கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

சனி, 31 டிசம்பர், 2011

யசோதர காவியம்-8


தாய் சந்திரமதி நாய், பாம்பு, முதலை, ஆடு, கோழியாகப் பிறக்கிறாள்;

     

யசோதரன் மயில், முள்ளம்பன்றி, மீன்,  

   

வளையாபதி 11

வீபொரு ளானை அகன்று பிறனும் ஓர்
மாபொரு ளான்பக்கம் மாண நயத்தலின்
மேய்புலம் புல்லற மற்றோர் புலம்புகு
மாவும் புரைப மலர் அன்ன கண்ணார்.
59


நுண்பொரு ளானை நுகர்ந்திட்டு வான்பொருள்
நன்குடை யானை நயந்தனர் கோடலின்
வம்புஇள மென்முலை வாள்நெடுங் கண்ணவர்
கொம்பிடை வாழுங் குரங்கும் புரைப.
60


முருக்குஅலர் போல்சிவந்து ஒள்ளிய ரேனும்
பருக்கொடு இல்லவர் பக்கம் நினையார்
அருப்பிள மென்முலை அம்சொல் அவர்தாம்
வரிச்சிறை வண்டின் வகையும் புரைப.
61


மக்கள் பயந்து மனையறம் ஆற்றுதல்
தக்கது அறிந்தார் தலைமைக் குணம் என்ப
பைத்துஅரவு அல்குல் படிற்றுஉரை யாரொடு
துய்த்துக் கழிப்பது தோற்றமொன்று இன்றே.
62


நகைநனி தீது துனிநன்றி யார்க்கும்
பகைநனி தீது பணிந்தீ யாரோடும்
மிகைமிகு பொருள் என்று இறத்தல் இலரே
வகைமிகு வானுலகு எய்திவாழ் பவரே.
63


பெண்டிர் மதியார் பெருங்கிளை தான் அது
கொண்ட விரகர் குறிப்பினின் அஃகுப
வெண்டறை நின்று வெறுக்கை இலராயின்
மண்டினர் போவர்தம் மக்களும் ஒட்டார்.
64


சொல்லவை சொல்லார் சுருங்குபு சூழ்ந்துணர்
நல்லவை யாரும் நன்மதிப் பார் அல்லர்
கல்வியும் கைப்பொருள் இல்லார் பயிற்றிய
புல்லென்று போதலை மெய்யென்று கொள்நீ.
65

பெயர்ச்சொல்லுக்கு உரிய இலக்கணம்


 ஐம்பொறிகளாலும் உள்ளத்தாலும் உணரும் பொருள்களைக் குறிப்பவை பெயர்ச்சொல் என்று . இந்தப் பெயர்ச்சொல்லுக்கு உரிய இலக்கணத்தை இலக்கண நூலோர் குறிப்பிட்டுள்ளனர்.

பெயர்ச்சொல் 

1.இடுகுறிப்பெயராய் வரும்.

2.காரணப்பெயராய் வரும்.

3.காலம் காட்டாது.

4.எட்டு வேற்றுமைகளையும் ஏற்கும்.

5.உயர்திணையாகவும் அஃறிணையாகவும் வரும்.

6.ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் ஆகிய ஐந்து பால்களிலும் வரும்.

7.தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்களிலும் வரும். 

முதுமொழிக் காஞ்சி-8

3. கள் உண்போன் சோர்வு இன்மை பொய்.

கள் உண்போன் - கள்ளைக் குடிப்பவன்
சோர்வு இன்மை - ஒழுக்கங்களில் வழுவாதிருத்தல்

கள் உண்போன் சோர்வு இல்லாமல் இருப்பது அரிது. (கள் உண்பவன் ஒழுக்கத்துடன் இருக்க மாட்டான்.)

4. காலம் அறியாதோன் கையுறல் பொய்.

காலம் - முயற்சி செய்தற்குரிய காலத்தை
அறியாதோன் - அறிந்து முயலாதவன்

காலம் அறியாது செய்யும் செயல் வெற்றி பெறுதல் அரிது. (காலமறிந்து செய்யும் செயல் வெற்றியடையும்.)

5. மேல் வரவு அறியாதோன் தற் காத்தல் பொய்.

மேல்வரவு - எதிர்காலத்தில் வருதலை
தற்காத்தல் - தன்னைத்தான் பாதுகாத்துக் கொள்ளல்

வருவதை அறியாதவன் தற்காப்புடன் வாழ்வது அரிது. (எதிர்காலத்தில் வருவதை அறிபவன் தற்காப்பு உடையவன் ஆவான்.)

6. உறு வினை காய்வோன் உயர்வு வேண்டல் பொய்.

உறுவினை - தக்க செயலை
உயர்வு - மேன்மை

சிறந்த செயல்களைச் செய்யாமல் சோம்பலுடன் இருப்பவனுக்குச் சிறப்பில்லை.

7. சிறுமை நோனாதோன் பெருமை வேண்டல் பொய்.

சிறுமை - சிறியனாயிருக்கும்
நோனாதோன் - பொறாதவன்

அடக்கமில்லாமல் இருப்பவர் பெருமையுடன் வாழ்வது அரிது. (பெருமை வேண்டுபவன் அடக்கத்துடன் இருக்க வேண்டும்.)

8. பெருமை நோனாதோன் சிறுமை வேண்டல் பொய்.

நோனாதான் - பொறாதவன்
சிறுமை வேண்டல் - கீழ்மையை விரும்புதல்

பெருமைச் செருக்கில்லாதவன் இழிந்த இயல்புகளை அடைய மாட்டான்.

9. பொருள் நசை வேட்கையோன் முறை செயல் பொய்.

முறை செயல் - அறநெறிப்படி முறை செயல்
பொய் - இல்லை

பொருட்பற்றுடையவன் நடுவு நிலைமையில் இருக்க இயலாது.

10. வாலியன் அல்லாதோன் தவம் செய்தல் பொய்.

வாலியன் அல்லாதோன் - உள்ளத்தின் கண் தூயனல்லாதவன்

உள்ளத்தில் தூய்மை இல்லாதவன் தவஞ்செய்தல் இயலாது.

உதயண குமார காவியம், -12

சயந்தியின் எல்லைவிட்டுச் சாலவு மகதநாட்டுக்கு
இயைந்துநன் கெழுந்துசென்றே இரவியின் உதய முற்றான்
நயந்தனன் தேவிகாதனன் மனத்தழுங்கிப் பின்னும்
வியந்து நல்லமைச்சர் தேற்றவெங்கடும் கானம் புக்கான்.
151


செத்தநற்தேவி தன்னைத் திருப்பவு மீட்கலாமென்று
அத்திசை முன்னிநல்ல வருவழிப்பட்டுச் செல்ல
அத்தியும் பிணையுமேக வாண்மயிலாடக் கண்டு
வந்தவன் கவிழ்ந்துரைக்கு மனனமை மனையையோர்ந்தே.
152


உதயணன் மகதநாடு அடைதல்


கோட்டுப்பூ நிறைந்திலங்குங் கொடிவகைப் பூவுங்கோலம்
காட்டு நந்தேவியென்று கால்விசைநடவா மன்னன்
காட்டினன் குன்றமேறிக் கானகங்கழிந்து போந்து
சேட்டிளஞ் சிங்க மன்னான் திருநிறைமகதஞ் சேர்ந்தான்.
153


அனைவரும் இராசகிரி நகர பூஞ்சோலையில் தங்குதல்


மருவிய திருவினானம் மகதவர்க் கிறைவனாமம்
தருசகனென்னு மன்னன்றானை வேற்றலைவன் மாரன்
இருந்தினி துறையுமிக்க விராசநற்கிரியந் தன்னிற்
பொருந்திச் சென்ன கர்ப்புறத்திற் பொலிவுடனிருந் தானன்றே.
154


காகதுண்ட முனிவனிடம் வயந்தகன் தங்கள் சூழ்ச்சி பற்றிக் கூறுதல்


காமநற்கோட்டஞ் சூழக் கனமதில் இலங்கும் வாயிற்
சோமநற்றாபதர்கள் சூழ்ந்தமர் பள்ளி தன்னில்
நாமநல் வயந்த கன்னு நன்றறி காக துண்ட
மாமறையாளற் கண்டு வஞ்சகஞ் செப்பினானே.
155


காகதுண்ட முனிவர் உதயணனிடம் உரைத்தல்


திருநிறை மன்னன் தன்னைச் சீர் மறையாளன் கண்டே
இருமதியெல்லை நீங்கியிப்பதியுருப்ப வென்றும்
தருவநீயிழந்த தேவி தரணியிங்கூட வென்ன
மருவியங்கிருக்குமோர் நாண் மகதவன் தங்கை தானும்.
156


பதுமாவதியும் உதயணனும் காமுறுதல்


பருவமிக்கிலங்குங் கோதைப் பதுமை தேரேறிவந்து
பொருவில் காமனையே காணாப் புரவலற் கண்டுகந்து
மருவும் வாசவதத்தை தான் வந்தனளென்றுரைப்பத்
திருநகர் மாதுகண்டு திகைத்துளங் கவன்று நின்றாள்.
157


உதயணனும் பதுமாவதியும் களவுமணம் செய்தல்


யாப்பியாயினியாளென்னும் அவளுடைத் தோழி சென்று
நாப்புகழ் மன்னற்கண்டு நலம்பிறவுரைத்துக் கூட்டக்
காப்புடைப் பதுமையோடுங் காவலன் கலந்து பொன்னின்
சீப்பிடக்கண் சிவக்குஞ் சீர் மங்கை நலமுண்டானே.
158


உதயணன் அமைச்சர்களிடம் வினவுதல்


எழில்பெறு காமக்கோட்டத் தியற்கையிற் புணர்ந்துவந்து
வழிபெறும மைச்சரோடு வத்தவனினிய கூறும்
மொழியமிர் தந்நலாளை மோகத்திற் பிரியேனென்னத்
தொழுதவர் பெறுக போகந் தோன்றனீயென்று சொன்னார்.
159


பதுமாவதியுடன் உதயணன் கன்னிமாடம் புகல்


மாட்சிநற் சிவிகையேறி மடந்தை தன்னோடும் புக்குத்
தாழ்ச்சியின் மாளிகைக்குட் டக்கவண் மனங்குளிர்ப்பக்
காட்டினன் வீணை தன்னைக்காவலன் கரந்திருப்ப
ஓட்டிய சினத்தனாய வுருமண்ணுவிதனைச் செய்யும்.
160


அமைச்சன் உருமண்ணுவாவின் உரை


ஆகியதறிந்து செய்யு மருளுடை மனத்தனான
யூகியங்குஞ்சை தன்னையுற்றருஞ் சிறை விடுக்கப்
போக நற்றேவியோடும் போந்ததுபோல நாமும்
போகுவமன்னன் மாதைப் புதுமணம் புணருவித்தே.
161


அமைச்சன் உருமண்ணுவாவின் செயல்


உருமண்ணுவா வனுப்ப வுற்றமுந்நூறு பேர்கள்
மருவியவிச்சை தன்னான் மன்னவன் கோயிறன்னுள்
மருவினர் மறைந்துசென்றார் மன்னவன்றாதை வைத்த
பெருநிதி காண்கிலாமற் பேர்க்குநர்த் தேடுகின்றான்.
162


