கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

புதன், 30 நவம்பர், 2011

சீவக சிந்தாமணி-8

விசயை புலம்புதல்

கறை பன்னீர் ஆண்டு உடன் விடுமின் காமர்சாலை தளி நிறுமின்
சிறை செய் சிங்கம் போல் மடங்கிச் சேரா மன்னர் சினம் மழுங்க
உறையும் கோட்டம் உடன் சீமின் ஒண் பொன் குன்றம் தலை திறந்திட்டு
இறைவன் சிறுவன் பிறந்தான் என்று ஏற்பார்க்கு ஊர்தோறு உய்த்து ஈமின். 306

மாடம் ஓங்கும் வள நகருள் வரம்பு இல் பண்டம் தலை திறந்திட்டு
ஆடை செம் பொன் அணிகலங்கள் யாவும் யாரும் கவர்ந்து எழு நாள்
வீடல் இன்றிக் கொளப் பெறுவார் விலக்கல் வேண்டா வீழ்ந்தீர்க்குக்
கோடி மூன்றோடு அரைச் செம் பொன் கோமான் நல்கும் என அறைமின். 307

அரும் பொன் பூணும் ஆரமும் இமைப்பக் கணிகள் அகன் கோயில்
ஒருங்கு கூடிச் சாதகம் செய்து ஒகை அரசர்க்கு உடன் போக்கிக்
கரும் கைக் களிறும் கம்பலமும் காசும் கவிகள் கொள வீசி
விரும்பப் பிறப்பாய் வினை செய்தேன் காண இஃதோஒ பிறக்குமா. 308

வெவ் வாய் ஓரி முழவு ஆக விளிந்தார் ஈமம் விளக்கு ஆக
ஒவ்வாச் சுடுகாட்டு உயர் அரங்கில் நிழல் போல் நுடங்கிப் பேய் ஆட
எவ்வாய் மருங்கும் இருந்து இரங்கிக் கூகை குழறிப் பாராட்ட
இவ்வாறு ஆகிப் பிறப்பதோ இதுவோ மன்னர்க்கு இயல் வேந்தே. 309

பற்றா மன்னன் நகர்ப் புறமால் பாயல் பிணம் சூழ் சுடு காடால்
உற்றார் இல்லாத் தமியேனால் ஒதுங்கல் ஆகாத் தூங்கு இருளால்
மற்று இஞ் ஞாலம் உடையாய்! நீ வளரும் ஆறும் அறியேனால்
எற்றே இது கண்டு ஏகாதே இருத்தியால் என் இன் உயிரே. 310

பிறந்த நீயும் பூம் பிண்டிப் பெருமான் அடிகள் பேர் அறமும்
புறந்தந்து என்பால் துயர்க் கடலை நீந்தும் புணை மற்று ஆகாக்கால்
சிறந்தார் உளரேல் உரையாயால் சிந்தா மணியே! கிடத்தியால்
மறம் கூர் நும் கோன் சொல் செய்தேன் மம்மர் நோயின் வருந்துகோ. 311



விசயையின் துன்ப நிலையைக் கண்டு அஃறிணைப் பொருள்கள் இரங்குதல்

அந்தோ! விசயை பட்டன கொண்டு அகங்கை புறங்கை ஆனால் போல்
கந்தார் களிற்றுத் தம் கோமான் கழிய மயில் ஓர் மயில் ஊர்ந்து
வந்தாள் போலப் புறம் காட்டுள் வந்தாள் தமியே என மரங்கள்
சிந்தித்து இரங்கி அழுவன போல் பனி சேர் கண்ணீர் சொரிந்தனவே. 312

அடர் பொன் பைம் பூண் அரசு அழிய அரும் பொன் புதல்வன் பெற்று இருந்த
இடர் கொள் நெஞ்சத்து இறைவியும் இருங் கண் ஞாலத்து இருள் பருகிச்
சுடர் போய் மறையத் துளங்கு ஒளிய குழவி மதிபெற்று அகம் குளிர்ந்த
படர் தீர் அந்தி அது ஒத்தாள் பணை செய் கோட்டுப் படா முலையாள். 313



சுடுகாட்டில் தெய்வம் ஒன்று உதவி செய்தல்

தேன் அமர் கோதை மாதர் திருமகன் திறத்தை ஓராள்
யான் எவன் செய்வல் என்றே அவலியா இருந்த போழ்தில்
தான் அமர்ந்து உழையின் நீங்காச் சண்பக மாலை என்னும்
கூனியது உருவம் கொண்டு ஓர் தெய்வதம் குறுகிற்று அன்றே. 314

விம்முறு விழும வெந் நோய் அவண் உறை தெய்வம் சேரக்
கொம் என உயிர்த்து நெஞ்சில் கொட்புறு கவலை நீங்க
எம் அனை தமியை ஆகி இவ் இடர் உற்றது எல்லாம்
செம் மலர்த் திருவின் பாவாய் யான் செய்த பாவம் என்றாள். 315

