத்தில் உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு வாணிகம் சுறுசுறுப்பாக நடைபெற்றது. பருத்தி மற்றும் பட்டு இழைகளைக் கொண்டு நெய்யப்பட்ட துணிகள் உயர்ந்த தரமுடையதாக இருந்தன. நீராவியைவிடவும், பாம்பின் தோலைவிடவும் மெலிதான துணிகள் நெய்யப்பட்டடதாக சங்க இலக்கியப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. உறையூரில் உற்பத்தி செய்யப்பட்ட பருத்தியாடைகளுக்கு மேலை நாடுகளில் பெரும் தேவை காணப்பட்டடது.
உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு வர்த்தகம் சங்க கால்தில் நன்கு சீரமைக்கப்பட்டிருந்தது. சங்க இலக்கியங்கள், கிரேக்க – ரோமானிய நூல்கள் மற்றும் தொல்லியல் சான்றுகள் இது குறித்த ஏராளமான தகவல்களைத் தருகின்றன. வண்டிகளிலும் விலங்குகள் மேல் ஏற்றப்பட்ட பொதிகளின் மூலமாகவும், வணிகர்கள் பொருட்களை கொண்டுசென்று விற்பனை செய்தனர். உள்நாட்டு வாணிகம் பெரும்பாலும் பண்டமாற்று முறையின் அடிப்படையிலேயே நடைபெற்றது.


தென்னிந்தியாவிற்கும், கிரேக்க அரசுகளுக்கும் இடையே அயல்நாட்டு வர்த்தகம் நடைபெற்றது. ரோமானியப் பேரரசு தோன்றிய பிறகு ரோமாபுரியுடனான வாணிபம் சிறப்படைந்தது. துறைமுகப்பட்டினமான புகார் அயல்நாட்டு வணிகர்களின் வர்த்தகமையமாகத் திகழ்நததது. விலை மதிப்பு மிக்க பொருட்களை ஏற்றிவந்த பெரிய கப்பல்கள் இந்த துறைமுகத்திற்கு வந்து சென்றன. தொண்டி, முசிறி, கொற்கை, அரிக்கமேடு, மரக்காணம் போன்றவை பிற சுறுசுறுப்பான துறைமுகங்களாகும். அயல்நாட்டு வாணிபம் குறித்து ‘பெரிப்புளூஸ்’ நூலின் ஆசிரியர் பல அரிய தகவல்களைக் கூறியுள்ளார். அகஸ்டஸ், டைபீரியஸ், நீரோ போன்ற ரோமானியப் பேரரசர்கள் வெளியிட்ட தங்கம் மற்றும் வெள்ளியாலான நாணயங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமாகக் கிடைக்கின்றன. சங்க காலத்தில் நடைபெற்ற வாணிகத்தின் அளவு மற்றும் தமிழ்நாட்டில் ரோமானிய வணிகர்களின் செயல்பாடுகள் ஆிகயவற்றை இவை வெளிப்படுத்துவதாக உள்ளன. பருத்தியாடைகள், மிளகு, இஞ்சி, ஏலக்காய், இலவங்கம், மஞ்சள் போன்ற நறுமணப் பொருட்கள், தந்தவேலைப்பாடு நிறைந்த பொருட்கள், முத்துக்கள் மற்றும் விலையுயர்ந்த கற்கள் போன்றவை சங்க காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டட பொருட்களாகும். தங்கம், குதிரைகள், இனிப்பான மதுவகைகள் ஆகியன முக்கிய இறக்குமதிகளாகும்.


மூதுரை-24


கற்பிளவோ(டு) ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ(டு) ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீர்ஒழுகு சான்றோர் சினம்                        



ஒத்தகருத்துச் சொற்கள் -க

(01)கங்குல் - இரவு
(02)கசடு - குற்றம்
(03)கசடு - ஜயம்
(04)கச்சல் - இளம்பிஞ்சு
(05)கச்சல் - கசப்பு
(06)கச்சை - அரைகச்சு
(07)கச்சை - கயிறு
(08)கஞ்சம் - தாமரை
(09)கஞ்சல் - பயனற்றது
(10)கஞ்சுகம் - மார்புச்சட்டை 

(11)கடகம் - கேடயம்
(12)கடகம் - வளையல்
(13)கடப்பாடு - கடமை
(14)கடம் - குடம்
(15)கடவுள் - இறைவன்
(16)கடாட்சம் - கருணை
(17)கடாட்சம் - அருள்
(18)கடி - அச்சம்
(19)கடி - காவல்
(20)கடி - வாசனை

(21)கடிகை - நாழிகை
(22)கடிகை - நேரம்
(23)கடிதல் - தண்டித்தல்
(24)கடு - விடம்
(25)கடுகதி - மிகுவேகம்
(26)கடைகாப்பு - வாயிற்காவல்
(27)கடைசி - முடிவு
(28)கடைப்பிடி - மனவுறுதி
(29)கட்கம் - வாள்
(30)கட்செவி - பாம்பு
(31)கட்டழகு - பேரழகு
(32)கட்டளை - உத்தரவு
(33)கட்டாயம் - பலாத்காரம்
(34)கட்டியம் - புகழ்மொழி
(35)கட்டுமரம் - மிதவை
(36)கட்டுப்பாடு - நிபந்தனை
(37)கட்புலம் - பார்வை
(38)கணம் - கூட்டம்
(39)கணிகை - தேவதாசி
(40)கணிசம் - மதிப்பு 

(41)கணிசம் - அளவு
(42)கணுக்கை - மணிக்கட்டு
(43)கணை - அம்பு
(44)கணையாழி - மோதிரம்
(45)கண் - விழி

(46)கண்காணி - மேற்பார்வை செய்
(47)கண்கூடு - தெளிவு
(48)கண்கூடு - பிரத்தியட்சம்
(49)கண்டகம் - வான்
(50)கண்டகம் - காடு 

(51)கண்டனம் - மறுப்பு
(52)கண்டாமணி - பெரியமணி
(53)கண்டிகை - உருத்திராக்கம்
(54)கண்ணயர்தல் - உறங்கல்
(55)கண்ணி - வலை
(56)கண்ணி - மாலை
(57)கண்ணியம் - மேன்மை
(58)கண்ணோட்டம் - இரக்கம்
(59)கண்படை - நித்திரை
(60)கண்வளர்த்தல் - உறங்குதல் 

(61)கதி - விரைவு
(62)கதிரவன் - சூரியன்
(63)கர்த்தபம் - கழுதை
(64)கந்தம் - வாசனை
(65)கந்தழி - கடவுள்
(66)கந்தழி - பிரமம்
(67)கந்துகம் - பந்து
(68)கந்துகம் - குதிரை
(69)கபடம் - வஞ்சகம்
(70)கபாடம் - கதவு
(71)கபாலம் - மண்டையோடு
(72)கபோதி - குருடன்
(73)கப்பம் - திறை
(74)கமக்காரன் - விவசாயி
(75)கமம் - வயல்
(76)கமலம் - தாமரை
(77)கமலாசனி - இலக்குமி
(78)கம்பலை - நடுக்கம்
(79)கம்பலை - அச்சம்
(80)கயமுகன் - விநாயகன்
(81)கயமை - இழிகுணம்
(82)கயவன் - கொடியவன்
(83)கரடுமுரடு - செம்மையற்றது
(84)கரம் - கை
(85)கரவு - வஞ்சகம்
(86)கரவு - களவு
(87)கரி - யானை
(88)கரிசனம் - பரிவு
(89)கரு - சூல்
(90)கருக்குழி - கருப்பை
(91)கருது - அனுமானி
(92)கருதுகோள் - எண்ணம்
(93)கருத்து - சித்தம்
(94)கருத்தனம் - செல்வம்
(95)கருவி - உபகரணம்
(96)கருவூலம் - பெருஞ்செல்வம்
(97)கரைகாணல் - முடிவுகாணல்
(98)கரையேறல் - நற்கதியடைதல்
(99)கர்வம் - செருக்கு
(100)கலங்கல் - வருத்தல்
(101)கலக்கம் - குழப்பம்
(102)கலசம் - குடம்
(103)கலப்பை - உழுபடை
(104)கல்வி - புணர்ச்சி
(105)கலாபம் - மயிற்றோகை
(106)கலி -துன்பம்
(107)கலி - வஞ்சகம்
(108)கலை - ஆண்மான்
(109)கலை - வித்தை
(110)கலைமகள் - சரஸ்வதி
(111)கல் - மலை
(112)கல்யாணம் - திருமணம்
(113)கல்வி - வித்தை
(114)கல்வெட்டு - சிலாசாசனம்
(115)கலசம் - இரும்புச்சட்டை
(116)கவருதல் - அபகரித்தல்
(117)கவி - குரங்கு
(118)கவிகை - குடை
(119)கவின் - அழகு
(120)கவை - மரக்கொப்பு
(121)கழல் - பாதம்
(122)கழல் - வீரக்கழல்
(123)கழனி - வயல்
(124)கழி - அகற்று
(125)கழி - உப்பளம்
(126)கழுத்து - கண்டம்
(127)கழுவாய் - பிராயச்சித்தம்
(128)களகம் - நெற்கதிர்
(129)களங்கம் - குற்றம்
(130)களங்கம் - கறை
(131)களஞ்சியம் - பண்டகசாலை
(132)களம் - போர்க்களம்
(133)களி - இன்பம்
(134)களி - குழைவு
(135)களிப்பு - மகிழ்ச்சி
(136)களிம்பு - செப்பின்மலப்பற்று
(137)களிறு - ஆண்யானை
(138)களை - குற்றம்
(139)களை - அழகு
(140)கள் - மது
(141)கள் - பொய்
(142)கள்வன் - திருடன்
(143)கறங்கு - காற்றாடி
(144)கறங்கு - சுழற்சி
(145)கறவை - பாற்பசு
(146)கறை - குற்றம்
(147)கறை - அடையாளம்
(148)கரையான் - செல்
(149)கற்பகம் - பனை
(150)கற்பனை - புனைந்துரை
(151)கதாபாத்திரம் - நடிகலம்
(152)கருணாநிதி – அருட்செல்வன்
(153)கருணை - அருள்
(154)கருமி - கஞ்சன்
(155)கர்நாடக சங்கீதம் - தமிழிசை
(156)கர்வம் – செருக்கு
(157)கர்ஜனை - முழக்கம்
(158)கலாநிதி – கலைச்செல்வன்
(159)கவி – பாட்டு, செய்யுள்
(160)கவியோகி – பாவோகி
(161)கஷ்டம் – துன்பம்