உதயணன் மகத மன்னன் தருசகனுடன் நட்பு கொள்ளல்


யானரிந் துரைப்பனென்றே யரசனைக்கண்டு மிக்க
மாநிதிகாட்டி நன்மை மகதவனோடுங் கூடி
ஊனமில் விச்சை தன்னாலுருமண்ணுப் பிரிதலின்றிப்
பானலங்கிளவி தன்னாற் பரிவுடனிருக்கு நாளில்.
163


சங்க மன்னர்கள் ஏழுவரின் படையெடுப்பு


அடவியாமரசன் மிக்கவயோத்தியர்க் கிறைவன் றானைப்
படையுறு சாலியென்பான் பலமுறு சத்தியென்பான்
முடிவிரிசிகையன் மல்லன் முகட்டெலிச் செவியனென்பான்
உடன்வருமெழுவர் கூடியொளிர் மகதத்து வந்தார்.
164


மகதத்தை அழிக்கத் துவங்குதல்


தருசகற் கினிதினாங்கடரு திறையிடுவ தில்லென
நெரியென வெகுண்டு வந்தேயினிய நாடழிக்கலுற்றார்
தருசகராசன் கேட்டுத் தளரவப் புறத்தகற்ற
உருமண்ணுவா மனத்திலு பாயத்திலுடைப்பனென்றான்.
165


அமைச்சன் உருமண்ணுவாவின் சூழ்ச்சி


கள்ள நல்லுருவினோடுங் கடியகத்துள்ளே யுற்ற
வள்ளலை மதியிற் கூட்டி வாணிக வுருவினோடு
தெள்ளிய மணிதெரிந்து சிலமணி மாறப்போந்து
பள்ளிப்பாசறை புகுந்து பலமணி விற்றிருந்தார்.
166


மன்னன் வீர மகதத்திற்குக் கேளாத்தம்
இன்னு ரைகளியல்பின் வரவரத்
துன்னு நாற்படை வீடு தோன்றிரவிடை
உன்னினர்கரந் துரைகள் பலவிதம்
167


பகைவர் ஐயுற்று ஓடுதல்


உரையு ணர்ந்தவ ருள்ளங் கலங்கிப்பின்
முரியும் சேனை முயன்றவ ரோடலிற்
றெருளினர் கூடிச் சேரவந் தத்தினம்
மருவி யையம் மனத்திடை நீங்கினார்.
168


பகைவர் கூடி விவாதித்தல்


இரவு பாசறை யிருந்தவர் போனதும்
மருவிக் கூடியே வந்துடன் விட்டதும்
விரவி யொற்றர்கள் வேந்தற் குரைத்தலின்
அரசன் கேட்டுமிக் கார்செயலென்றனன்.
169


அமைச்சன் உருமண்ணுவா மன்னன் தருசகனைக் கண்டு உண்மை உரைத்தல்


வார ணிக் கழல் வத்தவன் றன்செயல்
ஓரணி மார்பனுருமண்ணு வாவுமிக்
கேரணிய ரசருக் கியல் கூறலும்
தாரணி மன்னன் றன்னுண் மகிழ்ந்தனன்.
170


தருசகன் உதயணனை எதிர்கொண்டு வரவேற்றல்


ஆரா வுவகையுள் ளாகி யரசனும்
பேரா மினியயாழ்ப் பெருமகன் தன்னையே
சேரா வெதிர்போய்ச் சிறந்து புல்லினன்
நேரா மாற்றரை நீக்குவனானென்றான்.
171


படையெடுத்துச் சென்று உதயணன் பகைவரை வெல்லுதல்


உலம்பொருத தோளுடை யுதயண குமரனும்
நலம்பொருத நாற்படையு நன்குடனே சூழப்போய்ப்
புலம்பொருத போர்ப்படையுட் பொருதுதவத் தொலைத்துடன்
நலம்பெறத் திறையுடனரபதியு மீண்டனன்.
172


உதயணன் பதுமாவதி மணம்


வருவவிசை யத்துடன் வத்தவற் கிறைவனைத்
தருசகன் எதிர்கொண்டு தன்மனை புகுந்துபின்
மருவநற் பதுமையாமங்கை தங்கை தன்னையே
திருநிறைநல் வேள்வியாற் செல்வற்கே அளித்தனன்.
173


தருசகன் உதயணனுக்கு படை அளித்து உதவுதல்


புதுமணக் கோலமிவர் புனைந்தன ரியற்றிப்பின்
பதியுடையை யாயிரம் பருமதக் களிற்றுடன்
துதிமிகு புரவிகள் தொக்கவிரண் டாயிரம்
அதிர்மணி யாற்றுந்தோ ராயிரத் திருநூறே.
174


அறுபதினொண் ணாயிர மானபடை வீரரும்
நறுமலர்நற் கோதையர் நான்கிருநூற் றிருபதும்
பெறுகவென் றமைத்துடன் பேர் வருட நாரியும்
உறுவடிவேற் சததியு முயர் தரும தத்தனும்.
175


சத்திய காயனுடன் சாலவு மமைச்சரை
வெற்றிநாற் படைத்துணை வேந்தவன்பிற் செல்கென்று
முற்றிழை யரிவைக்கு முகமலரச் சீதனம்
பற்றியன்பினால் அளித்துப் பாங்குடன் விடுத்தனன்.
176


வெல்லுமண்ண லைமிக வேந்தனன்ன யஞ்சில
சொல்லிநண்பினாலுறைத்துத் தோன்றலை மிகப்புல்லிச்
செல்கென விடுத்தரச் செல்வனங்குப் போந்தனன்
எல்லைதன்னா டெய்திப்பினினியர் தம்பி வந்தனர்.

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்



அகநானுறு-18


13. தோழி கூற்று

தன் கடற் பிறந்த முத்தின் ஆரமும்,
முனை திறை கொடுக்கும் துப்பின், தன் மலைத்
தெறல் அரு மரபின் கடவுட் பேணி,
குறவர் தந்த சந்தின் ஆரமும்,
5 இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும்
திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன்
குழியில் கொண்ட மராஅ யானை
மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது,
வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும்,
10 வள் வாய் அம்பின், கோடைப் பொருநன்
பண்ணி தைஇய பயம் கெழு வேள்வியின்,
விழுமிது நிகழ்வது ஆயினும் தெற்கு ஏர்பு,
கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்து,
சாயல் இன் துணை இவட் பிரிந்து உறையின்,
15 நோய் இன்றாக செய்பொருள்! வயிற்பட
மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை,
கவவு இன் புறாமைக் கழிக வள வயல்,
அழல் நுதி அன்ன தோகை ஈன்ற
கழனி நெல்லின் கவைமுதல் அலங்கல்
20 நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையாத் துயல்வர,
புலம்பொடு வந்த பொழுது கொள் வாடை,
இலங்கு பூங் கரும்பின் ஏர் கழை இருந்த
வெண் குருகு நரல, வீசும்
நுண் பல் துவலைய தண் பனி நாளே!


பொருள்வயிற் பிரியலுற்ற தலைமகனைத் தோழி செலவழுங்குவித்தது; உடம்பட்ட தூஉம் ஆம்
பாலை
பெருந்தலைச் சாத்தனார்

வெள்ளி, 30 டிசம்பர், 2011

யசோதர காவியம்-7


புடபாவலி மீண்டும் கருவுற்று யசோதரன் என்ற மகனைப் பெறுகிறாள். மக்கள் மூவரும் வளர்கின்றனர். வேட்டைக்குச் சென்ற மன்னன் யசோமதி எதிரில் சுதத்தர் என்ற முனிவரைக் காண்கிறான். அவர் திகம்பரக் கோலத்தில் (ஆடையின்றி) இருக்கிறார். வேட்டையில் எதுவும் கிடைக்கவில்லை. இதற்கு அந்த முனிவரை முதலில் கண்டதுதான் காரணம் என்று கருதிய யசோமதி, 500 வேட்டை நாய்களை ஏவி அவரைக் கொல்ல முயல்கிறான். அவரது தவ வலிமையால் நாய்கள் அவரை நெருங்க முடியாமல் நிற்கின்றன.

இந்த மறுபிறப்பு, விலங்குப் பிறப்பு வரலாற்றைத் தன்னைக் கொல்ல வந்த யசோமதி அரசனுக்கு சுதத்த முனிவர் கூறி அவனை நல்வழிப்படுத்துகிறார். இந்த வரலாற்றை அபயருசி, அபயமதி மாரிதத்தனுக்குக் கூற, அவன் நல்லுணர்வு பெற்று ஜின தருமத்தைக் கடைப்பிடித்து முக்தி - நற்கதி அடைகிறான். இதுவே கதை.

அன்பார்ந்த மாணவர்களே! இந்தக் கதை உங்களுக்குப் புரிகிறதா? குழப்பமாக இருக்கிறதா? யசோதரன். அவன் தாய் எவ்வாறெல்லாம் விலங்குப் பிறவி எடுத்தனர் எனத் தெளிவாக அறிய முடிகிறதா? இதோ தெளிவுக்காக இங்கே இவர்களில் யார் என்ன பிறவி எடுத்தனர் என்பதைத் தருகிறோம்.

வளையாபதி 10

ஆய்குரங்கு அஞ்சிறை வண்டினம் போல்க என்று
பாயிரம் இன்றிப் பயிற்றி மொழிந்தனள்
மேவரும் வான்பொருள் தந்துநின் தோள்நம்பி
யாவர் அடைந்தவர்க்கு அவையும் புரைய.
51


வாரி பெருகப் பெருகிய காதலை
வாரி சுருங்கச் சுருங்கி விடுதலின்
மாரி பெருகப் பெருகி அறஅறும்
வார்புனல் ஆற்றின் வகையும் புரைப.
52


எங்ஙனம் ஆகியது இப்பொருள் அப்பொருட்கு
அங்ஙனம் ஆகிய அன்பினர் ஆதலின்
எங்ஙனம் பட்டனன் பாண்மகன் பாண்மகற்கு
அங்ஙனம் ஆகிய யாழும் புரைப.
53


கரணம் பலசெய்து கையுற்று அவர்கட்கு
அரணம் எனும் இலர் ஆற்றிற் கலந்து
திரணி உபாயத்தில் திண்பொருள் கோடற்கு
அரணி ஞெலிகோல் அமைவர ஒப்ப.
54


நாடொறும் நாடொறும் நந்திய காதலை
நாடொறும் நாடொறும் நைய ஒழுகலின்
நாடொறும் நாடொறும் நந்தி உயர்வுஎய்தி
நாடொறும் தேயும் நகைமதி ஒப்ப.
55


வனப்பிலர் ஆயினும் வளமையு ளோரை
நினைத்தவர் மேவர நிற்பமைக்கு அவர்தாம்
கனைத்துடன் வண்டொடு தேனினம் ஆர்ப்பப்
புனத்திடைப் பூத்த பூங்கொடி ஒப்ப.
56


தம்கண் பிறந்த கழிஅன்பி னார்களை
வன்கண்மை செய்து வலிய விடுதலின்
இன்பொருள் ஏற்றி எழநின்ற வாணிகர்க்கு
அங்கண் பரப்பகத்து ஆழ்கலம் ஒப்ப.
57


ஒத்த பொருளால் உறுதிசெய் வார்களை
எத்திறத் தானும் வழிபட்டு ஒழுகலின்
பைத்தரவு அல்குல்பொன் பாவையின் நல்லவர்
பத்தினிப் பெண்டிர் படியும் புரைப.
58

மணிமேகலை_11 முடிவு

ஆபுத்திரனோடு மணிமேகலை

சிறையிலிருந்து விடுதலை பெற்ற மணிமேகலை, ஆபுத்திரன் புண்ணியராசனாய் ஆட்சி புரியும் சாவக நாடு செல்கிறாள். அங்குத் தருமவாசகன் எனும் முனிவன் இருப்பிடம் உள்ளது. அங்கு வந்த ஆபுத்திரன் மணிமேகலையை யார் என அறிகிறான். அவனது பழம்பிறப்பை அறிய மணிபல்லவத்துக்கு மணிமேகலை அழைத்துச் செல்கிறாள்; அங்குத் தரும பீடிகையை வணங்கித் தன் முற்பிறப்பு வரலாற்றை அறிகிறான். பின் தீவ திலகையும் மணிமேகலையும் ஆபுத்திரனை அவன் நாடு செல்லப் பணிக்கின்றனர்; மணிமேகலை வான்வழியாக வஞ்சி நகர் அடைகிறாள்.