பூவினுள் பிறந்த தோன்றல் புண்ணியன் அனைய நம்பி
நாவினுள் உலகம் எல்லாம் நடக்கும் ஒன்றாது நின்ற
கோவினை அடர்க்க வந்து கொண்டு போம் ஒருவன் இன்னே
காவி அம் கண்ணினாய்! யாம் மறைவது கருமம் என்றாள். 316

சின் மணி மழலை நாவின் கிண்கிணி சிலம்பொடு ஏங்க
பன் மணி விளக்கின் நீழல் நம்பியைப் பள்ளி சேர்த்தி
மின் மணி மிளிரத் தேவி மெல்லவே ஒதுங்கு கின்றாள்
நன் மணி ஈன்று முந்நீர்ச் சலஞ்சலம் புகுவது ஒத்தாள். 317

ஏதிலார் இடர் பல் நூறு செய்யினும் செய்த எல்லாம்
தீது இல ஆக என்று திரு முலைப் பால் மடுத்துக்
காதலான் பெயர் சுமந்த கதிர் மணி ஆழி சேர்த்திக்
கோதை தாழ் குழலினாளைக் கொண்டு போய் மறைய நின்றாள். 318

நல் வினை செய்து இலாதேன் நம்பி நீ தமியை ஆகிக்
கொல் வினை மாக்கள் சூழக் கிடத்தியோ என்று விம்மாப்
புல்லிய கொம்பு தான் ஓர் கருவிளை பூத்ததே போல்
ஒல்கி ஓர் கொம்பு பற்றி ஒரு கணால் நோக்கி நின்றாள். 319


கந்துக் கடன் குழந்தையைத் தன் இல்லத்திற்கு எடுத்துச் சென்று வளர்த்தல்

நாளொடு நடப்பது வழுக்கி மின்னொடு ஊர்
கோளொடு குளிர் மதி வந்து வீழ்ந்து எனக்
காளக உடையினன் கந்து நாமனும்
வாளொடு கனை இருள் வந்து தோன்றினான். 320


வாள் கடைந்து அழுத்திய கண்ணினார்கள் தம்
தோள் கடைந்து அழுத்திய மார்பன் தூங்கு இருள்
நீள் சுடர் நிழல் மணி கிழிப்ப நோக்கினான்
ஆள் கடிந்து அணங்கிய அணங்கு காட்டுளே. 321

அருப்பு இள முலையவர்க்கு அனங்கன் ஆகிய
மருப்பு இளம் பிறை நுதல் மதர்வை வெம் கதிர்
பரப்புபு கிடந்து எனக் கிடந்த நம்பியை
விருப்பு உள மிகுதியின் விரைவின் எய்தினான். 322

புனை கதிர்த் திருமணிப் பொன் செய் மோதிரம்
வனை மலர்த் தாரினான் மறைத்து வண் கையால்
துனை கதிர் முகந்து என முகப்பத் தும்மினான்
சினை மறைந்து ஒரு குரல் சீவ என்றதே. 323

என்பு எழுந்து உருகுபு சோர ஈண்டிய
அன்பு எழுந்து அரசனுக்கு அவலித்து ஐயனை
நுன் பழம் பகை தவ நூறுவாய் என
இன்பழக் கிளவியின் இறைஞ்சி ஏத்தினாள். 324

ஒழுக்கியல் அரும் தவத்து உடம்பு நீங்கினார்
அழிப்பரும் பொன் உடம்பு அடைந்தது ஒப்பவே
வழுக்கிய புதல்வன் அங்கு ஒழிய மாமணி
விழுத் தகு மகனொடும் விரைவின் ஏகினான். 325

மின் அடு கனை இருள் நீந்தி மேதகு
பொன் உடை வள நகர் பொலியப் புக்கபின்
தன் உடை மதிசுடத் தளரும் தையலுக்கு
இன் உடை அருள் மொழி இனிய செப்பினான். 326

பொருந்திய உலகினுள் புகழ் கண் கூடிய
அருந்ததி அகற்றிய ஆசு இல் கற்பினாய்
திருந்திய நின் மகன் தீதின் நீங்கினான்
வருந்தல் நீ எம் மனை வருக என்னவே. 327

கள் அலைத்து இழி தரும் களி கொள் கோதை தன்
உள் அலைத்து எழு தரும் உவகை ஊர்தர
வள்ளலை வல் விரைந்து எய்த நம்பியை
வெள் இலை வேலினான் விரகின் நீட்டினான். 328

சுரிமுக வலம்புரி துவைத்த தூரியம்
விரிமுக விசும்பு உற வாய் விட்டு ஆர்த்தன
எரிமுக நித்திலம் ஏந்திச் சேந்த போல்
கரிமுக முலையினார் காய் பொன் சிந்தினார். 329