(162)ககனம் - ஆகாயம் 
(163)கங்குகரை -அளவு 
(164)கலம் -பாத்திரம்
(165)கலம் -கப்பல்
(166)கலம் -ஓடம் 
(167)கலம் -அணிகலன்
(168)கலம் -யாழ்  
(169)கலம் -ஆயுதம் 
(170)கலம் -ஓலைப் பத்திரம்  
(171)கலம் -ஏர் 
(172)கலம் -ஒரு முகத்தலளவு
(173)கடல் - பரவை, 
(174)கடல் -முந்நீர்
(175)கதிரோன் -சூரியன் 
(176)கவிதை :செய்யுள் 

வெள்ளி, 28 அக்டோபர், 2011

இனியவை நாற்பது

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
பூதஞ் சேந்தனார்"
இனியவை நாற்பது

இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நான்கு நாற்பது பாடல்களைக் கொண்ட நூல்களில் இரண்டாவதாகும். இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார் எனப்படுவர். இவர் தந்தையார் மதுரைத் தமிழாசிரியர் பூதன். இவர் வாழ்ந்த நாடு பாண்டி நாடு. இவர் சிவன், திருமால், பிரமன் முதலிய மூவரையும் பாடியிருப்பதால் சர்வ சமய நோக்குடையவராயிருந்திருக்க வேண்டும். இவர் பிரமனை துதித்திருப்பதால் கி.பி ஏழாம் நூற்றாண்டுக்குப் பிந்தியவர் என்பதோடு, இன்னா நாற்பதின் பல கருத்துக்களை அப்படியே எடுத்தாளுவதால் இவர் அவருக்கும் பிந்தியவர் எனலாம். அதனால் இவரது காலம் கி.பி.725-750 எனப்பட்டது. இந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 செய்யுட்களைக் கொண்டது. இவற்றுள், 'ஊரும் கலிமா' எனத் தொடங்கும் பாடல் ஒன்று மட்டுமே (8) பஃறொடை வெண்பா. ஏனைய அனைத்தும் இன்னிசை வெண் பாவினால் ஆக்கப்பட்டுள்ளது. இந்நூலில் நான்கு இனிய பொருள்களை எடுத்துக் கூறும் பாடல்கள் நான்கே நான்கு தான் உள்ளன(1, 3, 4, 5). எஞ்சிய எல்லாம் மும்மூன்று இனிய பொருள்களையே சுட்டியுள்ளன; இவற்றில் எல்லாம் முன் இரண்டு அடிகளில் இரு பொருள்களும், பின் இரண்டு அடிகளில் ஒரு பொருளுமாக அமைந்துள்ளமை கவனிக்கத் தக்கது. வாழ்க்கையில் நன்மை தரும் கருத்துக்களைத் தேர்ந்தெடுத்து 'இனிது' என்ற தலைப்பிட்டு அமைத்திருப்பதால் இஃது 'இனியவை நாற்பது' எனப்பட்டது. இதனை 'இனிது நாற்பது', 'இனியது நாற்பது', 'இனிய நாற்பது' என்றும் உரைப்பர்.

இன்னா நாற்பது-2


கடவுள் வாழ்த்து

முக் கட் பகவன் அடி தொழாதார்க்கு இன்னா;
பொற்பனை வெள்ளையை உள்ளாது ஒழுகு இன்னா;
சக்கரத்தானை மறப்பு இன்னா; ஆங்கு இன்னா,
சத்தியான் தாள் தொழாதார்க்கு.


இன்னா - துன்பம்
ஒழுகு - நடத்தல்

முக்கண்களுடைய சிவபெருமானின் திருவடிகளை வணங்காதவர்களுக்கு துன்பமுண்டாம். அழகிய பனைக் கொடியையுடையவனாகிய பலராமனை நினையாமல் இருத்தல் துன்பமாம். திகிரிப்படையை உடையவனாகிய மாயோனை மறத்தல் துன்பமாம். அவ்வாறே சக்தியான் வேற்படையை உடையவனாகிய முருகக் கடவுளின் திருவடிகளைத் தொழாதார்க்கு துன்பம் உண்டாகும்

எதிர்கருத்துச் சொற்கள் - இ

  (1) இகம் - பரம்
  (2) இகல் - நட்பு
  (3) இசை - வசை
  (4) இசைதல் - மறுத்தல்
  (5) இச்சை - வெறுப்பு
  (6) இடம் - வலம்
  (7) இணக்கம் - பிணக்கம்
  (8) இணைதல் - பிரிதல்
  (9) இணைத்தல் - பிரித்தல்
(10) இணைந்து - தனித்து
(11) இம்மை - மறுமை
(12) இயக்கம் -நிலைபேறு
(13) இயல்பு - விகாரம்
(14) இயற்கை - செயற்கை
(15) இயற்சொல் - திரிசொல்
(16) இயற்பெயர் - புனைபெயர்
(17) இரகசியம் - பரகசியம்
(18) இரசம் - விரசம்
(19) இரண்டகம் - நேர்மை
(20) இரவல் - சொந்தம்
(21) இரவலர் - புரவலர்
(22) இரவு - பகல்
(23) இருள் - ஒளி
(24) இருமை - ஒருமை
(25) இலட்சணம் - அவலட்சணம்
(26) இலாபம் - நட்டம்
(27) இல்பொருள் - உள்பொருள்
(28) இல்லறம் - துறவறம்
(29) இல்லை - உண்டு
(30) இழிவு - உயர்வு
(31) இழுக்கம் - விழுக்கம்
(32) இளக்கம் - கடினம்
(33) இளமை - முதுமை
(34) இளவல் - மூத்தோன்
(35) இளவேனில் - முதுவேனில்
(36) இளையோர் - முதியோர்
(37) இறத்தல் - பிறத்தல்
(38) இறப்பு - பிறப்பு
(39) இறுக்கம் - தளர்வு
(40) இனியது - இன்னாதது
(41) இன்கண் - புன்கண்
(42) இன்சொல் - வன்சொல்
(43) இன்பம் - துன்பம்
(44) இன்மை - உண்மை
(45) இன்னார் - இனியார்