துறவு வாழ்வில் மணிமேகலை

வஞ்சி நகர் வந்த மணிமேகலை கண்ணகிக் கடவுளை வணங்குகிறாள். பத்தினி கடவுளாகிய கண்ணகி தன் பழம்பிறப்பு வரலாற்றை மணிமேகலைக்கு விரித்துரைக்கிறாள். பின்னர் வேற்றுருக் கொண்டு பிற சமயக் கருத்துக்களை அறிந்து வர வேண்டுகிறாள். மணிமேகலையும் ‘மாதவன்’ வடிவு கொண்டு பிரமாணவாதி முதல் பூதவாதி வரை, அனைத்துச் சமயவாதிகளின் கொள்கைகளைத் தெரிந்து கொள்கிறாள். பின் அங்குள்ள பௌத்தப் பள்ளியில் தவம் செய்யும் கோவலன் தந்தை மாசாத்துவானைக் காணுகிறாள். அவன், தன்வரலாறு கூறியதுடன், மாதவியும் சுதமதியும் கச்சி மாநகர் சென்றுள்ளதை அறிவிக்கிறான். அங்கு மழையின்றி மக்கள் பசியால் வாடுவதை எடுத்துக் கூறி, அங்குச் சென்று பசிப்பிணி நீக்குமாறு வேண்டுகிறான்.


மணிமேகலை தன் உண்மை வடிவுடன் கச்சி மாநகர் அடைந்து, அந்நாட்டு அரசன் இளங்கிள்ளிக்கு நல்லறம் கூறி, நாட்டு மக்களின் பசிப்பிணி போக்குகிறாள். அங்குத் தீவ திலகைக்கும், மணிமேகலா தெய்வத்துக்கும் படிமமும் கோவிலும் எழுப்பப்படுகின்றன. அறவணர், மாதவி, சுதமதி ஆகியோர் அவளது அறச்சாலை அடைந்தனர். அவர்களை, மணிமேகலை இனிதே வரவேற்க, அடிகள் காவிரிபூம்பட்டினம் கடலால் அழிந்ததை எடுத்துரைக்கிறார். மணிமேகலை, தான் பல சமயக் கணக்கர் கொள்கைகளை அறிந்தும், அவற்றில் சிறப்பில்லை என்று உணர்ந்ததாகக் கூறுகிறாள். பௌத்த சமயத் தருக்க நெறிகளை அறவணர் அவளுக்குப் போதிக்கிறார். மணிமேகலை புத்தம் சரணம் கச்சாமி; தர்மம் சரணம் கச்சாமி; சங்கம் சரணம் கச்சாமி என்ற மந்திரத்தை மும்முறை தியானம் செய்து தன் பவத்திறம் நீங்க நோன்பு மேற்கொள்கிறாள். இத்துடன் மணிமேகலைக் காப்பியக் கதை முற்றுப் பெறுகிறது.

முதுமொழிக் காஞ்சி-7

3. வாய்ப்புடை விழைச்சின் நல்விழைச்சு இல்லை.

வாய்ப்புடை - மக்கட்பேறு வாய்க்கும்
விழைச்சு - கலவியின்

மக்கட்பேறு வாய்த்தலான கலவியே சிறந்த கலவியாம்.


4. வாயா விழைச்சின் தீ விழைச்சு இல்லை.

வாயா - மக்கட்பேறு பொருந்தாத
தீ விழைச்சு - தீமையான கலவி

மக்கட்பேறு இல்லாத கலவி தீய கலவியாம்.

5. இயைவது கரத்தலின் கொடுமை இல்லை.

இயைவது - கொடுத்தற்கு இயலுமானதை
கரத்தலின் - கொடாது ஒளித்தலினும்

கொடுக்கக்கூடியதை மறைத்து வைத்தல் பெரிய கொடுமையாகும்.

6. உரை இலன் ஆதலின் சாக்காடு இல்லை.

சாக்காடு - இறப்பு

உணர்வில்லாதவன் பிணத்துக்கு ஒப்பாவான்.

7. நசையின் பெரியது ஓர் நல்குரவு இல்லை.

நசையின் - அவாவினும்
நல்குரவு - வறுமை

ஆசையே ஒருவனுக்கு வறுமையாகும்.

8. இசையின் பெரியது ஓர் எச்சம் இல்லை.

இசையின் - புகழுடைமையின்
எச்சம் - மிச்சப்படுத்தும் பொருள்

புகழே இவ்வுலகத்தில் சேர்த்து வைக்கும் செல்வமாகும்.

9. இரத்தலினூஉங்கு இளிவரவு இல்லை.

இரத்தலின் ஊங்கு - இரத்தலை விட
இளிவரவு - இகழ்ச்சி

ஒருவனுக்கு இரத்தலை விட வேறு இகழ்ச்சி இல்லை.

10. இரப்போர்க்கு ஈதலின் எய்தும் சிறப்பு இல்லை.

இரப்போர்க்கு - பிச்சையெடுப்பவர்கட்கு
ஈதலின் - ஒன்று கொடுப்பதை விட

ஈதலினால் வரும் சிறப்பைவிட வேறு சிறப்பில்லை.

7. பொய்ப் பத்து

ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -

1. பேர் அறிவினோன் இனிது வாழாமை பொய்.

பேர் அறிவினோன் - பேரறிவுடையவன்
இனிது வாழாமை - இன்பமாய் வாழானென்பது

அறிவு இல்லாதவன் இனிமையாக வாழ்வது அரிது. (நல்ல அறிவுடையவன் இன்பமாய் வாழ்வான்.)

2. பெருஞ் சீரோன்தன் வெகுளி இன்மை பொய்.

பெரும் சீரோன் - மிக்க செல்வமுள்ளவன்
தன் - தன்னிடத்தில்

மிக்க செல்வமுள்ளவன் கோபப்படாமல் இருத்தல் அரிது.

உதயண குமார காவியம்-11,

யூகி இடபகனிடம் உதயணனைப் பற்றி வினாதலும் அவனின் விடையும்


இடபகற்குத் தன்னுரை இனிது வைத்துரைத்துப் பொன்
முடியுடைய நம் அரசன் முயற்சியது என் என
பிடிமிசை வருகையிற் பெருநிலங் கழிந்த பின்
அடியிடவிடம் பொறாமையானை மண்ணிற் சாய்ந்ததே.
127


சவரர் தாம் வளைத்ததும் தாம் அவரை வென்றதும்
உவமையில் வயந்தகன்றனூர் வந்து உடன்போந்ததும்
தவளவெண் கொடிமிடை சயந்தியிற் புகுந்ததும்
குவிமுலை நற்கோதை அன்பு கூர்ந்துடன் புணர்ந்ததும்.
128


இழந்தபூமி எண்ணிலன் இனிய போகத்தழுந்தலும்
குழைந்தவன் உரைப்ப யூகி கூரெயிறிலங்கறக்கு
விழைந்தவேந்தன் தேவியை விரகினாற் பிரித்திடின்
இழந்தமிக்கரசியல் கைகூடு மென எண்ணினான்.
129


யூகியின் செயல்


சாங்கிய மகளெனுந் தபசினியைக் கண்டுடன்
ஆங்கவனறியக் கூறியான யூகி தன்னுயிர்
நீங்கினது போலவு நின்றமைச்சர் மூவரும்
பாங்கரசன் ரூபமும் படத்தினில் வரைந்தனன்.
130


படத்துருவி லொன்றினைப் பரந்தமேற் கண்ணாகவைத்து
இடக்கண் நீக்கியிட்டு மிக்கியல்புடன் கொடுத்துடன்
முடிக்கரசற் கறிவியென்ன முதுமகளும் போயினள்
இடிக்குரனற் சீயமாம் இறைவனையே கண்டனள்.
131


சாங்கியத்தாய் அரசனைக் கண்டு வினாதல்


வேந்தனுங்கண்டே விரும்பி வினயஞ்செய் திருக்கென
பாந்தவக் கிழவியும் பண்பினிய சொல்லியபின்
சேந்ததன் சிறைவிடுத்த செல்வயூகி நின்னுடன்
போந்துபின் வராததென்ன புரவலநீ கூறென்றாள்.
132


உதயணன் செயல்


அவனுரையறிந்திலன் அறிந்த நீ யுரைக்கெனத்
தவிசிடை யிருந்தவடான் படத்தைக் காட்டினள்
புவியரசன் கண்டுடன் புலம்பி மிகவாடிப்பின்
தவமலி முனிவனைத் தான் வணங்கிக் கேட்டனன்.
133


உதயணன் விரிசிகைக்கு மலர்மாலை சூட்டுதல்


முடிமுதல ரசினோடு முனிவறநின்று ணைவனை
வடிவுடன் பெறுவையென்ன வன்மையினிற்றேறிமீக்
கடிகமழ்ச்சாரலிற் கண்ட மாதவன் மகள்
துடியிடை விரிசிகையைத் தோன்றன் மாலைசூட்டினான்.
134


உதயணனன் தழைகொண்டுவரப் போதல்


கலந்தனனிருந்து பின் கானகத் தழைதர
நலந்திகழ் மாதர்செப்ப நரபதியும் போயினன்
கலந்திகழும் யூகியும் காவலன் தன் தேவியை
சிலதினம் பிரிவிக்கச் சிந்தை கூரித் தோன்றினான்.
135


யூகியின் செயல்


மன்னவன் மனைதனின் மறைந்திருக்கும் மாதரைத்
துன்னுநன் திருவரைத் தொக்குடன் இருக்கவென்று
மன்னன் மனைதன் மனைக்கு மாநிலச் சுருங்கை செய்
தன்னவண் மனை முழுதுமறைந்தவர் தீயிட்டனர்.
136


சாங்கியத்தாய் வாசவதத்தையை யூகி இருக்கைக்கு அழைத்து வருதல்


நிலந்திகழ் சுருங்கையினீதி மன்னன் றேவியை
இலங்கு சாங்கியம் மகளெழில் பெறக் கொண்டுவந்
தலங்கலணி வேலினானமைச்சன் மனை சேர்ந்தனன்
துலங்கி வந்தடி பரவிச் சொல்லினிது கூறுவான்.
137


யூகி வாசவதத்தையை வரங்கேட்டல்


என்னுடைய நற்றாயே நீ எனக்கொரு வரங்கொடு
நின் அரசன் நின்னைவிட்டு நீங்குஞ் சிலநாளன்றி
நன்னில மடந்தை நமக்காகுவதும் இல்லையே
என்னவுடன் பட்டனள் இயல்புடன் கரந்தனள்.
138