அழுகுரல் மயங்கிய அல்லல் ஆவணத்து
எழுகிளை மகிழ்ந்து எமது அரசு வேண்டினான்
கழிபெரும் காதலான் கந்து நாமன் என்று
உழிதரு பெருநிதி உவப்ப நல்கினான். 330

திருமகன் பெற்று எனச் செம் பொன் குன்று எனப்
பெரு நல நிதி தலை திறந்து பீடு உடை
இரு நிலத்து இரவலர்க்கு ஆர்த்தி இன்னணம்
செருநிலம் பயப்பு உறச் செல்வன் செல்லுமே. 331


விசயை துறவு நிலையைப் பூணுதல்

நல் உயிர் நீங்கலும் நல் மாண்பு உடையது ஓர்
புல் உயிர் தன்னொடு நின்றுழிப் புல்லுயிர்
கல் உயிர் காட்டில் கரப்பக் கலம் கவிழ்த்து
அல்லல் உற்றாள் உற்றது ஆற்ற உரைப்பாம். 332

பொறி அறு பாவையின் பொம் என விம்மி
வெறி உறு கோதை வெறு நிலம் எய்த
இறு முறை எழுச்சியின் எய்துவது எல்லாம்
நெறிமையில் கூற நினைவின் அகன்றாள். 333

பெரு மகற்கு ஆக்கம் பிறழ்வு இன்றிக் கேட்டே
திரு மகள் தான் இனிச் செய்வதை எல்லாம்
ஒரு மனத்து அன்னாய் உரை எனலோடும்
தெரு மரு தெய்வதம் செப்பியது அன்றே. 334

மணி அறைந்து அன்ன வரி அறல் ஐம்பால்
பணி வரும் கற்பின் படை மலர்க் கண்ணாய்
துணி இருள் போர்வையில் துன்னுபு போகி
அணி மணல் பேர் யாற்று அமரிகை சார்வாம். 335

அமரிகைக்கு ஓசனை ஐம்பது சென்றால்
குமரிக் கொடி மதில் கோபுர மூதூர்
தமர் இயல் ஓம்பும் தரணி திலகம்
நமர் அது மற்றது நண்ணலம் ஆகி. 336

வண்டார் குவளைய வாவியும் பொய்கையும்
கண்டார் மனம் கவர் காவும் கஞலிய
தண்டாரணியத்துத் தாபதப் பள்ளி ஒன்று
உண்டு ஆங்கு அதனுள் உறைகுவம் என்றாள். 337

பொருள் உடை வாய் மொழி போற்றினள் கூற
மருள் உடை மாதர் மதித்தனள் ஆகி
அருள் உடை மாதவர் அத்திசை முன்னி
இருள் இடை மின்னின் இலங்கு இழை சென்றாள். 338

உருவ மா மதி வாள் முகத்து ஓடிய
இருவிலும் எறி மா மகரக் குழைத்
திருவிலும் இவை தேமொழி மாதரைப்
பொரு இல் நீள் அதர் போக்குவ போன்றவே. 339

சிலம்பு இரங்கிப் போற்று இசைப்பத் திருவில் கை போய் மெய் காப்ப
இலங்கு பொன் கிண்கிணியும் கலையும் ஓங்க எறிவேல் கண்
மலங்க மணி மலர்ந்த பவளக் கொம்பு முழு மெய்யும்
சிலம்பி வலந்தது போல் போர்வை போர்த்துச் செல்லுற்றாள். 340

பஞ்சி அடர் அனிச்சம் நெருஞ்சி ஈன்ற பழமால் என்று
அஞ்சும் மலர் அடிகள் அரம் கண்ட அன்ன அரும் காட்டுள்
குஞ்சித்து அசைந்து அசைந்து குருதி கான்று வெய்து உயிரா
வஞ்சி இடை நுடங்க மயில் கை வீசி நடந்ததே. 341

தடங் கொள் தாமரைத் தாது உறை தேவியும்
குடங்கை போல் உண் கண் கூனியும் கூர்ம் பரல்
கடங்களும் மலையும் கடந்து ஆர் புனல்
இடம் கொள் ஆற்றகம் எய்தினர் என்பவே. 342

எல்லை எய்திய ஆயிரச் செங்கதிர்
மல்லல் மாக் கடல் தோன்றலும் வைகிருள்
தொல்லை நல்வினை முற்படத் தோன்றிய
அல்லல் வெவ்வினை போல அகன்றதே. 343

நுணங்கு நுண்கொடி மின் ஓர் மழை மிசை
மணம் கொள் வார் பொழில் வந்து கிடந்தது ஒத்து
அணங்கு நுண் துகில் மேல் அசைந்தாள் அரோ
நிணம் கொள் வைந்நுதி வேல் நெடும் கண்ணினாள். 344

வைகிற்று எம் அனை வாழிய போழ்து எனக்
கையினால் அடி தைவரக் கண் மலர்ந்து
ஐயவோ என்று எழுந்தனள் ஆய் மதி
மொய் கொள் பூமி முளைப்பது போலவே. 345