பரிபாடல்-2


சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஐந்தாவதாகிய
பரிபாடல்
கடைச் சங்கத்துப் புலவர்கள் அருளியச் செய்த
பரிபாடல்கள் எழுபது எனத் தெரிந்தாலும் நமக்கும்
கிடைத்துள்ளவை 22 முழுப்பாடல்களும், பழைய
உரைகளிலிருந்தும் புறத்திரட்டுத் தொகை நூலிலி
ருந்தும் இரண்டு பாடல்களும், சில பாடல்களின்
உறுப்புக்கலுமேயாகும். இவ்விருபத்திரண்டனுள்,
திருமாலுக்குரியவை ஆறு (1, 2, 3, 4, 13, 15),
முருகனுக்குரியவை எட்டு(5, 8, 9, 14, 17, 18, 19, 21),
வையைக்குரியவை எட்டு (6, 7, 10, 11, 12, 16, 20, 22).
 இவற்றின் பின்னே உள்ள பகுதிகளுள்
திருமாலுக்குரிய முழுப்பாடல் ஒன்று;
வையைக்குரிய முழுப்பாடல் ஒன்று;
உறுப்பு ஒன்று; மதுரைக்குரிய உறுப்புகள் ஏழு;
சில உறுப்புகள் இன்ன வகையைச் சார்ந்தன
வென்று விளங்கவில்லை. எட்டுத்தொகை
நூல்களுள் இஃதொன்றே இசை நூலாகும்.
இந்நூலைத் தொகுத்தார் தொகுப்பித்தார் பற்றித்
 தெரியவில்லை. பரிபாடலின் சிற்றெல்லை
25 அடி என்றும், பேரெல்லை 400 அடி என்றும்
தொல்காப்பியர் வரையறுத்துள்ளார். ஒவ்வொரு
பாடலின் முடிவிலும் துறை, இயற்றிய ஆசிரியர்
பெயர், இசை வகுத்தோர் பெயர், பண்ணின் பெயர்
 பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆனால்முதல்
பாடலுக்கும் 22ஆம் பாடலுக்கும் இக்குறிப்புகள்
தெளிவாக இல்லை. மேலும் முதல் பாடலில் 14
முதல் 28ஆம் வரி வரை உள்ள பகுதி தெளிவின்றி
உள்ளது.

வியாழன், 27 அக்டோபர், 2011

அகநானுறு-6


கடவுள் வாழ்த்து

கார் விரி கொன்றைப் பொன் நேர் புது மலர்த்
தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்;
மார்பினஃதே மை இல் நுண் ஞாண்;
நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டு,
கையது கணிச்சியொடு மழுவே; மூவாய்
5 வேலும் உண்டு, அத் தோலா தோற்கே;
ஊர்ந்தது ஏறே; சேர்ந்தோள் உமையே
செவ் வான் அன்ன மேனி, அவ் வான்
இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று,
எரி அகைந்தன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை,
10 முதிராத் திங்களொடு சுடரும் சென்னி,
மூவா அமரரும் முனிவரும் பிறரும்
யாவரும் அறியாத் தொல் முறை மரபின்,
வரி கிளர் வயமான் உரிவை தைஇய,
யாழ் கெழு மணி மிடற்று, அந்தணன்
15 தா இல் தாள் நிழல் தவிர்ந்தன்றால், உலகே.

பாரதம் பாடிய பெருந்தேவனார்

ஒத்தகருத்துச் சொற்கள் -ஔ


(01)ஔடதம் - மருந்து 
(02)ஔதாரியம் - மிகுகொடை 
(03)ஔவியம் - பொறாமை 
(04)ஔவை -தாய் 
(05)ஔவை - ஔவையார் 
(06)ஔனம் - மிளகுரசம் 
(07)ஔனம் - காயரசம் 

உலக நீதி - 9

4
குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்
     கொலை களவு செய்வாரோடு இணங்க வேண்டாம்
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்
     கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்
கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்
     கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்
மற்று நிகர் இல்லாத வள்ளி பங்கன்
     மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே!

சிற்றிலக்கியம் 11

உலாவைக் காணப் பெண்கள் வருதல்

    பாட்டுடைத் தலைவன் உலா வருகின்றான். அதைக் காண ஏழு பருவப் பெண்கள் வருவதாகக் காட்டப்படும். ஏழு பருவப் பெண்கள் பற்றிப் பின்னர்க் காணலாம்.
    உலா வரும் தலைவனைக் கண்ட பெண்கள் அவன் அழகில் மயங்குகின்றனர். காதல் கொள்கின்றனர். அவன் யாராக இருக்கும் என ஐயம் கொள்கின்றனர். இறுதியில் தலைவன் இவன் தான் என்று உறுதி கொள்கின்றனர்.



சங்க காலப் பொருளாதாரம்

வேளாண்மை முக்கியத் தொழில் ஆகும். நெல் முக்கியப் பயிர் கேழ்வரகு, கரும்பு, பருத்தி, மிளகு, இஞ்சி, மஞ்சள், இலவங்கம், பல்வேறு பழவகைகள் போன்றவையும் பயிரிடப்பட்டன. பலா, மிளகு இரண்டுக்கும் சேர நாடு புகழ் பெற்றதாகும். சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் நெல் முக்கிய பயிராகும்.


மூதுரை-23


எழுதியவா றேகாண இரங்கு மடநெஞ்சே
கருதியவா றாமே கருமம் - கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை.                       



ஒத்தகருத்துச் சொற்கள்-ஓ

(01)ஓகை - மகிழ்ச்சி
(02)ஓசி - இரவல்
(03)ஓசி - இலவசம்
(04)ஓசீவனம் - பிழைப்பு
(05)ஒச்சு - செழுத்து

(06)ஓடம் - தோணி
(07)ஓடை - சிறு குளம்
(08)ஓதல் - படித்தல்
(09)ஓதி - கூந்தல்
(10)ஓம்படை - பாதுகாப்பு
(11)ஓம்படை - கையடை
(12)ஒய்வு - தளர்வு
(13)ஓரி - கிழநரி
(14)ஓரை - நேரம்
(15)ஓர்ப்பு - செயலாற்றும் துணிவு
(16)ஓர்மம் - மனத்திடம் 

(17)ஓலக்கம் - சபாமண்டபம்

உலகநீதி -8


3
மனம்போன போக்கு எல்லாம் போக வேண்டாம்
     மாற்றானை உறவு என்று நம்ப வேண்டாம்
தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்
     தருமத்தை ஒரு நாளும் மறக்க வேண்டாம்
சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம்
     சினந்து இருந்தார் வாசல் வழிச் சேரல் வேண்டாம்
வனம் தேடும் குறவருடை வள்ளி பங்கன்
     மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே!


திருமுருகாற்றுப்படை -16




தனிப் பாடல்கள்

1
குன்றம் எறிந்தாய்! குரைகடலில் சூர் தடிந்தாய்!
புன் தலைய பூதப் பொரு படையாய்! - என்றும்
இளையாய்! அழகியாய்! ஏறு ஊர்ந்தான் ஏறே!
உளையாய்! என் உள்ளத்து உறை.

 2
குன்றம் எறிந்ததுவும், குன்றப் போர் செய்ததுவும்,
அன்று அங்கு அமரர் இடர் தீர்த்ததுவும், -இன்று என்னைக்
கைவிடா நின்றதுவும், கற்பொதும்பில் காத்ததுவும்,
மெய் விடா வீரன் கை வேல்!

3
வீர வேல், தாரை வேல், விண்ணோர் சிறை மீட்ட
தீர வேல், செவ்வேள் திருக் கை வேல், - வாரி
குளித்த வேல், கொற்ற வேல், சூர் மார்பும் குன்றும்
துளைத்த வேல் உண்டே துணை.

 4
இன்னம் ஒரு கால், எனது இடும்பைக் குன்றுக்கும்,
கொல் நவில் வேல் சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்
பனி வேய் நெடுங் குன்றம் பட்டு உருவத் தொட்ட
தனி வேலை வாங்கத் தகும்.

 5
உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்;
பின்னை ஒருவரை யான் பின்செல்லேன்-பன்னிரு கைக்
கோலப்பா! வானோர் கொடிய வினை தீர்த்தருளும்
வேலப்பா! செந்தில் வாழ்வே!

 6
அஞ்சும் முகம் தோன்றின், ஆறுமுகம் தோன்றும்;
வெஞ் சமரில், அஞ்சல் என வேல் தோன்றும்; -நெஞ்சில்
ஒரு கால் நினைக்கின், இரு காலும் தோன்றும்
முருகா! என்று ஓதுவார் முன்.

7
முருகனே! செந்தி முதல்வனே! மாயோன்
மருகனே! ஈசன் மகனே! - ஒரு கை முகன்
தம்பியே! நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன், நான்.

8
காக்கக் கடவிய நீ காவாது இருந்தக்கால்,
ஆர்க்குப் பரம் ஆம் அறுமுகவா! - பூக்கும்
கடம்பா! முருகா! கதிர் வேலா! நல்ல
இடம்காண்; இரங்காய், இனி!

