'மனை இள நொச்சி மௌவல் வால் முகைத்
துணை நிரைத்தன்ன, மா வீழ், வெண் பல்,
அவ் வயிற்று, அகன்ற அல்குல், தைஇத்
தாழ் மென் கூந்தல், தட மென் பணைத் தோள்,
5 மடந்தை மாண் நலம் புலம்ப, சேய் நாட்டுச்
செல்லல்' என்று, யான் சொல்லவும், ஒல்லாய்,
வினை நயந்து அமைந்தனை ஆயின், மனை நகப்
பல் வேறு வெறுக்கை தருகம் வல்லே,
எழு இனி, வாழி, என் நெஞ்சே! புரி இணர்
10 மெல் அவிழ் அம் சினை புலம்ப, வல்லோன்
கோடு அறை கொம்பின் வீ உகத் தீண்டி,
மராஅம் அலைத்த மண வாய்த் தென்றல்,
சுரம் செல் மள்ளர் சுரியல் தூற்றும்,
என்றூழ் நின்ற புன் தலை வைப்பில்,
15 பருந்து இளைப்படூஉம் பாறு தலை ஓமை
இருங் கல் விடரகத்து, ஈன்று இளைப்பட்ட,
மென் புனிற்று அம் பிணவு பசித்தென, பைங் கட்
செந்நாய் ஏற்றை கேழல் தாக்க,
இரியற் பிணவல் தீண்டலின், பரீஇச்
20 செங் காய் உதிர்ந்த பைங் குலை ஈந்தின்
பரல் மண் சுவல முரண் நிலம் உடைத்த
வல் வாய்க் கணிச்சி, கூழ் ஆர், கோவலர்
ஊறாது இட்ட உவலைக் கூவல்,
வெண் கோடு நயந்த அன்பு இல் கானவர்
25 இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழி செத்து,
இருங் களிற்று இன நிரை, தூர்க்கும்
பெருங் கல் அத்தம் விலங்கிய காடே.
பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துநின்று மீளலுற்ற நெஞ்சினைக் கழறியது
பாலை
காவன் முல்லைப் பூதனார்
22. தோழி கூற்று (அ) தலைவி கூற்று
'அணங்குடை நெடு வரை உச்சியின் இழிதரும்
கணம் கொள் அருவிக் கான் கெழு நாடன்
மணம் கமழ் வியல் மார்பு அணங்கிய செல்லல்
இது என அறியா மறுவரற் பொழுதில்,
5 படியோர்த் தேய்த்த பல் புகழ்த் தடக் கை
நெடு வேட் பேணத் தணிகுவள் இவள்' என,
முது வாய்ப் பெண்டிர் அது வாய் கூற,
களம் நன்கு இழைத்து, கண்ணி சூட்டி,
வள நகர் சிலம்பப் பாடி, பலி கொடுத்து,
10 உருவச் செந்தினை குருதியொடு தூஉய்,
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு நடு நாள்,
ஆரம் நாற, அரு விடர்த் ததைந்த
சாரற் பல் பூ வண்டு படச் சூடி,
களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின்
15 ஒளித்து இயங்கும் மரபின் வயப் புலி போல,
நல் மனை நெடு நகர்க் காவலர் அறியாமை
தன் நசை உள்ளத்து நம் நசை வாய்ப்ப,
இன் உயிர் குழைய முயங்குதொறும் மெய்ம் மலிந்து,
நக்கனென் அல்லெனோ யானே எய்த்த
20 நோய் தணி காதலர் வர, ஈண்டு
ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே?
வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்து, தலைமகள் ஆற்றாளாக, தோழி
தலைமகனை இயற்பழிப்ப, தலைமகள் இயற்பட மொழிந்தது; தலைமகன் இரவுக்குறி வந்து
சிறைப்புறத்தானாக, தோழியாற் சொல்லெடுக்கப்பட்டுத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்
குறிஞ்சி
வெறிபாடிய காமக்கண்ணியார்
23. தலைவி கூற்று
மண்கண் குளிர்ப்ப, வீசித் தண் பெயல்,
பாடு உலந்தன்றே, பறைக் குரல் எழிலி;
புதல்மிசைத் தளவின் இதல் முட் செந் நனை
நெருங்கு குலைப் பிடவமொடு ஒருங்கு பிணி அவிழ,
5 காடே கம்மென்றன்றே; அவல,
கோடு உடைந்தன்ன கோடற் பைம் பயிர்,
பதவின் பாவை, முனைஇ, மதவு நடை
அண்ணல் இரலை அமர் பிணை தழீஇ,
தண் அறல் பருகித் தாழ்ந்துபட்டனவே;
10 அனைய கொல் வாழி, தோழி! மனைய
தாழ்வின் நொச்சி, சூழ்வன மலரும்
மௌவல், மாச் சினை காட்டி,
அவ்அளவு என்றார், ஆண்டுச் செய் பொருளே!
தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது
பாலை
ஒரோடோ கத்துக் கந்தரத்தனார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.