தூவி அம்சிறை அன்னமும் தோகையும்
மேவி மென் புனம் மான் இனம் ஆதியா
நாவி நாறு எழில் மேனியைக் கண்டு கண்டு
ஆவித்து ஆற்று கிலாது அழுதிட்டவே. 346

கொம்மை வெம்முலைப் போதின் கொடி அனாள்
உம்மை நின்றது ஓர் ஊழ்வினை உண்மையால்
இம்மை இவ் இடர் உற்றனள் எய்தினாள்
செம்மை மாதவர் செய் தவப் பள்ளியே. 347

வாள் உறை நெடுங் கணாளை மாதவ மகளிர் எல்லாம்
தோள் உறப் புல்லுவார் போல் தொக்கு எதிர் கொண்டு புக்குத்
தாள் உறு வருத்தம் ஓம்பித் தவ நெறிப் படுக்கல் உற்று
நாள் உறத் திங்கள் ஊர நல் அணி நீக்குகின்றார். 348

திருந்து தகரச் செந் நெருப்பில் தேன் தோய்த்து அமிர்தம் கொள உயிர்க்கும்
கருங் காழ் அகிலின் நறும் புகையில் கழுமிக் கோதை கண் படுக்கும்
திருந்து நானக் குழல் புலம்பத் தேனும் வண்டும் இசைப் புலம்ப
அரும் பொன் மாலை அலங்கலோடு ஆரம் புலம்ப அகற்றினாள். 349

திங்கள் உகிரில் சொலிப்பது போல் திலகம் விரலில் தான் நீக்கிப்
பைம்பொன் மகர குண்டலமும் பாவை கழுத்தின் அணிகலமும்
வெம் கண் வேந்தற்கு அமிர்து ஆகி வேல் கண் பாவை பகை ஆய
அம் கண் முலையின் அணி முத்தும் அரும்பொன் பூணும் அகற்றினாள். 350

பஞ்சி அனைய வேய் மென் தோள் பகுவாய் மகரம் கான்றிட்ட
துஞ்சாக் கதிர் கொள் துணை முத்தம் தொழுதேன் உம்மை எனத் துறந்து
அஞ்சி வருத்து நுசுப்பினாள் வளை கை உடைத்து மணிக் காந்தள்
அஞ்சச் சிவந்த மெல் விரல் சூழ் அரும் பொன் ஆழி அகற்றினாள். 351

பூப் பெய் செம் பொன் கோடிகமும் பொன் ஆர் ஆல வட்டமும்
ஆக்கும் மணி செய் தேர்த்தட்டும் அரவின் பையும் அடும் அல்குல்
வீக்கி மின்னும் கலை எல்லாம் வேந்தன் போகி அரம்பையரை
நோக்கி நும்மை நோக்கான் நீர் நோவது ஒழிமின் எனத் துறந்தாள். 352

பிடிக்கை போலும் திரள் குறங்கின் அணியும் நீக்கிப் பிணை அன்னாள்
அடிக் கிண்கிணியும் அம் சிலம்பும் விரல் மோதிரத்தோடு அகற்றிய பின்
கொடிப் பூத்து உதிர்ந்த தோற்றம் போல் கொள்ளத் தோன்றி அணங்கு அலற
உடுத்தாள் கல் தோய் நுண் கலிங்கம் உரவோன் சிறுவன் உயர்க எனவே. 353

பால் உடை அமிர்தம் பைம் பொன் கலத்திடைப் பாவை அன்ன
நூல் அடு நுசுப்பின் நல்லார் ஏந்தவும் நேர்ந்து நோக்காச்
சேல் அடு கண்ணி காந்தள் திருமணித் துடுப்பு முன் கை
வால் அடகு அருளிச் செய்ய வனத்து உறை தெய்வம் ஆனாள். 354


விசயையுடன் வந்த தெய்வம் விடைபெற்றுச் செல்லுதல்

மெல் விரல் மெலியக் கொய்த குள நெல்லும் விளைந்த ஆம்பல்
அல்லியும் உணங்கும் முன்றில் அணில் விளித்து இரிய ஆமான்
புல்லிய குழவித் திங்கள் பொழி கதிர்க் குப்பை போலும்
நல் எழில் கவரி ஊட்ட நம்பியை நினைக்கும் அன்றே. 355

பெண்மை நாண் வனப்புச் சாயல் பெரு மட மாது பேசின்
ஒண்மையின் ஒருங்கு கூடி உருவு கொண்ட அனைய நங்கை
நண்ணிய நுங்கட்கு எல்லாம் அடைக்கலம் என்று நாடும்
கண்ணிய குலனும் தெய்வம் கரந்து உரைத்து எழுந்தது அன்றே. 356

உறுதி சூழ்ந்து அவண் ஓடலின் ஆய் இடை
மறுவில் வெண் குடை மன்னவன் காதல் அம்
சிறுவன் தன்மையைச் சேர்ந்து அறிந்து இவ்வழிக்
குறுக வம் எனக் கூனியைப் போக்கினாள். 357