 9
பரங்குன்றில் பன்னிரு கைக் கோமான்தன் பாதம்
கரம் கூப்பி, கண் குளிரக் கண்டு, -சுருங்காமல்,
ஆசையால், நெஞ்சே! அணி முருகு ஆற்றுப்படையைப்
பூசையாக் கொண்டே புகல்.

 10
நக்கீரர்தாம் உரைத்த நல் முருகு ஆற்றுப்படையை
தற்கோல, நாள்தோறும் சாற்றினால், - முன் கோல
மா முருகன் வந்து, மனக் கவலை தீர்த்தருளி,
தான் நினைத்த எல்லாம் தரும்.

நுண்கலைகள்

கவிதை, இசை, நாட்டியம் போன்ற நுண்கலைகள் சங்ககாலத்தில் புகழ்பெற்று விளங்கின. அரசர்கள், குறுநில மன்னர்கள், உயர்குடியினர் போன்றோர் புலவர்களுக்கு தாராளமாக பரிசுப் பொருட்களை வழங்கி ஆதரித்தனர். பாணர், விறலியர் போன்ற நாடோடிப் பாடகர்கள் அரசவைகளை மொய்த்த வண்ணம் இருந்தனர். நாட்டுப்புற பாடல்களிலும் நாட்டுப்புற நடனங்களிலும் தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் சங்க காலத்தில் வாழ்ந்தனர். இசையும் நடனமும் நன்கு வளர்ச்சி பெற்றிருந்தது. சங்க இலங்கியங்களில் பல்வேறு வகையிலான யாழ்களும் முரசுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. கணிகையர் நடனத்தில் சிறந்து விளங்கினர். ‘கூத்து’ மக்களின் சிறந்த பொழுதுபோக்காக திகழ்ந்தது.


சிற்றிலக்கியம் 10

பாட்டுடைத் தலைவன் உலா வருதல்
 சில குறவஞ்சி நூல்களில் பாட்டுடைத் தலைவன் உலா வரும் செய்தி இடம் பெறுகின்றது. இப்பகுதியில் பாட்டுடைத் தலைவனின் தோற்றம், பண்பு நலன்கள், பெருமைகள், உலாவில் உடன் வருவோர்கள் என்பன விளக்கமாக வருணிக்கப்படும்.



மூதுரை-22


இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்                  



உலக நீதி - 5

(4 ) நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்லவேண்டாம்.
    
       கருத்து
   
     தெரிந்து கொண்டே பொய் சொல்ல கூடாது.

புதன், 26 அக்டோபர், 2011

திருக்குறள் அதிகாரம் - 1 -7


கடவுள் வாழ்த்து - 7

(7 )
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது 

கருத்து 


தனக்கு நிகர் இல்லாத இறைவனின் அடிகளை இடை 
விடாமல் நினைப்பவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு
மனக்கவலையை நீக்குதல் இயலாது

செவ்வாய், 25 அக்டோபர், 2011

உலகநீதி -7

2
நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்
நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்
மஞ்சாரும் குறவருடை வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே!

அகநானுறு-5


எட்டுத் தொகை நூல்களுள் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய ஐந்தும் அகம் பற்றியன. இவற்றுள் அகம் என்னும் சொல்லால் குறிக்கப்படுவது அகநானூறு மட்டுமே. அகத் த்தொகையுள் நீண்ட பாடல்களைக் கொண்டமையால் இதனை, 'நெடுந்தொகை' என்றும் கூறுவர்.

கடவுள் வாழ்த்துச் செய்யுளைத் தவிர்த்து இந்நூலில் 400 பாடல்கள் உள்ளன. இவை களிற்றியானை நிரை(1-120), மணி மிடை பவளம் (121-300), நித்திலக் கோவை (301-400) என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதுவல்லாமல் பாடல்கள் அனைத்தும் தக்கதொரு நியமத்தைக் கொண்டமைந்துள்ளன. ஒற்றைப்பட எண்ணாலான பாடல்கள் 200-ம் பாலைத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 2,8 எனப்படுபவை 80-ம் குறிஞ்சித் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 4 எனப்படுபவை 40-ம் முல்லைத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைபட எண்களில் 5 எனப்படுபவை 40-ம் மருதத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 10 எனப்படுபவை 40-ம் நெய்தல் திணையைச் சேர்ந்தவை.

இத் தொகையைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர். இதனைத் தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார். இத் தொகை பாடிய புலவர்கள் நூற்று நாற்பத்தைவர். அகநானூற்றுப் புலவர்கள் 146 பேர். அவர்களுள் 65 பேர் அகநானூற்றில் மட்டுமே பாடல் பாடியுள்ளார்கள். நாடாள்வோர், அந்தணர், இடையர், எயினர், பொற்கொல்லர், வணிகர், வேளாளர் எனப் பல தரப்பினர் புலவர்களாக இருந்த செய்தி அவர் தம் பெயர்களின் முன்னால் அமையும் அடைமொழிகளால் தெரிகிறது. மூன்று பாடல்களின் (114, 117, 165) ஆசிரியர் பெயர் காணப் பெறவில்லை

மகளிர் நிலை

சங்க காலத்தில் மகளிர் நிலை குறித்து அறிந்து கொள்ள சங்க இலக்கியங்களில் ஏராளமான தகவல்கள் உள்ளன. அவ்வையார், நச்செள்ளையார், காக்கைபாடினியார் போன்ற பெண் புலவர்கள் இக்காலத்தில் வாழ்ந்து தமிழ் இலக்கியத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். மகளிரின் வீரம் குறித்து பல்வேறு பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. கற்பு பெண்களின் தலையாய விழுமியமாகப் போற்றப்பட்டது. காதல் திருமணம் சாதாரணமாக வழக்கத்திலிருந்தது. பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை தெரிவு செய்யும் உரிமையைப் பெற்றிருந்தனர். இருப்பினும், கைம்பெண்களின் நிலை மிகவும் பரிதாபமாக இருந்தது. சமுதாயத்தின் மேல்மட்டத்தில் ‘சதி’ என்ற உடன்கட்டையேறும் வழக்கம் பின்பற்றப்பட்டது. அரசர்களும், உயர்குடியினரும் நாட்டிய மகளிரை ஆதரித்துப் போற்றினர்.

சிற்றிலக்கியம். 9

பாயிரம்
கடவுள் வணக்கம்
நூல் இனிதாக நிறைவடையும்படி ஆசிரியர் கடவுளை வேண்டி வணங்கும் பகுதி ஆகும்.
 
தோடகம் என்பது வடமொழிச் சொல். இதன் பொருள் நாடகச் சிறப்புப் பாயிரத்தின் முதல் பாடல் என்பது ஆகும். இது தான் தோடையம் என்று குறவஞ்சி நூல்களில் சுட்டப்படுகின்றது.

அடுத்து, நூலைப் படிப்பதால் ஏற்படும் பயன்களை நூல் பயன் என்ற பகுதி குறிப்பிடும்.

நூலில் காணப்படும் குற்றம் குறைகளைப் பொறுத்து இந்த நூலைப் படிப்பவர்கள் நூலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஆசிரியர் வேண்டுவதாக அவை அடக்கம் என்ற பகுதி அமையும்.

திருமுருகாற்றுப்படை -15

ஆசினி முது சுளை கலாவ, மீமிசை
நாக நறு மலர் உதிர, யூகமொடு
மா முக முசுக்கலை பனிப்ப, பூ நுதல்
இரும் பிடி குளிர்ப்ப வீசி, பெருங் களிற்று
முத்துடை வான் கோடு தழீஇ, தத்துற்று 305

நன் பொன் மணி நிறம் கிளர, பொன் கொழியா,
வாழை முழு முதல் துமிய, தாழை
இளநீர் விழுக் குலை உதிர, தாக்கி,
கறிக் கொடிக் கருந் துணர் சாய, பொறிப் புற
மட நடை மஞ்ஞை பலவுடன் வெரீஇ, 310

கோழி வயப் பெடை இரிய, கேழலொடு
இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன
குரூஉ மயிர் யாக்கைக் குடா வடி உளியம்
பெருங் கல் விடர்அளைச் செறிய, கருங் கோட்டு
ஆமா நல் ஏறு சிலைப்ப, சேண் நின்று 315

இழுமென இழிதரும் அருவி,
பழம் முதிர் சோலைமலை கிழவோனே!

மூதுரை-21


உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு



மூதுரை-6


அட்டாலும் பால் சுவையில் குன்றா(து) அளவளவாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்  

சிற்றிலக்கியம் 8

 அமைப்பு
இனி, குறவஞ்சி இலக்கிய வகையின் அமைப்பையும் அதில் இடம்பெறும் செய்திகளையும் சுருக்கமாகக் காணலாம்.