உதயணன் மீண்டும்வந்து வருந்துதல்


சவரர் வந்து தீயிட்டுத் தஞ்செயலினாக்கிமிக்
கவகுறிகள் கண்டரசனன் பிற்றேவிக் கேதமென்
றுவளகத் தழுங்கி வந்துற்ற கருமஞ் சொலக்
கவற்சியுட் கதறியே கலங்கி மன்னன் வீழ்ந்தனன்.
139


பூண்டமார் பனன்னிலம் புரண்டு மிக்கெழுந்துபோய்
மாண்டதேவி தன்னுடன் மரித்திடுவன் நான் என்றான்
நீண்டதோள் அமைச்சரு நின்றரசற் பற்றியே
வேண்டித் தானுடனிருந்த வெந்தவுடல் காட்டென்றான்.
140


உதயணன் வாசவதத்தையின் அணிகலன் கண்டழுதல்


கரிப்பிணத்தைக் காண்கிலர் காவலர் களென்றபின்
எரிப்பொன்னணி காட்டென வெடுத்து முன்புவைத்தனர்
நெப்பிடை விழுந்தமை நினைப்ப மாயமன்றென
விருப்புடை நற்றேவிக்கு வேந்தன் மிக்கரற்றுவான்.
141


மனம்வருந்தி உதயணன் அழுது புலம்பல்


மண்விளக்கமாகி நீ வரத்தினெய்தி வந்தனை
பெண்விளக்கமாகி நீ பெறற்கரியை யென்று தன்
கண்விளக்கு காரிகையைக் காதலித் திரங்குவான்
புண் விளக்கிலங்குவேற் பொற்புடைய மன்னவன்.
142


மானெனும் மயிலெனும் மரைமிசைத் திருவெனும்
தேனெனுங் கொடியெனுஞ் சிறந்தகொங்கை நீயெனும்
வானில மடந்தையே மாதவத்தின் வந்தனை
நான் இடர்ப்படுவது நன்மையோ நீவீந்ததும்.
143


நங்கை நறுங்கொங்கையே நல்லமைக் குழலியெம்
கொங்குலவ கோதைபொன் குழையிலங்கு நன்முகம்
சிங்கார முனதுரையுஞ் செல்வி சீதளம்மதி
பொங்காரம் முகமெனப் புலம்பினான் புரவலன்.
144


வீணைநற் கிழத்திநீ வித்தக வுருவி நீ
நாணின் பாவைதானுநீ நலந்திகழ் மணியுநீ
காணவென்றன் முன்பதாய்க் காரிகையே வந்துநீ
தேரணி முகங்காட்டெனச் சொல்லியே புலம்புவான்.
145


அமைச்சர் தேற்றுதல்


துன்பமிக வும்பெருகச் சொற்கரிய தேவிக்கா
அன்புகிக்கு அரற்றுவதை அகல்வது பொருளென
நன்புறும் அமைச்சர்சொல்ல நரபதியும் கேட்டனன்
இன்புறும் மனைவி காதலியல்புடன் அகன்றனன்.
146


யூகி உருமண்ணுவாவிடம் உரைத்தல்


அண்ண றன்னிலை அறிந்த யூகியும்
திண்ணி தின்னியல் செய்கை யென்றுரு
மண்ணு வாவினை மன்னன் அண்டையில்
எண்ணுங் காரிய மீண்டுஞ் செய்கென்றான்.
147


வயந்தகன் உதயணனுக்குக் கூறுதல்


தன்னிலைக் கமைந்த தத்துவ ஞானத்தான்
துன்னருஞ் சூழ்ச்சித் தோழன் வயந்தகன்
மன்னற் குறுதி மறித்தினிக் கூறும்
பொன்னடி வணங்கிப் புரவலன் கேட்ப.
148


வெற்றிவேன் மகதவன் வேந்தன் றேசத்தில்
இற்றவர்க் காட்டும் இயல்பினனூலுரை
கற்றுவல் லவனற் காட்சி யறிவுடன்
தத்துவ முனியுளனாமினிச் சார்வோம்.
149


உதயணன் மகதநாடு செல்லல்


வத்தவ குமரன் கேட்டு வயந்தகன் தன்னைநோக்கி
அத்திசை போவோம் என்றே அகமகிழ்ந்து இனிய கூறி
வெற்றிநாற் படையுஞ் சூழ வெண்குடை கவரிமேவ
ஒத்துடனிசைந்து சென்றான் உதயண குமரன் றானே.
150

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


வியாழன், 29 டிசம்பர், 2011

திருக்குறள் அதிகாரம் - 5 -6


இல்வாழ்க்கை

(6)
அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற்
போஓய்ப் பெறுவது எவன் .

கருத்து

ஒருவன் இல்வாழ்க்கையை அறவழியில்
நடத்துவானால் ,அவன் அதற்குப்  புறம்பான  
வேறுவழியில்  சென்று  பெறத்   தக்கது  என்ன? 

எதிர்கருத்துச் சொற்கள் - 60

(591)பராக்கிரமம் - கோழைத்தனம்
(592)பராதீனம் - சுயாதீனம்
(593)பராமுகம் - கவனிப்பு
(594)பரிபவம் - பரிவு
(595)பருத்தல் - மெலிதல்
(596)பருமை - சிறுமை
(597)பருவரல் - இன்பம்
(598)பல - சில
(599)பலர் - சிலர்
(600)பலவந்தம் - சுயேச்சை

ஆண்டுவிழாக்கள்

ஒராண்டு நிறைவுவிழா-காகிதவிழா
ஈராண்டுநிறைவுவிழா-பருத்திவிழா 

ஆசாரக்கோவை-7


செய்யத் தகாதவை
(இன்னிசை வெண்பா)

நீருள் நிழல் புரிந்து நோக்கார்; நிலம் இரா
கீறார்; இரா மரமும் சேரார்; இடர் எனினும்,
நீர் தொடாது, எண்ணெய் உரையார்; உரைத்த பின்,
நீர் தொடார், நோக்கார், புலை. 13

நோக்கார் - பாரார்
இரா - இரவில்

நீரில் தம் நிழலை விரும்பி பார்க்கமாட்டார். நிலத்தை கீற மாட்டார். இரவில் மரத்தின் கீழ் நிற்கமாட்டார். நோய்பட்டபோதும் நீரைத் தொடாமல் எண்ணெயை உடம்பில் தேய்க்க மாட்டார். எண்ணெய் தேய்த்த பின் தம் உடம்பின் மேல் நீரை தெளித்துக் கொள்ளாது புலையை தம் கண்ணால் பார்க்க மாட்டார்.


நீராடும் முறை
(இன்னிசை வெண்பா)

நீராடும் போழ்தில், நெறிப் பட்டார், எஞ் ஞான்றும்,-
நீந்தார்; உமியார்; திளையார்; விளையாடார்;
காய்ந்தது எனினும், தலை ஒழிந்து ஆடாரே,
ஆய்ந்த அறிவினவர். 14

எஞ் ஞான்றும் - ஒரு நாளும்
திளையார் - அமுங்கியிருக்கமாட்டார்

ஆராய்ந்த அறிவுடையார் நீராடும் பொழுது நீந்தமாட்டார், எச்சிலை உமிழ மாட்டார், அமுங்கியிருக்க மாட்டார், விளையாட மாட்டார், எண்ணெய் தேய்த்துக் கொள்ளாமல் கழுத்தளவு அமிழ்ந்து குளிக்க மாட்டார்.

உடலைப் போல் போற்றத் தக்கவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

ஐம் பூதம், பார்ப்பார், பசு, திங்கள், ஞாயிறு,
தம் பூதம் எண்ணாது இகழ்வானேல், தம் மெய்க்கண்
ஐம் பூதம் அன்றே கெடும். 15

இகழ்வானேல் - இகழ்வானாயின்
அன்றேகெடும் - அன்றே கெட்டகன்றுபோம்

நிலம் முதலிய ஐம்பூதங்களையும், பார்ப்பாரையும், பசுவையும், சந்திரனையும், சூரியனையும் போற்றாதவர், உடம்பில் உள்ள ஐம்பூதத்தையுடைய தெய்வங்கள் அகன்று போய்விடும்.

யாவரும் கூறிய நெறி
(சவலை வெண்பா)

'அரசன், உவாத்தியான், தாய், தந்தை, தம்முன்,
நிகர் இல் குரவர் இவ் ஐவர்; இவர் இவரைத்
தேவரைப் போலத் தொழுது எழுக!' என்பதே-
யாவரும் கண்ட நெறி. 16

தம்முன் - தனக்கு மூத்தோனும்
நெறி - வழி

அரசனும், குருவும், தாயும் தந்தையும், தனக்கு மூத்தோரும், நிகரில்லா உறவினராவார். இவர்களை தேவர்களைப் போல தொழ வேண்டும். இவர்கள் சொல்லிய சொல்லை கடந்து செய்யார், அதனை மறந்து நடக்கமாட்டார், நல்லறிவாளர்.

நல்லறிவாளர் செயல்
(இன்னிசை வெண்பா)

குரவர் உரையிகந்து செய்யார்; விரதம்
குறையுடையார் தீர மறவார்; நிறையுவா
மெல் கோலும் தின்னார்; மரம் குறையார்' என்பதே-
நல் அறிவாளர் துணிவு. 17

இகந்து - கடந்து
தீர - மிக

அறிவாளர், குரவர்கள் சொல்லிய சொல்லை மீறி எதனையும் செய்யமாட்டார். குறை விரதத்தை மறக்கமாட்டார். அம்மாவாசை அன்று பல் துடைப்பதும், மரம் வெட்டுதலும் செய்ய மாட்டார்.