நெஞ்சின் ஒத்து இனியாளை என் நீர்மையால்
வஞ்சித்தேன் என வஞ்சி அம் கொம்பு அனாள்
பஞ்சி மெல்லடி பல் கலன் ஆர்ப்பச் சென்று
இஞ்சி மா நகர்த் தன் இடம் எய்தினாள். 358

தானும் தன் உணர்வில் தளர்ந்து ஆற்றவும்
மானின் நோக்கி வரும் வழி நோக்கி நின்று
ஆனியம் பல ஆசையில் செல்லுமே
தேன் இயம்பும் ஓர் தேம் பொழில் பள்ளியே. 359


சீவகன் வளர்தல்

மட்டு அவிழ் கோதை வாள் அன உண்கண் மயில் அன்னாள்
கட்டு அழல் எவ்வம் கைம் மிக நீக்கிக் களிகூர
விட்டு அகல்வு ஆற்றா வேட்கையின் ஓடும் பொழுது இப் பால்
பட்டதை எல்லாம் பல்லவர் கேட்கப் பகர்கு உற்றேன். 360

கூற்றம் அஞ்சும் கொல் நுனை எஃகின் இளையானும்
மாற்றம் அஞ்சும் மன்னிய கற்பின் மடவாளும்
போற்றித் தந்த புண்ணியர் கூடிப் புகழோனைச்
சீற்றத் துப்பின் சீவகன் என்றே பெயர் இட்டார். 361

மேகம் ஈன்ற மின் அனையாள் தன் மிளிர் பைம் பூண்
ஆகம் ஈன்ற அம் முலை இன் பால் அமிர்து ஏந்தப்
போகம் ஈன்ற புண்ணியன் எய்த கணையே போல்
மாகம் ஈன்ற மா மதி அன்னான் வளர்கின்றான். 362

அம் பொன் கொம்பின் ஆயிழை ஐவர் நலன் ஓம்பப்
பைம் பொன் பூமிப் பல் கதிர் முத்தார் சகடமும்
செம் பொன் தேரும் வேழமும் ஊர்ந்து நிதி சிந்தி
நம்பன் செல்லும் நாளினும் நாளும் நலம் மிக்கே. 363

பல் பூம் பொய்கைத் தாமரை போன்றும் பனி வானத்து
எல்லார் கண்ணும் இன்பு உற ஊரும் மதி போன்றும்
கொல்லும் சிங்கக் குட்டியும் போன்று இவ் உலகு ஏத்தச்
செல்லும் மன்னோ சீவகன் தெய்வப் பகை வென்றே. 364

மணியும் முத்தும் மாசு அறு பொன்னும் பவளமும்
அணியும் பெய்யும் மாரியின் ஏற்பார்க்கு அவை நல்கிக்
கணிதம் இல்லாக் கற்பகம் கந்துக் கடன் ஒத்தான்
இணை வேல் உண்கண் சுநந்தையும் இன்பக் கொடி ஒத்தாள். 365

சாதிப் பைம் பொன் தன் ஒளி வௌவித் தகை குன்றா
நீதிச் செல்வம் மேல் மேல் நீந்தி நிறைவு எய்திப்
போதிச் செல்வம் பூண்டவர் ஏத்தும் பொலிவினால்
ஆதி காலத்து அந்தணன் காதல் மகன் ஒத்தான். 366

நனம் தலை உலகில் மிக்க நல் நுதல் மகளிர் தங்கள்
மனம் தளை பரிய நின்ற மதலை மை ஆடுக என்றே
பொன் அம் கொடி இறைஞ்சி நின்று பூமகள் புலம்பி வைக
அனங்கனுக்கு அவலம் செய்யும் அண்ணல் நற்றாய் உரைத்தாள். 367

முழவு எனத் திரண்ட திண் தோள் மூரி வெம் சிலையினானும்
அழல் எனக் கனலும் வாள் கண் அவ் வளைத் தோளி னாளும்
மழலை யாழ் மருட்டும் தீம் சொல் மதலையை மயில் அம் சாயல்
குழை முக ஞானம் என்னும் குமரியைப் புணர்க்கல் உற்றார். 368


சீவக நம்பியும் அச்சணந்தி அடிகளும்

அரும் பொனும் மணியும் முத்தும் காணமும் குறுணி ஆகப்
பரந்து எலாப் பிரப்பும் வைத்துப் பைம் பொன் செய் தவிசின் உச்சி
இருந்து பொன் ஓலை செம் பொன் ஊசியால் எழுதி ஏற்பத்
திருந்து பொன் கண்ணியாற்குச் செல்வியைச் சேர்த்தினாரே. 369