பாயிரம்
    குறவஞ்சி நூல்களின் தொடக்கத்தில் காணப்படும் பகுதி பாயிரம் ஆகும். இப்பாயிரப் பகுதியில்,
1) கடவுள் வணக்கம்
2) தோடையம்
3) நூல் பயன்
4) அவையடக்கம்
என்பன காணப்படும்.
    

நன்னெறி-4

21
எழுத்து அறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும்
எழுத்து அறிவார்க் காணின் இலையாம்-எழுத்து அறிவார்
ஆயும் கடவுள் அவிர் சடைமுன் கண்ட அளவில்
வீயும் சுரநீர் மிகை.

 22
ஆக்கும் அறிவான் அலது பிறப்பினால்
மீக்கொள் உயர்வு இழிவு வேண்டற்க-நீக்கு
பவர் யார்? அரவின் பருமணி கண்டு என்றும்
கவரார் கடலின் கடு.

23
பகர்ச்சி மடவார் பயில நோன்பு ஆற்றல்
திகழ்ச்சி தரு நெஞ்சத் திட்பம் - நெகிழ்ச்சி
பெறும் பூரிக்கின்ற முலைப் பேதாய்! பல்கால்
எறும்பு ஊரக் கல் குழியுமே!

24
உண்டு குணம் இங்கு ஒருவர்க்கு எனினும் கீழ்
கொண்டு புகல்வது அவர் குற்றமே - வண்டு மலர்ச்
சேக்கை விரும்பும் செழும் பொழில்வாய் வேம்பு அன்றோ
காக்கை விரும்பும் கனி.

25
கல்லா அறிவிற் கயவர்பால் கற்று உணர்ந்த
நல்லார் தமது கனம் நண்ணாரே - வில்லார்
கணையிற் பொலியும் கருங்கண்ணாய்! நொய்தாம்
புனையில் புகும் ஒண் பொருள்.

26
உடலின் சிறுமை கண்டு ஒண் புலவர் கல்விக்
கடலின் பெருமை கடவார்-மடவரால்
கண் அளவாய் நின்றதோ காணும் கதிர் ஒளிதான்
விண் அளவாயிற்றோ விளம்பு.

27
கைம்மாறு உகவாமல் கற்று அறிந்தோர் மெய் வருந்தித்
தம்மால் இயல் உதவி தாம் செய்வர் - அம்மா
முளைக்கும் எயிறு முதிர் சுவை நாவிற்கு
விளைக்கும் வலியன தாம் மென்று.

28
முனிவினும் நல்குவர் மூதறிஞர் உள்ளம்
கனிவினும் நல்கார் கயவர் - நனி விளைவில்
காயினும் ஆகும் கதலிதான் எட்டி பழுத்து
ஆயினும் ஆமோ அறை.

29
உடற்கு வரும் இடர்நெஞ்சு ஓங்குபரத்து உற்றோர்
அடுக்கும் ஒரு கோடியாக - நடுக்கமுறார்
பண்ணிற் புகலும் பனிமொழியாய் அஞ்சுமோ
மண்ணிற் புலியை மதிமான்.

30
கொள்ளும் கொடும் கூற்றம் கொள்வான் குறுகுதல் முன்
உள்ளங் கனிந்து அறம் செய்து உய்கவே - வெள்ளம்!
வருவதற்கு முன்னர் அணை கோலி வையார்
பெருகுதற் கண் என் செய்வார் பேசு.

கலித்தொகை - 5

சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ அருளிய
பாலைக் கலி


2

தொடங்கற்கண் தோன்றிய முதியவன் முதலாக,
அடங்காதார் மிடல் சாய, அமரர் வந்து இரத்தலின்,
மடங்கல் போல், சினைஇ, மாயம் செய் அவுணரைக்
கடந்து அடு முன்பொடு, முக்கண்ணான் மூஎயிலும்
உடன்றக்கால், முகம் போல ஒண் கதிர் தெறுதலின், 5
சீறு அருங் கணிச்சியோன் சினவலின் அவ் எயில்
ஏறு பெற்று உதிர்வன போல், வரை பிளந்து, இயங்குநர்
ஆறு கெட விலங்கிய அழல் அவிர் ஆர் இடை-
மறப்பு அருங் காதல் இவள் ஈண்டு ஒழிய,
இறப்பத் துணிந்தனிர், கேண்மின் மற்றைஇய! 10
தொலைவு ஆகி, இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என,
மலை இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ
நிலைஇய கற்பினாள், நீ நீப்பின் வாழாதாள்,
முலை ஆகம் பிரியாமை பொருளாயின் அல்லதை;
இல் என, இரந்தார்க்கு ஒன்று ஈயாமை இழிவு என, 15
கல் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ-
தொல் இயல் வழாஅமைத் துணை எனப் புணர்ந்தவள்
புல் ஆகம் பிரியாமை பொருளாயின் அல்லதை;
இடன் இன்றி, இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என,
கடன் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ- 20
வடமீன் போல் தொழுது ஏத்த வயங்கிய கற்பினாள்
தட மென் தோள் பிரியாமை பொருளாயின் அல்லதை;
என, இவள்
புன் கண் கொண்டு இனையவும், பொருள்வயின் அகறல்
அன்பு அன்று, என்று யான் கூற, அன்புற்று, 25
காழ் வரை நில்லாக் கடுங் களிற்று ஒருத்தல்
யாழ் வரைத் தங்கியாங்குத், தாழ்பு, நின்
தொல் கவின் தொலைதல் அஞ்சி, என்
சொல் வரைத் தங்கினர், காதலோரே.

சமயம்

சங்க காலத்தின் முதன்மைக் கடவுள் முருகன் அல்லது சேயோன் தமிழ்க்கடவுள் என அவர் போற்றப்பட்டார். முருக வழிபாடு தொன்மை வாய்ந்தது. முருகன் தொடர்பான விழாக்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அறுபடை வீடுகள் அவனுக்கே உரித்தானவை. மாயோன் (விஷ்ணு), வேந்தன் (இந்திரன்), வருணன், கொற்றவை போன்ற கடவுள்களையும் சங்க காலத்தில் வழிபட்டனர். வீரக்கல் அல்லது நடுகல் வழிபாடு சங்க காலத்தில் முக்கியத்துவம் பெற்று விளங்கியது. போர்க்களத்தில் வீரனது ஆற்றலையும் தியாகத்தையும் போற்றும் வகையில் அனவது நினைவாக வீரக்கல் நடப்பட்டடது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மறைந்த வீரர்கள் பற்றிய குறிப்புகள் அடங்கிய வீரக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இத்தகைய நீத்தோர் வழிபாடு மிகவும் தொன்மையானதாகும்.


மூதுரை-20


ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி - தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்
விதியின் பயனே பயன்.                    



எதிர்கருத்துச் சொற்கள் -ஈ

(1)ஈகை -ஏற்கை
(2)ஈடுபாடு - முரண்பாடு
(3)ஈடேற்றம் - வீழ்ச்சி
(4)ஈதல் - ஏற்றல்
(5)ஈவார் - ஈயார்
(6)ஈரம் - வரட்சி
(7)ஈரம் - உலர்வு

திங்கள், 24 அக்டோபர், 2011

தமிழ் எழுத்துக்கள்- 6

சார்பு எழுத்து
முதல் எழுத்துகளைச் சார்ந்து வருபவை சார்பு 
எழுத்துகள் எனப்படுகின்றன. உயிர்மெய், ஆய்தம்,
 உயிரளபெடை,ஒற்றளபெடை, குற்றியலுகரம். 
குற்றியலிகரம்ஐகாரக்குறுக்கம்,ஒளகாரக்குறுக்கம், 
மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் ஆகியபத்தும் 
சார்பு எழுத்துகள் ஆகும்.
மாத்திரை 
எழுத்துகள் ஒலிக்கும் நேரத்தை மாத்திரை 
என்று கூறுவர்.எந்த எந்த எழுத்துகள் எவ்வளவு 
நேரம் ஒலிக்கும் என்பதைத் தெளிவாக வரைய
றத்து இலக்கணநூல்கள் கூறுகின்றன ஒரு
எழுத்தை உச்சரிக்கும் காலஅளவை அதாவது
எழுத்தைஉச்சரிக்கும் நேரத்தை "இயல்பு எழும்
மாந்தர் இமைஒருமாத்திரை அல்லது நொடி
மாத்திரை" ஆகும் என இலக்கணநூல்கள் கூறு
கின்றன.அதாவது ஒருமாத்திரை என்பது சராசரி
மனிதனின் கண் இமைக்கும் காலம் அல்லது
விரல் நொடிக்க எடுக்கும் காலம் ஆகும்

