ஊரினது செழிப்பு
புன் கொடி முசுண்டைப் பொறிப் புற வான் பூ,
பொன் போல் பீரமொடு, புதல்புதல் மலர;
பைங் காற் கொக்கின் மென் பறைத் தொழுதி, 15
இருங் கனி பரந்த ஈர வெண் மணல்,
செவ் வரி நாரையொடு, எவ் வாயும் கவர
கயல் அறல் எதிர, கடும் புனல் சாஅய்ப்
பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண் மழை
அகல் இரு விசும்பில் துவலை கற்ப; 20
அம் கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த
வண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க;
முழு முதல் கமுகின் மணி உறழ் எருத்தின்
கொழு மடல் அவிழ்ந்த குழூஉக் கொள் பெருங் குலை,
நுண் நீர் தெவிள வீங்கி, புடை திரண்டு, 25
தெண் நீர்ப் பசுங் காய், சேறு கொள முற்ற;
நளி கொள் சிமைய, விரவு மலர், வியன் காக்
குளிர் கொள் சினைய குரூஉத் துளி தூங்க
முழுவலி மாக்கள் தெருக்களில் சுற்றித் திரிதல்
மாடம் ஓங்கிய மல்லல் மூதூர்,
ஆறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில், 30
படலைக் கண்ணி, பரு ஏர் எறுழ்த் திணி தோள்,
முடலை யாக்கை, முழு வலி மாக்கள்
வண்டு மூசு தேறல் மாந்தி, மகிழ் சிறந்து,
துவலைத் தண் துளி பேணார், பகல் இறந்து,
இரு கோட்டு அறுவையர், வேண்டு வயின் திரிதர 35
மாலைக் காலத்தில் பெண்கள் தெய்வத்தை வணங்குதல்
வெள்ளி வள்ளி வீங்கு இறைப் பணைத் தோள்,
மெத்தென் சாயல், முத்து உறழ் முறுவல்,
பூங் குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழைக் கண்,
மடவரல் மகளிர் பிடகைப் பெய்த
செவ்வி அரும்பின், பைங் கால் பித்திகத்து, 40
அவ் இதழ் அவிழ் பதம் கமழ, பொழுது அறிந்து,
இரும்பு செய் விளக்கின் ஈர்ந் திரிக் கொளீஇ,
நெல்லும் மலரும் தூஉய், கைதொழுது,
மல்லல் ஆவணம் மாலை அயர
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.