நாமகள் நலத்தை எல்லாம் நயந்து உடன் பருகி நல் நூல்
ஏ முதல் ஆய எல்லாப் படைக் கலத் தொழிலும் முற்றிக்
காமனும் கனிய வைத்த புலம் கரை கண்டு கண் ஆர்
பூ மகள் பொலிந்த மார்பன் புவிமிசைத் திலம் ஒத்தான். 370

மின் தெளித்து எழுதி அன்ன விளங்கும் நுண் நுசுப்பின் நல்லார்
பொன் தெளித்து எழுதி அன்ன பூம் புறப் பசலை மூழ்கிக்
குன்று ஒளித்து ஒழிய நின்ற குங்குமத் தோளினாற்குக்
கன்று ஒளித்து அகல வைத்த கறவையில் கனிந்து நின்றார். 371

விலை பகர்ந்து அல்குல் விற்கும் வேலினும் வெய்ய கண்ணார்
முலை முகந்து இளையர் மார்பம் முரிவிலர் எழுதி வாழும்
கலை இகந்து இனிய சொல்லார் கங்குலும் பகலும் எல்லாம்
சிலை இகந்து உயர்ந்த திண் தோள் சீவகற்கு அரற்றி ஆற்றார். 372



சீவகன் வளர்தல்

வான் சுவை அமிர்த வெள்ளம் வந்து இவண் தொக்கது என்னத்
தான் சுவைக் கொண்டது எல்லாம் தணப்பு அறக் கொடுத்த பின்றைத்
தேன் சுவைத்து அரற்றும் பைந்தார்ச் சீவக குமரன் என்ற
ஊன் சுவைத்து ஒளிறும் வேலாற்கு உறுதி ஒன்று உரைக்கல் உற்றான். 373

நூல் நெறி வகையின் நோக்கி நுண்ணிதின் நுழைந்து தீமைப்
பால் நெறி பலவும் நீக்கிப் பருதி அம் கடவுள் அன்ன
கோன் நெறி தழுவி நின்ற குணத்தொடு புணரின் மாதோ
நால் நெறி வகையில் நின்ற நல் உயிர்க்கு அமிர்தம் என்றான். 374

அறிவினால் பெரிய நீரார் அருவினை கழிய நின்ற
நெறியினைக் குறுகி இன்ப நிறை கடல் அகத்து நின்றார்
பொறி எனும் பெயர ஐ வாய்ப் பொங்கு அழல் அரவின் கண்ணே
வெறி புலம் கன்றி நின்றார் வேதனைக் கடலுள் நின்றார். 375

கூற்றுவன் கொடியன் ஆகிக் கொலைத் தொழில் கருவி சூழ்ந்து
மாற்ற அரும் வலையை வைத்தான் வைத்ததை அறிந்து நாமும்
நோற்று அவன் வலையை நீங்கி நுகர்ச்சியில் உலகம் நோக்கி
ஆற்று உறப் போதல் தேற்றாம் அளியமோ? பெரியமே காண். 376

பேர் அஞர் இடும்பை எல்லாம் பிளந்திடும் பிறப்பு நீக்கும்
ஆர் அமிர்து அரிதில் பெற்றாம் அதன் பயன் கோடல் தேற்றாம்
ஓரும் ஐம் பொறியும் ஓம்பி உள பகல் கழிந்த பின்றைக்
கூர் எரி கவரும் போழ்தில் கூடுமோ குறித்த எல்லாம். 377

தழங்கு குரல் முரசின் சாற்றித் தத்துவம் தழுவல் வேண்டிச்
செழுங் களியாளர் முன்னர் இருள் அறச் செப்பினாலும்
முழங்கு அழல் நரகின் மூழ்கும் முயற்சியர் ஆகி நின்ற
கொழுங் களி உணர்வினாரைக் குணவதம் கொளுத்தல் ஆமோ. 378

பவழவாய்ச் செறுவு தன்னுள் நித்திலம் பயில வித்திக்
குழவிநாறு எழுந்து காளைக் கொழும் கதிர் ஈன்று பின்னாக்
கிழவு தான் விளைக்கும் பைங் கூழ் கேட்டிரேல் பிணி செய் பன்மா
உழவிர்காள்! மேயும் சீல வேலி உய்த்திடுமின் என்றான். 379

சூழ் கதிர் மதியம் அன்ன சுடர் மணிப் பூணினானும்
வீழ் தரு கதியின் நீங்கி விளங்கு பொன் உலகத்து உய்க்கும்
ஊழ் வினை துரத்தலானும் உணர்வு சென்று எறித்தலானும்
ஆழ் கடல் புணையின் அன்ன அறிவரன் சரண் அடைந்தான். 380

காட்சி நல் நிலையில் ஞானக் கதிர் மணிக் கதவு சேர்த்திப்
பூட்சி சால் ஒழுக்கம் என்னும் வயிரத் தாழ் கொளுவிப் பொல்லா
மாட்சியில் கதிகள் எல்லாம் அடைத்த பின் வரம்பு இல் இன்பத்து
ஆட்சியில் உலகம் ஏறத் திறந்தனன் அலர்ந்த தாரான். 381