யசோதர காவியம்-6


அவந்தி நாட்டு உஞ்சயினி நகர அரசன் அசோகன்; அவன் மனைவி, சந்திரமதி. அவர்தம் மகனே யசோதரன்; அவன் அமிர்தமதியை மணந்து யசோமதி என்ற மகனைப் பெற்றான். தன் தலையில் நரைமுடி கண்ட அசோகன் துறவியாகிறான். தொழுநோயாளனான யானைப் பாகன் அட்டபங்கன், மாளவ பஞ்சம் என்ற இசைபாடுகிறான். அந்த இசையில் மயங்கிய யசோதரன் மனைவி அமிர்தமதி அட்டபங்கனுடன் உடலுறவு கொள்கிறாள். இதனை நேரில் கண்ட யசோதரன் துறவு மேற்கொள்ள விழைகிறான். மனைவியின் கூடா ஒழுக்கத்தை மறைத்துத் தீக்கனாக் கண்டதாகத் தன் தாயிடம் கூறுகிறான். தாய் மாரிக்குப் பலியிட வேண்டுகிறாள். உயிர்க்கொலை செய்ய விரும்பாத யசோதரன் மாக்கோழியைப் (மாவால் செய்த கோழி) பலியிடுகிறான். அவனது கெட்ட காலம் அம்மாக் கோழிக்குள் புகுந்திருந்த ஒரு தெய்வம் துடிதுடித்து இறந்துபடுகிறது. இதனால் துன்புற்ற அரசனின் கருத்தறிந்த அவன் மனைவி அமிர்தமதி, அவனையும் அவன் தாய் சந்திரமதியையும் நஞ்சு கலந்த லட்டைக் கொடுத்துக் கொன்றுவிடுகிறாள். பின் இவர்கள் இருவரும் மயிலும் நாயுமாகப் பிறந்து அரசன் யசோமதி அரண்மனையில் வாழ்கின்றனர். அப்போது மயிலாக வாழும் யசோதரன் தன் மனைவியின் கள்ளக் காதலனான யானைப்பாகனின் கண்ணைக் கொத்த, அவன் மயிலைக் கடித்து விடுகிறான். நாய் கடித்ததாக அரசனிடம் பொய் சொல்கிறான். ஆத்திரமடைந்த மன்னன் நாயைக் கொல்ல அது பாம்பாகப் பிறக்கிறது. மயில் இறந்து முள்ளம் பன்றியாய்ப் பிறக்கிறது. முள்ளம் பன்றி பாம்பைக் கடிக்க, அது இறந்து முதலையாய்ப் பிறக்கிறது. முள்ளம் பன்றியைக் கரடி கொல்ல அது மீனாய்ப் பிறக்கிறது. முதலை மீனை விழுங்க விரட்டிய போது காவலரால் பிடிபட்டுக் கொல்லப்படுகிறது. அம்முதலை பெண் ஆடாகப் பிறக்கிறது. மீன் அந்தணரால் கொல்லப்பட்டு அப்பெண் ஆட்டின் குட்டியாகப் பிறக்கின்றது. பின் தாய் ஆடு எருமையாய்ப் பிறந்து அரசனுடைய குதிரையைக் கொன்று விடுகிறது. அரசன் எருமையைக் கொல்ல, எருமை கோழியாகப் பிறக்கிறது. குட்டி ஆட்டையும் அமிர்தமதி கொல்ல - அதுவும் கோழியாகப் பிறக்கிறது. கோழிகளை வளர்த்தவன் ஒரு முனிவனிடம் அறம் கேட்டபோது கோழிகளும் உடனிருந்து கேட்டன. அறவுரை கேட்ட மகிழ்ச்சியில் கோழிகள் கூவ, அங்குத் தூங்கிக் கொண்டிருந்த அரசன் தன் தூக்கத்திற்கு இடையூறாக அமைந்த கோழிகளைக் கொல்ல, அவை முனிவரிடம் அறம் கேட்ட அறப்பயனால், அரசன் தேவி புட்பாவலிக்கு இரட்டைக் குழந்தைகளாகப் பிறக்கின்றன. அக்குழந்தைகளே அபயருசி, அபயமதியாவர்.

அகநானுறு-17


12. தோழி கூற்று

யாயே, கண்ணினும் கடுங் காதலளே;
எந்தையும், நிலன் உறப் பொறாஅன்; 'சீறடி சிவப்ப,
எவன், இல! குறுமகள்! இயங்குதி?' என்னும்;
யாமே, பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்,
5 இரு தலைப் புள்ளின் ஓர் உயிரம்மே;
ஏனல்அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும்,
கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெருஞ் சினை,
விழுக் கோட் பலவின் பழுப் பயம் கொண்மார்,
குறவர் ஊன்றிய குரம்பை புதைய,
10 வேங்கை தாஅய தேம் பாய் தோற்றம்
புலி செத்து, வெரீஇய புகர்முக வேழம்,
மழை படு சிலம்பில் கழைபட, பெயரும்
நல் வரை நாட! நீ வரின்,
மெல்லியல் ஓரும் தான் வாழலளே.

பகற்குறி வாராநின்ற தலைமகன், தோழியால் செறிப்பு அறிவுறுக்கப்பட்டு, 'இரவுக் குறி வாரா வரைவல்' என்றாற்கு, அதுவும் மறுத்து, வரைவு கடாயது
குறிஞ்சி
கபிலர்

வளையாபதி 9

உய்த்து ஒன்றி ஏர்தந்துஉழஉழுது ஆற்றவும்
வித்தின்றிப் பைங்கூழ் விளைக்குறல் என்ஒக்கும்
மெய்த்தவம் இல்லான் பொருளோடு போகங்கட்கு
எய்த்து உழந்தேதான் இடர்ப்படு மாறே.
43


செந்நெலங் கரும்பினொடு இகலும் தீஞ்சுவைக்
கன்னல் அம் கரும்புதான் கமுகைக் காய்ந்தெழும்
இன்னவை காண்கிலன் என்று பூகமும்
முன்னிய முகில்களான் முகம்பு தைக்குமே.
44


குலந்தரும் கல்வி கொணர்ந்து முடிக்கும்
அலந்த கிளைகள் அழிபசி தீர்க்கும்
நிலம்பக வெம்பிய நீள்சுரம் போகிப்
புலம்பில் பொருள்தரப் புன்கண்மை உண்டோ .
45


கெட்டேம் இதுஎம் நிலைஎன்று சார்தற்கண்
நட்டவர் அல்லார் நனிமிகு பவர்சுற்றம்
பெட்டது சொல்லிப் பெரிதுஇகழ்ந்து ஆற்றவும்
எட்டவந்து ஓர்இடத்து ஏகிநிற்பவே.
46


தெண்ணீர் பரந்து திசைதொறும் போய்க்கெட்ட
எண்ணெய்கொண்டு ஈட்டற்கு இவறுதல் என்ஒக்கும்
பெண்மனம் பேதித்து ஒருப்படுப்பென் என்னும்
எண்ணில் ஒருவன் இயல்புஎண்ணும் ஆறே.
47


நீள்முகை கையால் கிழித்து மோக்குமாறு
மாண்வினைப் பாவை மறைநின்று கேட்குறின்
பேணலும் அன்பும் பிறந்துஉழிப் போதுசெய்து
ஆணைப்பெண் ஐய அணைக்குறு மாறே.
48


அந்தகன் அந்தகற்கு ஆறு சொலல்ஒக்கும்
முந்துசெய் குற்றம் கெடுப்பான் முழுவதும்
நன்குஅறிவு இல்லான் அஃதுஅறி யாதவற்கு
இன்புறு வீட்டின் நெறிசொல்லு மாறே.
49


யாறொடு யாழ்ஞெலி கோல்நில வார்கொடிப்
பாறொடு பத்தினி மாபோல் ஒழுகென்று
கூறினள் கூத்தி முதிர்ந்தாள் மகட்குஇவை
வேறுஓர் இடத்து வெளிப்படல் நன்றாம்.
50

மணிமேகலை_10

ஆபுத்திரன் சிந்தாதேவி என்னும் தெய்வத்தின் அருளால் அமுதசுரபி பெற்றுப் பசிப்பிணி தீர்த்து வருகிறான்; இதனால் அவன் புகழ் பரவுகிறது. பொறாமை கொண்ட இந்திரன் நாட்டை மழையால் செழிக்கச் செய்கிறான். இதனால் அமுதசுரபிக்குத் தேவையில்லாமல் போகிறது. எனவே சாவக நாடு சென்று பசிப்பிணி போக்கச் செல்லும் ஆபுத்திரன் மணிபல்லவத்தில் தனித்து விடப்படுகிறான். அங்கு மக்களே இல்லாததால் வருந்திய ஆபுத்திரன் அமுதசுரபியைக் கோமுகிப் பொய்கையில் எறிந்து விட்டு உண்ணா நோன்பிருந்து உயிர் விடுகிறான். அவன் செய்த அறப்பயனால் சாவக நாட்டில் ஒரு பசு வயிற்றில் தோன்றி, பூமிச்சந்திரன் என்ற அரசனால் தத்தெடுக்கப்பட்டு அரசனாகி நல்லாட்சி செய்கிறான்.

சிறையும் அறமும்

இவ்வாறு ஆபுத்திரன் வரலாறு கூறிய அடிகள் மணிமேகைலையைப் பசிப்பிணி தீர்க்கும் பேரறத்தை மேற்கொள்ளப் பணிக்கிறார். அவளும் துறவுக் கோலங்கொண்டு, காயசண்டிகை வழிப்படுத்த ஆதிரையிடம் பிச்சை ஏற்றுப் பசிப்பிணி தீர்க்கிறாள்; காய சண்டிகையின் ‘யானைத் தீ’ என்னும் அடங்காப் பசிநோயும் நீங்க அவள் தன்னுடைய விண் நாடு புறப்பட்டுச் செல்கிறாள்.


மணிமேகலையின் துறவு வாழ்வை விரும்பாத சித்திராபதி உதயகுமரனைத் தூண்டி விடுகிறாள். அவன் மணிமேகலையை அடைய முயற்சி செய்ய, அவள் காய சண்டிகையாக உருவத்தை மாற்றிக் கொண்டு அறம் செய்கிறாள். காய சண்டிகை உருவில் இருப்பவள் மணிமேகலை என உணர்ந்த உதயகுமரன் பாதி இரவில் அவளைக் காண வருகிறான். இதனை அறிந்த காய சண்டிகையின் கணவன் காஞ்சனன், தன் மனைவியிடம் உதயகுமரன் தவறுதலாக நடந்து கொண்டதாக நினைத்து அவனைக் கொன்று விடுகிறான். மணிமேகலை இதனை உணர்ந்து புலம்ப அவளைக் கந்திற்பாவை தடுத்துத் தேற்றுகிறது. இளவரசன் கொலைக்குக் காரணமான மணிமேகலையை அரசன் கைது செய்கிறான். அவன் தேவி, அவளைப் பலவாறு துன்புறுத்த, மணிமேகலை தான்பெற்ற மந்திரத்தால் அனைத்துத் துன்பத்திலிருந்தும் விடுபடுகிறாள். சிறையிலும் அறம் செய்கிறாள். இதனால் அஞ்சிய தேவி மணிமேகலையை வணங்க, அவள் காமம், உயிர்க்கொலை, பொய் முதலானவற்றின் குற்றங்களைத் தேவிக்கு எடுத்துரைக்கிறாள்.


மீண்டும் மணிமேகலையைக் கலை வாழ்வில் ஈடுபடுத்தச் சித்திராபதி அரசமாதேவியிடம் வேண்டுகிறாள். தேவி மறுத்து விடுகிறாள். அதே நேரத்தில் மணிமேகலையை மீட்க அறவண அடிகள், மாதவி, சுதமதி வருகின்றனர். தேவிக்கு அறவுரை கூறிய அறவணர் வேற்று நாடு செல்கிறார்.

முதுமொழிக் காஞ்சி-6

3. ஈரம் அல்லாதது கிளை நட்பு அன்று.

ஈரம் அல்லாதது - அன்பில்லாத தொடர்பு
கிளை - சுற்றமும்

அன்பில்லாத தொடர்பு உறவுமாகாது நட்புமாகாது.


4. சோரக் கையன் சொல்மலை அல்லன்.

சோராக் கையன் - ஈயாத கையையுடையவன்
சொல்மலை அல்லன் - புகழ்மாலையையுடைவன் அல்லன்

யாருக்கும் ஈயாதவனுக்குப் புகழில்லை.

5. நேரா நெஞ்சத்தோன் நட்டோன் அல்லன்.

நேரா - ஒற்றுமைப்படாத
நெஞ்சத்தோன் - உள்ளத்தையுடையவன்

மன ஒற்றுமை இல்லாதவன் நண்பனில்லை.


6. நேராமல் கற்றது கல்வி அன்று.

