வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த
வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன,
தலை பிணி அவிழா, சுரி முகப் பகன்றை,
சிதரல் அம் துவலை தூவலின், மலரும்
5 தைஇ நின்ற தண் பெயல் கடைநாள்,
வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை,
விசும்பு உரிவதுபோல், வியல் இடத்து ஒழுகி,
மங்குல் மா மழை, தென் புலம் படரும்
பனி இருங் கங்குலும் தமியள் நீந்தி,
10 தம் ஊரோளே, நன்னுதல்; யாமே,
கடி மதில் கதவம் பாய்தலின், தொடி பிளந்து,
நுதி முகம் மழுகிய மண்ணை வெண் கோட்டு,
சிறு கண் யானை நெடு நா ஒண் மணி,
கழிப் பிணிக் கறைத் தோல் பொழி கணை உதைப்பு,
15 தழங்குகுரல் முரசமொடு முழங்கும் யாமத்து,
கழித்து உறை செறியா வாளுடை எறுழ்த் தோள்,
இரவுத் துயில் மடிந்த தானை,
உரவுச் சின வேந்தன் பாசறையேமே.
தலைமகன் பருவங் கண்டு சொல்லியது. வினைமுற்றும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம்
முல்லை
ஆவூர் மூலங் கிழார்
25. தோழி கூற்று
"நெடுங் கரைக் கான்யாற்றுக் கடும் புனல் சாஅய்,
அவிர் அறல் கொண்ட விரவு மணல் அகன் துறைத்
தண் கயம் நண்ணிய பொழில்தொறும், காஞ்சிப்
பைந் தாது அணிந்த போது மலி எக்கர்,
5 வதுவை நாற்றம் புதுவது கஞல,
மா நனை கொழுதிய மணி நிற இருங் குயில்
படு நா விளி யானடுநின்று, அல்கலும்
உரைப்ப போல, ஊழ் கொள்பு கூவ,
இனச் சிதர் உகுத்த இலவத்துஆங்கண்,
10 சினைப் பூங் கோங்கின் நுண் தாது பகர்நர்
பவளச் செப்பில் பொன் சொரிந்தன்ன,
இகழுநர் இகழா இள நாள் அமையம்
செய்தோர் மன்ற குறி" என, நீ நின்
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப,
15 வாராமையின் புலந்த நெஞ்சமொடு,
நோவல், குறுமகள்! நோயியர், என் உயிர்!' என,
மெல்லிய இனிய கூறி, வல்லே
வருவர் வாழி தோழி! பொருநர்
செல் சமம் கடந்த வில் கெழு தடக் கைப்
20 பொதியிற் செல்வன், பொலந்தேர்த் திதியன்,
இன் இசை இயத்தின் கறங்கும்
கல்மிசை அருவிய காடு இறந்தோரே.
பருவங் கண்டு அழிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது
பாலை
ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன்
26. தலைவி கூற்று
கூன் முள் முள்ளிக் குவிகுலைக் கழன்ற,
மீன் முள் அன்ன, வெண் கால் மா மலர்
பொய்தல் மகளிர் விழவு அணிக் கூட்டும்
அவ் வயல் நண்ணிய வளம் கேழ் ஊரனைப்
5 புலத்தல் கூடுமோ தோழி! அல்கல்
பெருங் கதவு பொருத யானை மருப்பின்
இரும்பு செய் தொடியின் ஏர ஆகி,
மாக் கண் அடைய மார்பகம் பொருந்தி
முயங்கல் விடாஅல் இவை' என மயங்கி,
10 'யான் ஓம்' என்னவும் ஒல்லார், தாம் மற்று
இவை பாராட்டிய பருவமும் உளவே; இனியே
புதல்வற் தடுத்த பாலொடு தடைஇ,
திதலை அணிந்த தேம் கொள் மென் முலை
நறுஞ் சாந்து அணிந்த கேழ் கிளர் அகலம்
15 வீங்க முயங்கல் யாம் வேண்டினமே;
தீம் பால் படுதல் தாம் அஞ்சினரே; ஆயிடைக்
கவவுக் கை நெகிழ்ந்தமை போற்றி, மதவு நடைச்
செவிலி கை என் புதல்வனை நோக்கி,
'நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர்; இஃதோ
20 செல்வற்கு ஒத்தனம், யாம்' என, மெல்ல என்
மகன்வயின் பெயர்தந்தேனே; அது கண்டு,
'யாமும் காதலம், அவற்கு' எனச் சாஅய்,
சிறு புறம் கவையினனாக, உறு பெயல்
தண் துளிக்கு ஏற்ற பல உழு செஞ் செய்
25 மண் போல் நெகிழ்ந்து, அவற் கலுழ்ந்தே
நெஞ்சு அறைபோகிய அறிவினேற்கே?
தலைமகன் தோழியை வாயில் வேண்டி, அவளால் தான் வாயில் பெறாது,
ஆற்றாமையே வாயிலாகப் புக்கு, கூடிய தலைமகன் நீக்கத்துக்கண் புக்க
தோழிக்குத் தலைமகள் சொல்லியது
மருதம்
பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதி
27. தோழி கூற்று
"கொடு வரி இரும் புலி தயங்க, நெடு வரை
ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும்
கானம் கடிய என்னார், நாம் அழ,
நின்றது இல் பொருட் பிணிச் சென்று இவண் தருமார்,
5 செல்ப" என்ப என்போய்! நல்ல
மடவை மன்ற நீயே; வடவயின்
வேங்கடம் பயந்த வெண் கோட்டு யானை,
மறப் போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும்
கொற்கை அம் பெரும் துறை முத்தின் அன்ன
10 நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய்
தகைப்பத் தங்கலர்ஆயினும், இகப்ப
யாங்ஙனம் விடுமோ மற்றே தேம் படத்
தெள் நீர்க்கு ஏற்ற திரள் காற் குவளைப்
பெருந்தகை சிதைத்தும், அமையா, பருந்து பட,
15 வேத்து அமர்க் கடந்த வென்றி நல் வேல்
குருதியொடு துயல்வந்தன்ன நின்
அரி வேய் உண்கண் அமர்த்த நோக்கே?
செலவு உணர்ந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது
பாலை
மதுரைக் கணக்காயனார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.