நல் அறத்து இறைவன் ஆகி நால்வகைச் சரணம் எய்தித்
தொல் அறக் கிழமை பூண்ட தொடு கழல் காலினாற்குப்
புல் அற நெறிக் கண் நின்று பொருள் வயிற் பிழைத்த வாறும்
இல்லறத்து இயல்பும் எல்லாம் இருள் அறக் கூறி இட்டான். 382



அச்சணந்தி அடிகள், சீவகனது பிறப்பின் இரகசியத்தை அவனுக்கு உணர்த்துதல்

எரி முயங்கு இலங்கு வை வேல் இளையவர் குழாத்தின் நீங்கித்
திரு முயங்கு அலங்கல் மார்பின் சீவகன் கொண்டு வேறா
விரி மலர்க் கண்ணி கட்டி விழைதக வேய்ந்த போலும்
தெரி மலர்க் காவு சேர்ந்து பிறப்பினைத் தெருட்டல் உற்றான். 383

பூவையும் கிளியும் மன்னர் ஒற்றென புணர்க்கும் சாதி
யாவையும் இன்மை ஆராய்ந்து அம் தளிர்ப் பிண்டி நீழல்
பூ இயல் தவிசின் உச்சிப் பொலிவினோடு இருந்த போழ்தில்
ஏ இயல் சிலையினானை இப் பொருள் கேண்மோ என்றான். 384

வையகம் உடைய மன்னன் சச்சந்தன் அவற்குத் தேவி
பை விரி பசும்பொன் அல்குல் பைந்தொடி விசையை என்பாள்
செய் கழல் மன்னன் தேர்ந்து தேவியைப் பொறியில் போக்கி
மையல் கொள் நெஞ்சில் கல்லா மந்திரி விழுங்கப் பட்டான். 385

புலம்பொடு தேவி போகிப் புகற்கு அருங் காடு நண்ணி
வலம்புரி உலகம் விற்கும் மா மணி ஈன்றது என்ன
இலங்கு இழை சிறுவன் தன்னைப் பயந்து பூந் தவிசின் உச்சி
நலம் புரி நங்கை வைத்து நல் அறம் காக்க என்றாள். 386

வானத்தின் வழுக்கித் திங்கள் கொழுந்து மீன் குழாங்கள் சூழக்
கானத்தில் கிடந்ததே போல் கடல் அகம் உடைய நம்பி
தானத்து மணியும் தானும் இரட்டுறத் தோன்றி னானே
ஊனத்தில் தீர்ந்த சீர்த்தி உத்திரட்டாதி யானே. 387

அருந் தவன் முந்து கூற அலங்கல் வேல் நாய்கன் சென்று
பொருந்துபு சிறுவன் கொண்டு பொலிவொடு புகன்று போகத்
திருந்திய நம்பி ஆரத் தும்மினன் தெய்வம் வாழ்த்திற்று
அரும் பொனாய் கேண்மோ என்றான் அலை கடல் விருப்பில் கொண்டாள். 388

கரியவன் கன்னற்கு அன்று பிறப்பினைத் தேற்றி ஆங்கு அப்
பெரியவன் யாவன் என்ன நீ எனப் பேசலோடும்
சொரி மலர்த் தாரும் பூணும் ஆரமும் குழையும் சோரத்
திரு மலர்க் கண்ணி சிந்தத் தெருமந்து மயங்கி வீழ்ந்தான். 389

கற்பகம் கலங்கி வீழ்ந்த வண்ணம் போல் காளை வீழச்
சொல் பகர் புலவன் வல்லே தோன்றலைச் சார்ந்து புல்லி
நல் பல குழீஇய தம்மால் நவை அறத் தேற்றத் தேறிக்
கல் புனை திணி திண் தோளான் கவலை நீர்க் கடலுள் பட்டான். 390

இனையை நீ ஆயது எல்லாம் எம்மனோர் செய்த பாவம்
நினையல் நீ நம்பி என்று நெடுங் கண் நீர் துடைத்து நீவிப்
புனை இழை மகளிர் போலப் புலம்பல் நின் பகைவன் நின்றான்
நினைவு எலாம் நீங்குக என்ன நெடும் தகை தேறினானே. 391

மலை பக இடிக்கும் சிங்கம் மடங்கலின் மூழங்கி மாநீர்
அலை கடல் திரையின் சீறி அவன் உயிர் பருகல் உற்றுச்
சிலையொடு பகழி ஏந்திக் கூற்று எனச் சிவந்து தோன்றும்
இலை உடைக் கண்ணியானை இன்னணம் விலக்கினானே. 392

வேண்டுவல் நம்பி யான் ஓர் விழுப் பொருள் என்று சொல்ல
ஆண் தகைக் குரவீர் கொண்மின் யாது நீர் கருதிற்று என்ன
யாண்டு நேர் எல்லை ஆக அவன் திறத்து அழற்சி இன்மை
வேண்டுவல் என்று சொன்னான் வில் வலான் அதனை நேர்ந்தான். 393