நேராமல் - ஆசிரியருக்கு ஒன்றும் உதவாமல்
கற்றது - படித்தது

கற்பிக்கும் ஆசிரியனுக்கு உதவாமற் கற்கும் கல்வி கல்வியாகாது.


7. வாழாமல் வருந்தியது வருத்தம் அன்று.

வாழாமல் - தான் வாழ்வதை வேண்டாமல்
வருந்தியது - பிறர் வாழ்வுக்காக வருந்தியது

தான் வாழாமல் பிறர் வாழ்வதற்காக வருந்தியது வருத்தமன்று.


8. அறத்து ஆற்றின் ஈயாதது ஈகை அன்று.

அறத்து ஆற்றின் - அறவழியில்
ஈயாதது - கொடாதது

நல்ல வழியில் வராத செல்வத்தைக் கொடுப்பது தர்மமாகாது.


9. திறத்து ஆற்றின் நோலாதது நோன்பு அன்று.

திறத்து ஆற்றின் - தனது தகுதிக்கேற்ற வகையில்
நோலாதது - தவம் புரியாமை

தனது தகுதிக்கேற்ற தவம்புரியாமை தவமன்று.


10. மறு பிறப்பு அறியாதது மூப்பு அன்று.

மறுபிறப்பு அறியாதது - மறுமையுண்மை உணராதது
மூப்பு அன்று - சிறந்த முதுமையாகாது

மறுமைக்குரிய அறவொழுக்கங்களை ஒழுகாமலே அடைந்த மூப்புச் சிறப்பாகாது.

6. இல்லைப் பத்து

ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -

1. மக்கட் பேற்றின் பெறும் பேறு இல்லை.

மக்கட் பேற்றின் - மக்கட்பேற்றை விட
பெறும் பேறு - அடையத்தக்க பேறு

எல்லாச் செல்வங்களைவிட மக்கட் செல்வமே சிறந்த செல்வம்.

2. ஒப்புரவு அறிதலின் தகு வரவு இல்லை.

ஒப்புரவு - செய்யத்தக்க செயல்களை
அறிதலின் - செய்தலை விட

கடமைகளைச் செய்வதைவிட வேறு செயல்கள் நமக்கில்லை

உதயண குமார காவியம், -10

பிரச்சோதனன் உதயணனைத் தழுவுதல்


சால்கவென்று இறைவன் செப்பத் தன்னுடைக் கையினோச்சி
கால்களின் விரலினெற்றி கனக்கநன் கூன்றி நின்று
மால்கரி கால் கொடுப்ப மன்னனு மகிழ்ந்து போந்து
வேல்கவின் வேந்தன் காண வியந்துடன் தழுவிக் கொண்டான்.
101



பிரச்சோதனன் உதயணனுக்கு முகமன் கூறி உறவு கொள்ளல்


மருமகன் நீயே என்று மன்னவன் இனிமை கூறி
வருமுறை நயந்து கொண்டு மகிழ்ந்து உடன் இருந்த போழ்து
திருமகள் கனவு கூறிச் செல்வநீ கற்பியென்னப்
பெருவலியுரைப்பக் கேட்டுப் பெருமகன் உணர்த்தலானான்.
102


உதயணன் பிரச்சோதனன் மக்கட்கு வித்தை கற்பித்தல்


வேந்தன் தன் மக்கட்கெல்லாம் வேன்முதல் பயிற்றுவித்தும்
பூந்துகில் செறிமருங்குற் பொருகயற்கண்ணி வேய்த்தோள்
வாய்ந்த வாசவதத்தைக்கு வருவித்தும் வீணைதன்னைச்
சேர்ந்த வணிகரிலின்பிற் செல்வனும் மகிழ்வுற்றானே.
103



மன்னன் மைந்தர் அரங்கேறுதல்


உரையினிலரியனாய உதயண குமரன் ஓர் நாள்
அரசிளங்குமரர் வித்தை யண்ணனீ காண்கவென்ன
வரைநிகர் யானையூர்ந்து மாவுடன் தேரிலேறி
வரிசையிற்காட்டி வாள்வில் வகையுடன் விளக்கக் கண்டான்.
104



வாசவதத்தை யாழ் அரங்கேற்றம்


வாசவதத்தை வந்து மன்னனை இறைஞ்ச நல்யாழ்
பேசவை தளரக் கேட்டுப் பெருமகன் இனியனாகி
ஆசிலா வித்தையெல்லாம் ஆயிழை கொண்டாள் என்றே
ஏசவன் சிறைசெய்குற்ற மெண்ணுறேல் பெருக்க வென்றான்.
105


வாசவதத்தை யாழ் இசையின் மாண்பு


விசும்புயல் குமரர்தாமும் வியந்துடனிருப்பப் புள்ளும்
பசும் பொனினிலத்தில் வீழப்பாவையர் மயக்கமுற்றார்
வசம்படக் குறுக்கி நீட்டி வரிசையிற் பாடலோடும்
அசும்பறாக் கடாத்து வேழத்தரசனு மகிழ்ந்தானன்றே.
106



பிரச்சோதனன் உதயணனை வத்தவநாட்டிற்கு அனுப்பத் துணிதல்


வத்தவன் கையைப் பற்றி மன்னவன் இனிது கூறி
வத்தவன் ஓலை தன்னுள் வளமையிற் புள்ளியிட்டும்
வத்தவ நாட்டுக் கேற வள்ளலைப் போக வென்ன
வத்தவ நாளை யென்றே மறையவர் முகிழ்த்த மிட்டார்.
107



பிரச்சோதனன் உதயணனுக்குச் சிறப்புச் செய்தல்


ஓரிரண்டாயிரங்க ளோடை தாழ் மத்த யானை
ஈரிரண்டாயிரங்களெழின் மணிப் பொன்னின்றேரும்
போரியல் புரவி மானம் பொருவிலை யாயிரம்மும்
வீரர்கள் இலக்கம் பேரும் வீறுநற்குமரற்கீந்தான்.
108



யூகி குறத்தி வேடம் புனைந்து குறிசொல்லல்


யூகியும் வஞ்சந்தன்னையுற்றுச் சூழ்வழாமை நோக்கி
வாகுடன் குறத்திவேடம் வகுத்தனன் குறிகள் கூற்றாம்
நகரத்தினகரழிந்த நடுக்கங்கள் தீர வெண்ணிப்
போக நன்னீரிலாடப் புரத்தினில் இனிதுரைத்தான்.
109


பிரச்சோதனன் முதலியோர் நீராடச் செல்ல யூகி நகரத்திற்கு தீயிடுதல்


மன்னவன்றன்னோ டெண்ணி மாநகர் திரண்டுசென்று
துன்னிய நீர்க்கயத்திற்றொல் புரப் புறத்திலாட
நன்னெறி வத்தவன்றானன் பிடியேறி நிற்ப
உன்னிய யூகிமிக்க ஊரில் தீயிடுவித்தானே.
110


உதயணன் வாசவதத்தையைக் கைப்பற்றிக் கொண்டு போதல்


பயந்து தீக்கண்டுசேனை பார்த்திபன் தன்னோடுஏக
வயந்தகன் வந்துரைப்ப வத்தவகுமரன் தானும்
நயந்துகோன் மகளைமிக்க நன்பிடியேற்றத் தோழி
கயந்தனை விட்டுவந்த காஞ்சனை ஏறினாளே.
111


வயந்தகன் வீணைகொண்டு வன்பிடியேறிப் பின்னைச்
செயந்தரக் கரிணிகாதிற்செல்வன் மந்திரத்தைச் செப்ப
வியந்து பஞ்சவனந் தாண்ட வேயொடு பற்ற வீணை
வயந்தகன் கூற மன்னன் மாப்பிடி நிற்க வென்றான்.
112


நலமிகு புகழார் மன்னநாலிரு நூற்றுவில்லு
நிலமிகக் கடந்ததென்ன நீர்மையிற் றந்த தெய்வம்
நலமிகத் தருமின்றென்ன பண்ணுகை நம்மாலென்னக்
குலமிகு குமரன் செல்லக் குஞ்சரம் அசைந்ததன்றே.
113



பிடி வீழ்தல்


அசைந்த நற்பிடியைக் கண்டே யசலித மனத்தராகி
இசைந்த வரிழிந்தபின்னை இருநில மீதில்வீழத்
தசைந்த கையுதிரம் பாயச்சால மந்திரமங்காதில்
இசைந்தவர் சொல்லக் கேட்டே இன்புறத் தேவாயிற்றே.
114



உதயணன் முதலியோர் ஊர் நோக்கி செல்லல்


உவளகத்திறங்கிச் சென்றேயூர் நிலத்தருகு செல்லப்
பவளக் கொப்புளங்கள் பாவை பஞ்சிமெல்லடி யிற்றோன்றத்
தவளைக்கிண் கிணிகண்மிக்க தரத்தினாற் பேசலின்றித்
துவளிடையருகின் மேவுந்தோழி தோள்பற்றிச் செல்வாள்.
115



வயந்தகன் அவர்களை விட்டுப் புட்பகம் போதல்


பாவைதன் வருத்தங்கண்டு பார்த்திபன் பாங்கினோங்கும்
பூவை வண்டரற்றுங் காவுட்பூம்பொய்கை கண்டிருப்ப
வாவு நாற்படையுங்கொண்டு வயந்தகன் வருவேனென்றான்
போவதே பொருளூர்க்கென்று புரவலனுரைப்பப் போந்தான்.
116


வேடர்களை உதயணன் வளைத்துக் கொள்ளுதல்


சூரியன் குடற்பாற்சென்று குடவரை சொருகக்கண்டு
நாரியைத் தோழிகூட நன்மையிற் றுயில்கவென்று
வீரியனிரவு தன்னில் விழித்து உடன் இருந்தபோழ்து
சூரியன் உதயம்செய்யத் தொக்குடன் புளிஞர் சூழ்ந்தார்.
117


உதயணனுடன் வேடர் போர் செய்தல்


வந்த வரம்புமாரி வள்ளன்மேற் றூவத்தானும்
தந்தனு மேவிச்சாராத் தரத்தினால் விலக்கிப்பின்னும்
வெந்திறல் வேடர்வின்னாண் வெந்நுனைப் பகழிவீழ
நந்திய சிலைவளைத்து நன்பிறையம்பின் எய்தான்.
118


வேடர்கள் உதயணனிருந்த பொழிலிலே தீயிடுதலும் வயந்தகன் வரவும்


செய்வகையின்றி வேடர் தீவனங்கொளுத்த மன்னன்
உய்வகையுங்களுக்கின்றுறு பொருளீவன் என்ன
ஐவகை அடிசில் கொண்டே யான நாற்படையுஞ் சூழ
மெய்வகை வயந்தகன் தான் வீறமைந்தினிதின் வந்தான்.
119


உதயணன் வாசவதத்தை முதலியோரொடு சயந்தி நகரம் புகல்


அன்புறும் அடிசில் உண்டே அற்றை நாள் அங்கிருந்தார்
இன்புறு மற்றை நாளினெழிற் களிற்றரசனேற
நன்புறச் சிவிகையேற நங்கை நாற்படையுஞ் சூழப்
பண்புறு சயந்திபுக்குப் பார்த்திபன் இனிது இருந்தான்.
120



இலாவாண காண்டம்


உஞ்சை நகர்விட்டகன்று உதயண குமாரனும்
தஞ்சமாய்ச் சயந்தியிற் றளர்வின்றிப் புகுந்தபின்
என் செய்தனன் என்றிடினியம்புதும் அறியவே
கொஞ்ச பைங்கிளி மொழிதன்கூடலை விரும்பினான்.
121