மொழி
மற்ற உயிரினங்களிலிருந்து மனிதனைப் 
பிரித்துக் காட்டுவது மொழி. மொழி சொற்
களால் உருவாகிறது. சொல், எழுத்துகளின்
சேர்க்கை. எழுத்தின் அடிப்படை ஒலி. மனித 
உடலில் இருந்துஒலி எப்படித் தோன்றுகிறது 
என்பதைத்தமிழ் இலக்கண நூல்கள் விளக்கு
கின்றன. மொழியின் அடிப்படை ஒலி என்பதா
ல் ஒவ்வோர் எழுத்தும் எப்படிப் பிறக்கின்றன
என்பது பற்றியும்இலக்கண நூல்களில்கூறப்
பட்டுள்ளது. மூக்கு உதடு பல் நாக்கு அண்ணம் 
ஆகிய உறுப்புகளின் செயல்பாட்டால யிர் 
எழுத்துகளும்,மெய் ழுத்துகளும் எவ்வாறு 
தோன்றுகின்றன என்றுஇலக்கண நூல்கள் 
துல்லியமாகக் கூறுகின்றன.தமிழில் எல்லா 
எழுத்துகளும் சொல்லுக்கு முதலில் வருவ
தில்லை. சொல்லின் முதல் எழுத்தாக வரக்
கூடியஎழுத்துகள் இவை என்று வரையறை 
செய்யப்பட்டுள்ளது.அது போலவே சொல்லு
க்கு இறுதியில் வரக்கூடிய எழுத்துகள்பற்றி
யும் வரையறை செய்யப்பட்டுள்ளது. சொல்
லுக்கு இடையில்ஒரு மெய் எழுத்துக்கு 
அடுத்து எந்த மெய் எழுத்து வரும் என்ற 
வரையறையும் தரப்பட்டுள்ளது.

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

திருமுருகாற்றுப்படை -14

கருதி வந்ததை மொழிதல்

நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின்,
நின் அடி உள்ளி வந்தனென்; நின்னொடு
புரையுநர் இல்லாப் புலமையோய்! எனக் 280


குறித்தது மொழியா அளவையின்



சேவிப்போர் கூற்று

குறித்து உடன்
வேறு பல் உருவின் குறும் பல் கூளியர்,
சாறு அயர் களத்து வீறு பெறத் தோன்றி,
அளியன் தானே முது வாய் இரவலன்;
வந்தோன், பெரும! நின் வண் புகழ் நயந்து என 285


இனியவும் நல்லவும் நனி பல ஏத்தி;


முருகன் அருள்புரிதல்

தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின்,
வான் தோய் நிவப்பின், தான் வந்து எய்தி,
அணங்கு சால் உயர்நிலை தழீஇ, பண்டைத் தன்
மணம் கமழ் தெய்வத்து இள நலம் காட்டி, 290

அஞ்சல் ஓம்புதி, அறிவல் நின் வரவு என,
அன்புடை நன் மொழி அளைஇ, விளிவு இன்று,
இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து
ஒரு நீ ஆகித் தோன்ற, விழுமிய
பெறல் அரும் பரிசில் நல்குமதி பலவுடன் 295


அருவியின் காட்சியும் இயற்கை வளமும்

வேறு பல் துகிலின் நுடங்கி, அகில் சுமந்து,
ஆர முழு முதல் உருட்டி, வேரல்
பூவுடை அலங்கு சினை புலம்ப, வேர் கீண்டு,
விண் பொரு நெடு வரைப் பரிதியின் தொடுத்த
தண் கமழ் அலர் இறால் சிதைய, நன் பல 300

சங்க கால சமூகம்

ஐந்து வகை நிலப்பிரிவுகள் பற்றி தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
- குறிஞ்சி, மலையும் மலைசார்ந்த பகுதி
- முல்லை, மேய்ச்சல் காடுகள்
- மருதம், வேளாண் நிலங்கள்
- நெய்தல், கடற்கரைப் பகுதி
- பாலை, வறண்ட பூமி
இந்த நிலங்களில் வாழ்ந்த மக்கள் தத்தம் கடவுளர்களையும் தொழில்களையும் பெற்றிருந்தனர்.
1. குறிஞ்சி – முதன்மைக் கடவுள் முருகன் (தொழில்: வேட்டையாடுதல், தேன் எடுத்தல்)
2. முல்லை – முதன்மைக் கடவுள் மாயோன் (விஷ்ணு) (தொழில்: ஆடு, மாடு வளர்ப்பு, பால் பொருட்கள் உற்பத்தி)
3. மருதம் – முதன்மைக்கடவுள் – இந்திரன் ( தொழில்: வேளாண்மை)
4. நெய்தல் – முதன்மைக்கடவுள் – வருணன் (தொழில்: மீன் பிடித்தல், உப்பு உற்பத்தி)
5. பாலை – முதன்மைக் கடவுள் – கொற்றவை (தொழில்: கொள்ளையடித்தல்)
நான்கு வகை சாதிகள் – அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் – குறித்து தொல்காப்பியம் கூறுகிறது. ஆளும் வர்க்கத்தினர் அரசர் என்றழைக்பட்டனர். சங்க கால அரசியல் மற்றும் சமய வாழ்க்கையில் அந்தணர் முக்கிய பங்கு வகித்தனர். வணிகர்கள் வணிகத் தொழிலில் ஈடுபட்டனர். வேளாளர்கள் பயிர்த் தொழில் செய்தனர். பழங்குடி இனத்தவர்களான பரதவர், பாணர், எயினர், கடம்பர், மறவர், புலையர் போன்றோரும் சங்க கால சமுதாயத்தில் அங்கம் வகித்தனர். பண்டையக்கால தொல்பழங்குடிகளான தோடர்கள், இருளர்கள், நாகர்கள், வேடர்கள் போன்றோரும் இக்காலத்தில் வாழ்ந்தனர்.


சிற்றிலக்கியம் 7

குறத்தியின் பெயரால் பெயர் பெறுதல்
சில நூல்கள் குறத்தியின் பெயரால் பெயர் பெற்றுள்ளதையும் அறிய முடிகின்றது. எடுத்துக்காட்டாகத்
துரோபதைக் குறவஞ்சியைக் கூறலாம். இந்த நூலில் இடம்பெறும் குறத்தியின் பெயர் துரோபதை ஆகும்.


 தோற்றம்

    பிற சிற்றிலக்கிய வகைகளைப் போலவே குறவஞ்சி இலக்கிய வகைக்கும் உரிய கருக்கள் தொல்காப்பியத்திலும் பிற இலக்கியங்களிலும் காணப்படுகின்றன.
    தலைவி தலைவன் ஒருவனைக் காதலிக்கின்றாள். அவர்களுக்கு இடையே பிரிவு ஏற்படுகின்றது. தலைவனைக் காணாததால் தலைவி மனம் வருந்துகின்றாள். உடலும் உள்ளமும் வாடிக் காணப்படுகின்றாள். தலைவியின் இந்த நிலையைச் செவிலித்தாயும் நற்றாயும் காண்கின்றனர். தலைவியின் இந்த நிலைக்கு உரிய காரணத்தை அறிய, கட்டு, கழங்கு, வெறியாடல் ஆகியன மூலம் குறிபார்க்கின்றனர். கட்டு என்பது முறத்தில் நெல்லைப் பரப்பி வைத்து, அந்த நெல்லை எண்ணிக் குறிபார்ப்பது ஆகும். தலைவியின் நோய்க்குக் காரணம் என்ன என்று அறிவதற்காக வேலன் குறிபார்ப்பது கழங்கு ஆகும்.

    சங்க இலக்கியத்திலும் குறிபார்த்தல் பற்றிய செய்திகள் இடம்பெறக் காணலாம். 
 பெருங்கதைக் 
காப்பியத்திலும் குறி சொல்லும் நிகழ்ச்சி இடம்பெறக் காணலாம். (உஞ்சைக் காண்டம், பாடல்கள் 235-238)

    பக்தி இலக்கியத்தில், திருவாய்மொழியில் நம்மாழ்வார் குறிபார்க்கும் பெண்ணைக் கட்டுவிச்சி என்கிறார். (பாடல் 6:3) சிறிய திருமடலிலும்குறிபார்க்கும் மரபு காட்டப்படுகின்றது.