வெவ் வினை வெகுண்டு சாரா விழுநிதி அமிர்தம் இன்னீர்
கவ்விய எஃகின் நின்ற கயக்கமில் நிலைமை நோக்கி
அவ்வியம் அகன்று பொங்கும் அழல் படு வெகுளி நீக்கி
இவ் இயல் ஒருவற்கு உற்றது இற்றெனக் கிளக்கல் உற்றான். 394


அச்சணந்தி அடிகள் தன் வரலாறு கூறுதல்

வான் உறை வெள்ளி வெற்பின் வாரணவாசி மன்னன்
ஊன் உறை பருதி வெள் வேல் உலோகமா பாலன் என்பான்
தேன் உறை திருந்து கண்ணிச் சிறுவனுக்கு அரசு நாட்டிப்
பால் நிறக் குருகின் ஆய்ந்து பண்ணவர் படிவம் கொண்டான். 395

வெம் சினம் குறைந்து நீங்க விழுத் தவம் தொடங்கி நோற்கும்
வஞ்சம் இல் கொள்கையாற்குப் பாவம் வந்து அடைந்தது ஆகக்
குஞ்சரம் முழங்கு தீயில் கொள்கையின் மெலிந்து இம் மூதூர்
மஞ்சு தோய் குன்றம் அன்ன மாட வீட்டு அகம் புகுந்தான். 396

உரை விளையாமை மைந்தன் கேட்கிய உவந்து நோக்கி
வரை விளையாடு மார்பன் 'யார் அவன் வாழி' என்ன
'விரை விளையாடும் தாரோய் யான்' என விரும்பித் தீம்பால்
'திரை விளை அமிர்தம் அன்ன கட்டுரை செல்க' என்றான். 397

பூத் தின்று புகன்று சேதாப் புணர் முலை பொழிந்த தீம்பால்
நீத்து அறச் செல்ல வேவித்து அட்ட இன் அமிர்தம் உண்பான்
பாத்தரும் பசும் பொன் தாலம் பரப்பிய பைம் பொன் பூமி
ஏத்த அரும் தவிசின் நம்பி தோழரொடு ஏறினானே. 398

புடை இரு குழையும் மின்னப் பூந்துகில் செறிந்த அல்குல்
நடை அறி மகளிர் ஏந்த நல் அமிர்து உண்ணும் போழ்தின்
இடை கழி நின்ற என்னை நோக்கிப் போந்து ஏறுக என்றான்
கடல் கெழு பருதி அன்ன பொன் கலத்து எனக்கும் இட்டார். 399

கை கவி நறு நெய் பெய்து கன்னல் அம் குடங்கள் கூட்டிப்
பெய் பெய் என்று உரைப்ப யானும் பெருங் கடல் வெள்ளிக் குன்றம்
பெய்து தூர்க்கின்ற வண்ணம் விலாப் புடை பெரிதும் வீங்க
ஐயன் அது அருளினால் யான் அந்தணர் தொழிலன் ஆனேன். 400

சுரும்பு உடை அலங்கல் மாலைச் சுநந்தையும் துணைவன் தானும்
விரும்பினர் எதிர் கொண்டு ஓம்ப வேழ வெந்தீயின் நீங்கி
இருந்தனன் ஏம முந் நீர் எறி சுறவு உயர்த்த தோன்றல்
கரும்பு உடைக் காளை அன்ன காளை நின் வலைப் பட்டு என்றான். 401

நிலம் பொறுக்கலாத செம் பொன் நீள் நிதி நுந்தை இல்லம்
நலம் பொறுக்கலாத பிண்டி நான் முகன் தமர்கட்கு எல்லாம்
உலம் பொறுக்கலாத தோளாய் ஆதலால் ஊடு புக்கேன்
கலம் பொறுக்கலாத சாயல் அவர் உழை நின்னைக் கண்டேன். 402

ஐயனைக் கண்ணில் காண யானைத்தீ அதகம் கண்ட
பை அணல் நாகம் போல வட்க யான் பெரிதும் உட்கித்
தெய்வம் கொல் என்று தேர்வேற்கு அமிர்து உலாய் நிமிர்ந்ததே போல்
மொய் குரல் முரசம் நாணும் தழங்கு குரல் முழங்கக் கேட்டேன். 403

கோட்டு இளந் திங்கள் சூழ்ந்து குலவிய திருவில் போல
மோட்டு ஒளி முத்தம் சூழ்ந்து முருகு கொப்பளிக்கும் தாரோய்
கேட்டு அளப் பரிய சொல்லும் கிளர் ஒளி வனப்பும் நின்னைச்
சேட்டு இளஞ் சிங்கம் அன்னாய் சாதகம் செய்த என்றான். 404 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;