உதயணன் அரசுரிமை பெறுதல்
முனியொடு தங்கை தன்னை முயன்றிரந் தெய்தி நாகம்
தனையன வெங்கயத்திற் றனயனையேற்றிப் போய்த்தன்
மனனிறை நாட்டை அந்த மருகனுக்கீந்து போந்து
முனிவனம் புகுந்து மாமன் முனிவனாய் நின்றானன்றே. 23
சாதானிகன் மிருகாபதியைக் காணல்
இளமையை இகந்து மிக்க இனிய நற்குமரனாகி
வளமையில் செங்கோல் தன்னை வண்மையினடத்தினானாங்
இளமயில் அனைய தேவிக்கு இரங்கிய சாதானிகன் தான்
உளமலி கொள்கை யான்ற வொருதவற்கண்டு உரைத்தான். 24
மிருகாபதி மீண்டும் மக்களைப் பெறுதல்
தேவியின் வரவு நல்ல திருமகன் செல்வுங் கேட்டு
மாவலன் மனமகிழ்ந்து வந்தூர் புக்கிருக்கு நாளில்
தேவியும் வந்து கூடிச் சிறந்த நற்புதல்வர் தம்மைத்
தேவிளங்குமரர் போலச் செவ்வியிற் பயந்தாளன்றே. 25
பிங்கல கடகரென்று பேரினிதிட்டு மன்னன்
தங்கிய காதலாலே தரணியாண்டினிது செல்லக்
குங்கும மணிந்த மார்பக் குமரனும் யூகியும் போய்
அங்குள தேசமெல்லா மடிப்படுத் தினிதிருந்தார். 26
சதானிகன் துறவியாதல்
உதயணகுமரன் தன்னை யுற்றுடனழைத்துப் பூமிப்
பதமுனக்காக வென்று பார்த்திபன் கொடுத்துப் போகிக்
கதமுறு கவலை நீங்குங் காட்சி நற்றவத்தனாகி
இதமுறு யோகந்தன்னில் எழில் பெற நின்றான் அன்றே. 27
உதயணனுடைய அமைச்சர்கள்
மணிமுடி கவித்த போழ்தின் வத்தவர்க் கிறைவனானான்
அணியும் நாற்படையும் சூழ்ந்த அமைச்சரு நால்வர் நாமம்
தணிவில் சீர் யூகியோடு சாருரு மண்ணுவாவும்
துணை வயந்தகனும் தொல்சீர் இடபகனும் என்பவாமே. 28
உதயணன் யானையின் அறிவுரையைக் கடத்தல்
அரசனுக் கினியராகி அமைச்சியனடத்திச் செற்றே
வருபகை பலவுந்தேய வரச்செங்கோல் உய்க்குங்காலை
அரிய நாடகங்கள் கண்டே அரசனும் உளமாழாந்து
கரிணத்தை மறந்து விட்டுக் காதலினடிசிலுண்டான். 29
தெய்வ யானை மறைந்து போதல்
மன்னிய தெய்வயானை மாயமாய் மறைந்துபோக
மன்னனும் மனம் தளர்ந்து மணி இழந்த அரவு போலத்
துன்னிய சோக மேவுத்துயரெய்தித் தேடுக என்றான்
பன்னருஞ் சேனை சென்று பாரெங்கும் தேடித்தன்றே 30
உஞ்சை நகர்
சிந்து கங்கை நீர் சேர்ந்து வளம்படும்
அந்த மாகும் அவந்தி நன்னாட்டினுள்
இந்து சூடிய விஞ்சி வளநகர்
உந்து மாளிகை யுஞ்சயினிப் பதி. 31
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.