உதயணன் வாசவதத்தை திருமணம்


இலங்கிழை நன்மாதரை யினிமை வேள்வித்தன்மையால்
நலங்கொளப் புணர்ந்தனன் நாகநற் புணர்ச்சிபோல்
புலங்களின் மிகுந்தபோகம் பொற்புடன் நுகர்ந்தனன்
அலங்கலணி வேலினான் அன்புமிகக் கூரினான்.
122


கைம்மிகு காமம்கரை காண்கிலன் அழுந்தலில்
ஐம்மிகுங் கணைமதன் அம்புமீக் குளிப்பவும்
பைம்மிகும் பொனல்குலாள் படாமுலை புணையென
மைம்மிகும் களிற்றரசன் மாரன்கடல் நீந்துவான்.
123


உதயணன் கழிபெருங்காமத்து அழுந்தி கடமையை புறக்கணித்தல்


இழந்த தன் நிலத்தையும் எளிமையும் நினைப்பிலன்
கழிந்த அறமுமெய்ம்மறந்து கங்குலும் பகல்விடான்
அழிந்தி அன்பிற்புல்லியே அரிவையுடைய நன்னலம்
விழுந்தவண் மயக்கத்தில் வேந்தன் இனிச் செல்கின்றான்.
124


ஒழுகுங்காலை யூகியாம் உயிரினும் சிறந்தவன்
எழில் பெருகும்சூழ்ச்சிக் கணினியதன் வரவதாற்
பழுதின்றிச் சிறைவிடுத்துப் பாங்குபுகழ் வத்தவன்
எழின் மங்கை இளம்பிடி யேற்றிஏகக் கண்டனன்.
125


மிஞ்சி நெஞ்சிலன்புடன் மீண்டு வர எண்ணினன்
உஞ்சைநகர்க்கு அரசன் கேட்டுள்ளகத் தழுங்கினன்
விஞ்சுபடை மேலெழாமை விரகுடனறிந்தந்த
உஞ்சை எல்லை விட்டுவந்து யூகிபுட்பகஞ் சென்றான்.
126

புதன்கிழமை வாழ்த்துக்கள்


புதன், 28 டிசம்பர், 2011

அகத்தியம்

தமிழுலகில் நன்கு அறிமுகமான பெயர் அகத்தியர் என்பது. இவர் பற்றித் தமிழிலும் வடமொழியிலும் வழங்கும் புராணக் கதைகள் பல. இவர் பேராற்றல் கொண்ட முனிவராகவும், இலக்கியம், இலக்கணம், இசை, கூத்து, மருத்துவம், சோதிடம் உளவியல் முதலான பல்கலை வல்லுநராகவும் கருதப்படுகின்றார். இவர் பெயரால் பல மருத்துவ நூல்களும், சோதிட சாத்திரங்களும் வழங்குகின்றன. இவர் முத்தமிழுக்கும் இலக்கணமாக இயற்றியது அகத்தியம் என்பர். இதனைப் பேரகத்தியம் என்றும் கூறுவர். இதில் 12000 சூத்திரங்கள் இருந்தன என்பர்

வளையாபதி 8

ஈண்டல் அரிதாய்க் கெடுதல் எளிதாகி
நாண்டல் சிறிதாய் நடுக்கம் பலதரூஉம்
மாண்பில் இயற்கை மருவில் அரும்பொருளை
வேண்டாது ஒழிந்தார் விறலோ விழுமிதே.
35


இல்லெனின் வாழ்க்கையும் இல்லைஉண் டாய்விடின்
கொல்வர் கயவர் கொளப்பட்டும் வீடுவர்
இல்லைஉண் டாய்விடின் இம்மை மறுமைக்கும்
புல்லென்று காட்டும் புணர்வதும் அன்றே.
36


வேல்கண் மடவார் விழைவுஒழிய யாம்விழையக்
கோல்கண் நெறிகாட்டக் கொல்கூற்று உழையதாம்
நாற்பது இகந்தாம் நரைத்தூதும் வந்தது இனி
நீத்தல் துணிவாம் நிலையாது இளமையே.
37


இளமையும் நிலையாவால்; இன்பமும் நின்றஅல்ல;
வளமையும் அஃதேபோல் வைகலும் துன்பவெள்ளம்
உளவென நினையாதே செல்கதிக்கு என்றும்என்றும்
விளைநிலம் உழுவார்போல் வித்துநீர் செய்துகொண்மின்.
38


மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்புஅறுக்கல்
உற்றார்க்கு உடம்பு மிகைஅவை உள்வழிப்
பற்றா வினையாய்ப் பலபல யோனிகள்
அற்றாய் உழலும் அறுத்தற்கு அரிதே.
39


உற்ற உதிரம் ஒழிப்பான் கலிங்கத்தை
மற்றது தோய்த்துக் கழுவுதல் என்ஒக்கும்
பற்றினால் ஆகிய பாவத்தை மீட்டும்
பற்றொடு நின்று பறைக்குஉறும் ஆறே.
40


தானம் செய்திலம் தவமும் அன்னதே
கானம் தோய்நில விற்கு அழிவு எய்தின
நானம் தோய்குழல் நமக்குஉய்தல் உண்டோ
மானம்தீர்ந்தவர் மாற்றம்பொய் அல்லவால்.
41


பருவந்து சாலப் பலர்கொல்என்று எண்ணி
ஒருவந்தம் உள்ளத்து உவத்தல் ஒழிமின்
வெருவந்த துன்பம் விடுக்கும் திறலோன்
ஒருவன் உலகிற்கு உளன்என்னும் ஆறே.

யசோதர காவியம்-5


இக்காப்பியம் ஐந்து சருக்கங்களைக் கொண்டது. பாடல்கள் 330. சில பதிப்புகளில் 320 பாடல்கள் மட்டுமே காணப்படுகின்றன. அபயருசி என்பான் ஔதய நாட்டு மன்னன் மாரி தத்தனுக்குத் தன் பழம்பிறப்பு வரலாறு உணர்த்திச் சைன நெறிப்படுத்தி நற்கதி பெறச் செய்ததே காப்பியக் கதை.

ஒளதய நாட்டின் தலைநகரான இராசமாபுரத்திலிருந்து நாட்டை ஆண்ட அரசன் மாரிதத்தன். அவன் ‘சண்டமாரிதேவி’க்குப் பலியிட அபயருசி, அபயமதி என்ற இரு சிறுவர்களைக் கொண்டுவரச் செய்தான். அவர்கள் அச்சம் சிறிதுமின்றித் தெய்வத்தை வாழ்த்தியபடி அரசன் முன் சென்றனர். அரசன் வாளை ஓங்கி அவர்களை வெட்டிப் பலியிட முற்பட்டபோது, நகர மக்கள் “அரசன் வாழ்க” என்று அவர்களைச் சொல்லுமாறு பணித்தனர். அபயருசி புன்முறுவலுடன் “இம்மன்னன் பலியிடும் தீய தொழிலை விட்டு விட்டு அருள் கொண்டு வாழ்வானாக” என்று வாழ்த்தினான். அரசன் அவர்களைப் பலியிடுவதை நிறுத்தி, அவர்தம் அஞ்சாமை கண்டு மகிழ்ந்தான். அபயருசி மன்னனுக்குத் தன் பூர்வ வரலாற்றை எடுத்துரைக்கிறான்.

மணிமேகலை_9

அமுத சுரபியின் சிறப்பு

அமுதசுரபியில் இடும் அன்னம் எடுக்க எடுக்கக் குறையாது பெருகும் என்று அதன் சிறப்பினைத் தீவதிலகை மணிமேகலைக்கு எடுத்துரைக்கிறாள்.


ஆங்கு அதின்பெய்த ஆருயிர் மருந்து
வாங்குநர் கையகம் வருத்துதல் அல்லது
தான்தொலைவு இல்லாத் தகைமையது ஆகும்


(பாத்திரம் பெற்ற காதை : 48-50)


(ஆருயிர் மருந்து = உணவு; தான் தொலைவு இல்லா = தான் குறையாத)


என்றும்,


அறம் கரியாக அருள்சுரந்து ஊட்டும்
சிறந்தோர்க்கு அல்லது செவ்வனம் சுரவாது


(பாத்திரம் பெற்ற காதை : 120-121)


(கரியாக = சான்றாக; சுரவாது = பெருகாது)


என்றும் அமுதசுரபியின் சிறப்பும், அது சுரப்பது அருள் உடையவர்க்கே என்பதும் இங்கு எடுத்து உரைக்கப்படுகின்றன.

புகார் நகரில் மணிமேகலை

மணிபல்லவத்தில் ஆபுத்திரனின் அமுதசுரபியைப் பெற்ற மணிமேகலை வறியவரின் பசிப்பிணி தீர்க்க வான்வழியே புகார் வருகிறாள். அங்கு மாதவியையும் சுதமதியையும் கண்டு அவர்தம் பழம்பிறப்பும் அமுதசுரபியின் சிறப்பும் கூறுகிறாள். இங்குப் பழம்பிறப்பில் ‘இலக்குமி’யாகப் பிறந்த மணிமேகலைக்குத் தாரை, வீரை என்ற தமக்கை (அக்காள்) யராகப் பிறந்தவர்களே மாதவி, சுதமதி என்பது தெரிய வருகிறது. பின்பு மூவரும் அறவண அடிகளைக் கண்டு தொழுது நிகழ்ந்தவற்றை எடுத்துரைக்கின்றனர். அடிகள் அவர்களின் பழம்பிறப்பை உணர்த்தி, அவர்களைப் புத்த நெறிப்படுத்துகிறார். இங்கு, அவரால் ஆபுத்திரன் வரலாறு சொல்லப்படுகிறது.

முதுமொழிக் காஞ்சி-5

3. நாண் இல் வாழ்க்கை பசித்தலின் துவ்வாது.

நாண் இல் வாழ்க்கை - நாணமில்லாது உண்டு உயிர்வாழும் வாழ்க்கை
பசித்தலின் - பசித்தலினின்றும்

வெட்கத்தை விட்டுப் பசி நீங்கினாலும் அது பசி நீங்காததைப் போன்றதாகும்.

4. பேண் இல் ஈகை மாற்றலின் துவ்வாது.

பேண் இல் ஈகை - விருப்பமில்லாத ஈகை
மாற்றலின் - ஈயாமையின்

விருப்பமில்லாமல் கொடுத்தால் அது கொடைத்தன்மை ஆகாது.

5. செய்யாமை மேற்கோள் சிதடியின் துவ்வாது.

செய்யாமை - செய்யத்தகாத செயல்களை
சிதடியின் - மூடத்தன்மையின்

செய்ய இயலாதவற்றை நான் செய்வேன் என்பது பேதைமையாகும்.

6. பொய் வேளாண்மை புலைமையின் துவ்வாது.

பொய் வேளாண்மை - போலியான ஈகை
புலைமையின் - கீழ்மையின்

பொய்யாகச் செய்யும் உதவி கீழ்மைத் தன்மையாகும்.

7. கொண்டு கண்மாறல் கொடுமையின் துவ்வாது.

கொண்டு - ஒருவனை நட்பு கொண்டு
கொடுமையின் - கொடுமை செய்தலினும்

பழைய நண்பனுக்கு உதவி செய்யாமல் இருத்தல் கொடுமையானதாகும்.