    இவ்வாறு, இலக்கியம், இலக்கியக் கருக்களிலிருந்து குறவஞ்சி என்ற இலக்கிய வகையானது. கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றியது. இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட குறவஞ்சி நூல்கள் உள்ளன எனக் கூறப்படுகின்றது.

மூதுரை-19


சீரியர் கெட்டாலும் சீரியரே சீரியர் மற்(று)
அல்லாதார் கெட்டால் அங் கென்னாகும்? - சீரிய
பொன்னின் குடம்உடைந்தால் பொன்னாகும் என்னாகும்
மண்ணின் குடம் உடைந்தக் கால்             



ஒத்தகருத்துச் சொற்கள் - ஒ


(01)ஒக்கல - சுற்றம்
(02)ஒட்பம் - அழகு
(03)ஒட்பம் - நுண்ணறிவு
(04)ஒடுங்கல் - அடங்கல்
(05)ஒண்ணாமை - இயலாமை
(06)ஒதுக்கிடம் - மறைவிடம்
(07)ஒத்தாசை - உதவி
(08)ஒப்படை - ஒப்புக்கொடுத்தல்
(09)ஒப்பந்தம் - உடன்படிக்கை 

(10)ஒப்பம் - கையொப்பம்
(11)ஒப்பனை - அலங்காரம்
(12)ஒப்புவமை - சமானம்
(13)ஒப்புரவு - உலக ஒழுக்கம்
(14)ஒய்யாரம் - ஆடம்பரம்
(15)ஒய்யாரம் - உல்லாசநடை
(16)ஒருதலை - துணிவு
(17)ஒருமைப்பாடு - ஒற்றுமை
(18)ஒலி - ஓசை
(19)ஒலி - நாதம் 

(20)ஒல்குதல் - மெலிதல்
(21)ஒழிதல் - அழிதல்
(22)ஒழுக்கம் - நன்னடத்தை
(23)ஒளி - அறிவு
(24)ஒளி - வெளிச்சம்
(25)ஒளியவன் - சூரியன்
(26)ஒளிர்வு - பிரகாசம்
(27)ஒள்ளியோன் - அறிஞன்
(28)ஒறுத்தல் - தண்டித்தல்
(29)ஒற்றர் - தூதர் 

(30)ஒற்று - உளவு
(31)ஒற்று - மெய்யெழுத்து
(32)ஒன்றுதல் - சேர்தல்
(33)ஒன்னாமை - பொருந்தாமை

(34)ஒன்று -ஒருமை    
(35)ஒன்று -ஒத்தகருத்து 

உலக நீதி - 6


காப்பு

உலகநீதி புராணத்தை உரைக்கவே
கலைகளாய் வரும் கரிமுகன் காப்பு.

நூல்

1
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே!

ஒத்தகருத்துச் சொற்கள் - ஜ


(01)ஜக்கியம் - ஒற்றுமை
(02)ஜங்கரன் - விநாயகன்
(03)ஜஸ்வரியம் - செல்வம்
(04)ஜயப்பாடு - சந்தேகம்
(05)ஜயம் - பிச்சை
(06)ஜயம் - சந்தேகம்
(07)ஜயன் - தலைவன்
(08)ஜயன் - தந்தை

(09)ஜயுறவு - சந்தேகம்
(10)ஐப்பசி  - மாதம் 
(11)ஐப்பசி - துலாம்,
(12)ஐப்பசி  - துலை

ஒரு பொருள் பல சொற்கள்-அ

(1)அரசன் - கோ
    அரசன் -  கொற்றவன்
    அரசன் -  காவலன்
    அரசன் -  வேந்தன்
    அரசன் -  மன்னன் 
    அரசன் -  ராஜா 
    அரசன் - கோன்


(2)அமைச்சர் - மந்திரர்
    அமைச்சர் -சூழ்வோர்
    அமைச்சர் -நூலோர்
    அமைச்சர் - மந்திரிமார்

(3)அழகு -அணி
    அழகு - வடிவு
    அழகு - வனப்பு
    அழகு - பொலிவு
    அழகு - எழில் 

(4)அடி -கழல் 
    அடி-கால்
    அடி-தாள் 
    அடி-பதம்
    அடி-பாதம்

(5)அணிதல் - அலங்கரித்தல் 
    அணிதல் - சூடுதல்
    அணிதல் - தரித்தல்
    அணிதல் - புனைதல்
    அணிதல் - பூணல் 
    அணிதல் - மிலைதல்

(6)அந்தணர் - பார்ப்பார்
    அந்தணர் -பிராமணர்
    அந்தணர் -பூசகர்
    அந்தணர் -பூசுரர்
    அந்தணர் -மறையவர்
    அந்தணர் -வேதியர்


(7)அக்கினி - நெருப்பு 
    அக்கினி -தழல் 
    அக்கினி -தீ 

(8)அச்சம் - பயம் 
    அச்சம் -பீதி 
    அச்சம் -உட்கு

(9)அடைக்கலம் - சரண்புகுதல் 
     அடைக்கலம் -அபயமடைதல்
     அடைக்கலம்  -கையடை  

(10)அபாயம் - ஆபத்து 
      அபாயம் - இடையூறு 
       அபாயம் - துன்பம்

(11)அரக்கன் - இராக்கதன் 
      அரக்கன் - நிருதன் 
      அரக்கன் - நிசிசரன்


(12)அல்லல் - இன்னல் 
       அல்லல் - துயர் 
      அல்லல் - இடும்பை  

(13)ஆசிரியன் - உபாத்தியாயன் 
      ஆசிரியன் - ஆசான்
      ஆசிரியன் -  தேசிகன் 
      ஆசிரியன் - குரவன்


(14)அரசி -இராணி
       அரசி -தலைவி
       அரசி -இறைவி

(15)அம்பு-கணை
       அம்பு-அஸ்த்திரம் 
       அம்பு-சரம் 
       அம்பு-பாணம் 
       அம்பு-வாளி

(16)அருள்-இரக்கம் 
       அருள்-கருணை 
       அருள்-தயவு 
      அருள்-கிருபை 
      அருள்-அபயம்

(17)அழகு-அணி
      அழகு-வடிவு 
     அழகு-வனப்பு 
     அழகு-பொலிவு 
     அழகு-எழில் 
     அழகு-கவின்

(18)அறிவு - உணர்வு 
      அறிவு - உரம் 
      அறிவு - ஞானம் 
      அறிவு - மதி 
     அறிவு - மேதை 
     அறிவு - விவேகம்

(19)அன்பு - நேசம் 
       அன்பு - ஈரம் 
      அன்பு - நேயம் 
      அன்பு - பரிவு 
      அன்பு - பற்று  
     அன்பு - கருணை

(20) 

சனி, 22 அக்டோபர், 2011

தொடர்மொழிக்குஒருமொழி-1

ஓரு தொடரில் சொல்லவேண்டிய
விடயத்தை ஓரு சொல்லில்பொருள்
விளங்குமாறு கூறுவதையே தொடர்
மொழிக்கு ஓரு மொழி என அழைக்கப்படும்.

கலித்தொகை - 4


1. கடவுள்வாழ்த்து

ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து,
தேறு நீர் சடைக் கரந்து, திரிபுரம் தீ மடுத்து,
கூறாமல் குறித்ததன் மேல் செல்லும் கடுங் கூளி;
மாறாப் போர், மணி மிடற்று, எண் கையாய்! கேள், இனி;
படு பறை பல இயம்பப், பல் உருவம் பெயர்த்து நீ, 5
கொடுகொட்டி ஆடுங்கால், கோடு உயர் அகல் அல்குல்,
கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ?
மண்டு அமர் பல கடந்து, மதுகையால் நீறு அணிந்து,
பண்டரங்கம் ஆடுங்கால், பணை எழில் அணை மென் தோள்,
வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ? 10
கொலை உழுவைத் தோல் அசைஇக், கொன்றைத் தார் சுவல் புரள,
தலை அங்கை கொண்டு, நீ காபாலம் ஆடுங்கால்,
முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளோ?
என வாங்கு;
பாணியும், தூக்கும், சீரும், என்று இவை 15
மாண் இழை அரிவை காப்ப,
வாணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை, ஆடி.