8. அறிவு இலி துணைப்பாடு தனிமையின் துவ்வாது.

அறிவு இலி - அறிவில்லாதவனை
துணைப்பாடு - துணையாகக் கொள்ளுதல்

அறிவில்லாதவனோடு துணைக் கொள்ளுதல் தனித்திருத்தலை ஒக்கும்.

9. இழிவுடை மூப்புக் கதத்தின் துவ்வாது.


இழிவு உடை மூப்பு - இழிவினையுடைய கிழத்தனம்
கதத்தின் - சினத்தின்

கிழத்தனமும் சினமும் ஒன்று.

10. தான் ஓர் இன்புறல் தனிமையின் துவ்வாது.

தான் - தானொருவனே
தனிமையின் - வறுமையின்

பிறருக்கு உதவாமல் தானே இன்பம் அடைந்து கொள்வான்; அவன் செல்வந்தனாயினும் வறியவனே.

5. அல்ல பத்து

ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -

1. நீர் அறிந்து ஒழுகாதாள் தாரம் அல்லள்.

நீர் அறிந்து - கணவனியல்பை அறிந்து
ஒழுகாதாள் - நடவாதவள்

கணவன் குறிப்பறிந்து ஒழுகாதவள் உண்மை மனைவியாகாள்.

2. தாரம் மாணாதது வாழ்க்கை அன்று.

தாரம் மாணாதது - மனை மாட்சிமைப் படாத இல்வாழ்க்கை
வாழ்க்கை அன்று - இல்வாழ்க்கை அன்று

மனை மாட்சிமை இல்லாத இல்லறம் நல்லறமாகாது.

உதயண குமார காவியம், -9

யூகியின் கூற்று


இந்திர லோகம் விட்டிந்திரன் வந்தனன்
அந்தரத் திருந்தியான் அன்பினின் வந்தேன்
இந்திரன் எனக்கிறை யீண்டும் புதல்வர்க்குத்
தந்திரக் குமக்குத் தானிறை யாமென.
78


புற்றினில் உறையும் பொறிவரி ஐந்தலைப்
பற்றரு நாகம் பற்றி வந்தினிதா
உற்ற இந்நகரத்துள் சிறை வைத்தார்
அற்றதை எங்கும் அறியக் காட்டினர்.
79


மருளுந் தெருளும் வரம்பில பயிற்றித்
திரளுறு செனங்கள் திறவதிற் சூழப்
பெருந்தெரு வெல்லாம் பிற்படப் போந்தே
அருஞ் சிறைப்பள்ளி அருகினிற் சேர்ந்தான்.
80


யூகி தன் வரவினை உதயணனுக்கு உணர்த்தல்


கிளைத்தலை இருவர் கற்றகிளர் நரப்பிசையுங் கீதம்
தளைச் சிறை மன்னன் கேட்பத்தான் மகிழ்குழலினூத
உளத்தியல் பாட்டைக் கேட்டு யூகியாமென மகிழ்ந்து
களைந்தனன் கவலையெல்லாம் காவலர்க்குணர்த்திப் போந்தான்.
81


வீரர்கள் யூகியை அணுகி ஆராய்ந்து போதல்


பலகொடி வாயிற்செல்லப் பார்மன்னன் சேனைவந்து
நலமுறுவடிவு நோக்க நகரத்தின் கோடுபாய்ந்த
கலனணிமார் வடுவ்வைக் கஞ்சுகத்துகிலின் மூடத்
தலைமுதல் அடியீராகத் தரத்தினாற் கண்டுபோந்தார்.
82


யூகி யானைக்கு வெறியூட்டுதல்


பித்தனற் பேயனென்று பெருமகற்கு உரைப்பக் கேட்டு
வெற்றிநற் சேனைமற்றும் வெஞ்சிறை காக்கவென்றான்
மற்றினி யூகிபோந்து மலிகுடிப் பாக்கஞ் சேர்ந்தே
அன்றைநாள் இரவில் யானை அனல் கதம்படுக்கலுற்றான்.
83


வாளொடு கைவிலேந்தி வயந்தகன் தன்னோடு எண்ணித்
தோளன் தோழன் கூடத்தூபத்துக் கேற்ற வத்தும்
வேளையீதென்று கொண்டு விரகினாற் கயிறு பற்றித்
தாளொத்த கொம்மை மீதிற்றரத்தினாலிழிந் தானன்றே.
84


நளகிரியின் செயல்


ஆனை தன்னிலை கண்டெய்தி அகிலிடும் புகையு மூட்டிச்
சேனை மன்னகரழித்துச் சிறைவீடுன் கடனேயென்று
மான நல்யூகி யானை செவியின் மந்திரத்தைச் செப்ப
யானை தன்மதக்கம் பத்திலருந்தனை யுதறித் தன்றே 85


யானை பாகரைக் கொல்லுதல்


நீங்கிட மிதுவென்றெண்ணி நிலைமதிலேறிப் போகத்
தூங்கிருடன் னிலானை சுழன்றலைந் தோடப்பாகர்
பாங்கினால் வளைப்பப் பொங்கிப் படுமுகின் முழக்க மென்ன
ஆங்கது பிடுங்கிக் கையால வரைக்கொன்றிட்ட தன்றே.
86


பிரச்சோதனன் களிற்றின் வெறிச்செயலைக் கானல்


வேழமும் மதங்கொண்டோ ட வேந்தன்கேட்டினிது எழுந்து
வேழ நன் வேட்டங்காண வெம்முலை மாதரோடும்
ஆழிநல் இறைவன் தானும் அணிமிகு மாடமேறிச்
சூழநன் மாதர் நிற்பத்துளக்கின்றி நோக்கினானே.
87


நளகிரியின் தீயச் செயல்கள்


கூடமாளிகை களெல்லாங் கோட்டினாற் குத்திச் செம்பொன்
மாடமு மதிலுமற்று மறித்தஃ திடித்துச்செல்ல
ஆடவர் கூடியோடு யயில்குந்தந் தண்டமேந்தி
நாடிநற்கையால் தட்டி நாற்றிசை சூழ்ந்து நின்றார்.
88


கூற்றுருவெய்தி யோடிக் கோட்டிடைக் குடர்களாடக்
காற்றென முழக்கி வேழங்கண்ட மாத்தரைத்தன்கையால்
நாற்பத்தெண் பேரைக்கொன்று நடுவுறப் பிளந்திட்டோடி
மாற்றருங் கோட்டை வாயின் மதிற்புறம் போந்ததன்றே.
89


அற்நூற்றின் மீதிலைம்ப தானநற்சேரி தானும்
உறு நூற்றிலேழை மாறவுள்ள நாற்பாடியோடும்
நறுமலர் கந்தம்வீசு நன்குள காவுமற்றும்
பெறுமத யானை கோட்டாற் பெருநகரழித்த தம்மா.
90


உஞ்சை மாந்தர் அலறல்


பாடுநன் மகளிரெல்லாம் பாட்டொழிந் தரற்றியோட
ஆடுநன் மாதர் தாமும் ஆடல் விட்டுலந்துசெல்லக்
கூடுநன் மங்கைமைந்தர் குலைந்தவரேச் செம்பொன்
மாடநன் மேனிலைப்பான் மன்னினார் பலரோடு ஆங்கே.
91


அமைச்சர் அக்களிற்றினை அடக்க உதயணனால் மட்டுமே முடியும் எனல்


மத்துறுகடலின் மிக்கு மறுகிய நகரத்தாரும்
வெற்றிநல் வேந்தனோடு வினவினா ரமைச்சரெண்ணி
இத்தின நகரம் பட்டவிடரது விலக்கனல்ல
வத்தவன் கையதென்ன வகுத்துரை கேட்டமன்னன்.
92


மன்னன் மறுத்துக் கூறுதல்


போரினில் நிற்கலாற்றாம் பொய்யினிற்றந்த மைந்தன்
சீரொடு சிறப்பும் வௌவிச் சிறையினில் வைத்ததன்றிப்
பேரிடிக் கரிமுன்விட்டால் பெரும்பழி யாகுமென்று
தாருடை வேந்தன் சொல்லத்தரத்தினால் அமைச்சர் சொல்வார்.
93


அமைச்சர்கள் அது பழியன்று புகழே ஆகுமெனல்


இந்திரனானை தானுமிவன் கையாழிசைக்கு மீறாது
இந்திரன் வேழமுங் கேட்டேழடி செல்லுமற்றிக்
கந்திறு கைம்மாவிக்கோன் கைவீணை கடவாதென்ன
மந்திரித் தவர்சொற்கேட்டு மன்னன் அப்படிசெய்கின்றான்.
94


பிரச்சோதனன் அமைச்சன் சீவகன் என்பவன் உதயணனைக் கண்டு கூறல்


சீவகன் வத்தவற்குச் செவ்விதிற் செப்புகின்றான்
தேவ இந்நகரின் இடுக்கண் தீர்க்கைநின் கடனதாகும்
போவதுன்நேசத் தென்றல் புரவலன் கடனதாகும்
பூவலன் உரைத்தான் என்னப் புகழ்ந்தவன் சிறை விடுத்தான்.
95


உருவுள சிவிகை ஏறி உயர்மன்னன் மனை புகுந்து
திருமயிர் எண்ணெய் இட்டுத் திறத்தினன் நீருமாடி
மருவிறன் பட்டுடுத்து மணிக்கலன் இனிது தாங்கித்
தெருவிடைத் திகழப்புக்கான் திருநகர் மகிழவன்றே.
96


உதயணன் யாழ் இசைத்தலும் களிறு அடங்குதலும்


பருந்து பின் தொடர யானை பறிவைகண் பற்றும்சூழப்
பெருந்தெரு நடுவுட்டோ ன்றப் பீடுடைக்குமரன் தானும்
திருவலித்தடக்கை வீணை சீருடன் பாடலோடும்
மருவலிக்களிறுங் கேட்டு வந்தடி பணிந்ததம்மா.
97


உதயணன் நளகிரியின் மேல் ஏறுதல்


பிரிந்தநற் புதல்வர் வந்து பெற்றதன் தந்தை பாதம்
பரிந்த நற்காதாலே பணிந்திடுமாறு போல
இருந்துதற் பணிந்த யானை எழின் மருப்படிவைத்தேறிப்
பெருந்தகையேவிக் கோட்டு பெருங்கையாற் றோட்டி கொண்டான்.
98


உதயணன் அக்களிநூர்ந்து வருதலும் பிரச்சோதனன் மகிழ்தலும்


வைத்த நன் மணியும் யாழும் வரிக்கயிறதுவு நீட்ட
வெற்றிநல்வேந்தன் வாங்கி வீக்கிமிக் கார்த்துக்கொண்டே
உற்றநல் வீதிதோறும் ஊர்ந்துநற் சாரிவட்டம்
பற்றிதன் கோட்டக் கண்டு பார்த்திபன் மகிழ்ச்சி கொண்டான்.
99


பிரச்சோதனன் உதயணனுக்கு பரிசு வழங்குதல்


பிடிப்புப் பொன்விலை மட்டில்லாப் பெருவலியாரந் தன்னை
முடிப்புவி அரசன் ஈய மொய்ம்பனுமணிந்து கொண்டு
கொடிப்புலிமுகத்து வாயிற்கோட்டையுட் கொண்டு வந்தான்
இடிக்குரற் சீயமொப்ப விலங்கிய குமரன்தானே.
#160;