கலித்தொகை - 3


சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவதாகிய

கலித்தொகை

கலித்தொகை மொத்தம் 150 பாடல்களைக் கொண்டதாகும். இவற்றில் முதல் பாடல் கடவுள் வாழ்த்து. பின்னர், பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்ற வரிசையில் ஐந்திணைகளுக்கும் உரிய பாடல்கள் அமைந்துள்ளன. இவை முறையே 35, 29, 35, 17, 33 பாடல்களைக் கொண்டுள்ளன. பெருங்கடுங்கோன் பாலை பாடல்களையும், கபிலர் குறிஞ்சிப் பாடல்களையும், மருதன் இளநாகனார் மருதப் பாடல்களையும், அருஞ்சோழன் நல்லுருத்திரனார் முல்லைப் பாடல்களையும், நல்லந்துவனார் நெய்தல் பாடல்களையும் பாடியதாகப் பாடல் ஒன்று கூறுகிறது. உரையாசிரியராகிய நச்சினார்க்கினியர் குறிப்பிலிருந்து நெய்தற் பகுதியைச் செய்த நல்லந்துவனாரே கடவுள் வாழ்த்துப் பாடலையும் பாடி, இத் தொகையைத் தொகுத்தார் என்று கொள்ளலாம்.


நன்னெறி-3

11
பொய்ப் புலன்கள் ஐந்து நோய் புல்லியர் பால் அன்றியே
மெய்ப்புலவர் தம்பால் விளையாவாம் - துப்பின்
சுழற்றும் கொல் கல்தூணைச் சூறாவளி போய்ச்
சுழற்றும் சிறுபுன் துரும்பு.

12
வருந்தும் உயிர் ஒன்பான் வாயில் உடம்பில்
பொருந்துதல் தானே புதுமை - திருந்திழாய்
சீதநீர் பொள்ளல் சிறு குடத்து நில்லாது
வீதலோ? நிற்றல் வியப்பு.


13
பெருக்கமொடு சுருக்கம் பெற்ற பொருட்கு ஏற்ப
விருப்பமொடு கொடுப்பர் மேலோர் - சுரக்கும்
மலையளவு நின்ற முலை மாதே மதியின்
கலையளவு நின்ற கதிர்.

14
தொலையாப் பெரும் செல்வத் தோற்றத்தோம் என்று
தலையாயவர் செருக்குச் சார்தல் - இலையால்
இரைக்கும் வண்டு ஊதும் மலர் ஈரங்கோதாய் மேரு
வரைக்கும் வந்தன்று வளைவு.

 15
இல்லானுக்கு அன்பு இங்கு இடம் பொருள் ஏவல்மற்று
எல்லாம் இருந்தும் அவற்கு என் செய்யும் நல்லாய்
மொழியிலார்க்கு ஏதுமுது நூல் தெரியும்
விழியிலார்க்கு ஏது விளக்கு.

 16
தம்மையும் தங்கள் தலைமையையும் பார்த்து உயர்ந்தோர்
தம்மை மதியார் தமை அடைந்தோர் - தம்மின்
இழியினும் செல்வர் இடர் தீர்ப்பர் அல்கு
கழியினும் செல்லாதோ கடல்.

17
எந்தை நல்கூர்ந்தான் இரப்பார்க்கு ஈந்து என்றவன்
மைந்தர் தம் ஈகை மறுப்பரோ-பைந்தோடீ!
நின்று பயன் உதவி நிற்பது அரம்பையின் கீழ்
கன்றும் உதவும் கனி.

18
இன்சொலால் அன்றி இருநீர் வியன்உலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே - பொன் செய்
அதிர் வளையாய்! பொங்காது அழல் கதிரால் தண்என்
கதிர் வரவால் பொங்கும் கடல்.

19
நல்லோர் வரவால் நகைமுகம்கொண்டு இன்புறீஇ
அல்லோர் வரவான் அழுங்குவர்- வல்லோர்
திருந்தும் தளிர் காட்டி தென்றல் வரத் தேமா
வருந்தும் சுழற்கால் வர.

20
பெரியவர் தம்நோய் போல் பிறர் நோய் கண்டு உள்ளம்
எரியின் இழுது ஆவர் என்க - தெரி இழாய்
மண்டு பிணியால் வருந்தும் பிற உறுப்பைக்
கண்டு கலுழுமே கண்.

ஆத்திசூடி-4


31. அனந்த லாடேல்.

32. கடிவது மற.

33. காப்பது விரதம்.

34. கிழமைப் படவாழ்.

35. கீழ்மை யகற்று.

36. குணமது கைவிடேல்.

37. கூடிப் பிரியேல்.

38. கெடுப்ப தொழி.

39. கேள்வி முயல்.

40. கைவினை கரவேல்

மூதுரை-18


அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு 

திருமுருகாற்றுப்படை -13

முருகனைக் கண்டு துதித்தல்

ஆண்டு ஆண்டு ஆயினும் ஆக, காண் தக 250

முந்து நீ கண்டுழி முகன் அமர்ந்து ஏத்தி,
கை தொழூஉப் பரவி, கால் உற வணங்கி
நெடும் பெருஞ் சிமையத்து நீலப் பைஞ் சுனை,
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப,
அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ! 255

ஆல் கெழு கடவுள் புதல்வ! மால் வரை
மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!
வெற்றி வெல் போர்க் கொற்றவை சிறுவ!
இழை அணி சிறப்பின் பழையோள் குழவி!
வானோர், வணங்கு வில், தானைத் தலைவ! 260

மாலை மார்ப! நூல் அறி புலவ!
செருவில் ஒருவ! பொரு விறல் மள்ள!
அந்தணர் வெறுக்கை! அறிந்தோர் சொன்மலை!
மங்கையர் கணவ! மைந்தர் ஏறே!
வேல் கெழு தடக் கைச் சால் பெருஞ் செல்வ! 265

குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து,
விண் பொரு நெடு வரைக் குறிஞ்சிக் கிழவ!
பலர் புகழ் நன்மொழிப் புலவர் ஏறே!
அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக!
நசையுநர்க்கு ஆர்த்தும் இசை பேர் ஆள! 270

அலந்தோரக்கு அளிக்கும், பொலம் பூண், சேஎய்!
மண்டு அமர் கடந்த நின் வென்று ஆடு அகலத்து,
பரிசிலர்த் தாங்கும் உரு கெழு நெடு வேஎள்!
பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள்!
சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி! 275

போர் மிகு பொருந! குரிசில்! எனப் பல,
யான் அறி அளவையின், ஏத்தி, ஆனாது

சங்க கால அரசியல்

சங்க காலத்தில் மரபுவழி முடியாட்சி முறையே வழக்கிலிருந்தது. அமைச்சர், அவைப்புலவர், அரசவையோர் போன்றவர்களின் ஆலோசனையை அரசன் கேட்டு நடந்தான். வானவரம்பன், வானவன், குட்டுவன், இரும்பொறை, வில்லவர் போன்ற விருதுப் பெயர்களை சேர மன்னர்கள் சூட்டிக் கொண்டனர். சென்னி, வளவன், கிள்ளி என்பன சோழர்களின் பட்டப் பெயர்களாகும். தென்னவர், மீனவர் என்பவை பாண்டிய மன்னர்களின் விருதுப் பெயர்களாகும். ஒவ்வொரு சங்ககால அரச குலமும் தங்களுக்கேயுரிய அரச சின்னங்களைப் பெற்றிருந்தனர். பாண்டியர்களின் சின்னம் மீன். சோழர்களுக்கு புலி, சேரர்களுக்கு வில், அம்பு. அரசவையில் குறுநிலத் தலைவர்களும் அதிகாரிகளும் வீற்றிருந்தனர். ஆட்சியில் அரசருக்கு உதவியாக பெரும்திரளான அதிகாரிகள் இருந்தனர். அவர்கள் ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்தனர் – அமைச்சர்கள், அந்தணர்கள், படைத்தலைவர்கள், தூதுவர்கள், ஒற்றர்கள். சங்க காலத்தில் படை நிர்வாகம் திறம்பட சீரமைக்கப்பட்டிருந்தது. ஒவ்டிவாரு ஆட்சியாளரும் நிரந்தரப் படையையும், தத்தமக்குரிய கொடிமரத்தையும் கொண்டிருந்தனர்.
அரசின் முக்கிய வருவாய் நிலவரி. அயல்நாட்டு வாணிகத்தின் மீது சுங்கமும் வசூலிக்கப்பட்டடது. புகார் துறைமுகத்தில் நியமிக்கப்பட்டிருந்த சுங்க அதிகாரிகள் பற்றி பட்டினப்பாலை குறிப்பிடுகிறது. போரின்போது கைப்பற்றப்படும் கொள்ளைப் பொருட்கள் அரசுக் கருவூலத்திற்கு முக்கிய வருவாயகத் திகழ்ந்தது. சாலைகளும் பெருவழிகளும் நன்கு பராமரிக்கப்பட்டுவந்தன. கொள்கை மற்றும் கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்காக இரவும் பகலும் அவை கண்காணிக்கப்பட்டன.


#160;