நாளங்காடியில் பூ முதலிய பொருள்களை விற்றல்
தீம் புழல் வல்சிக் கழல் கால் மழவர் 395
பூந் தலை முழவின் நோன் தலை கடுப்ப,
பிடகைப் பெய்த கமழ் நறும் பூவினர்,
பல வகை விரித்த எதிர் பூங் கோதையர்,
பலர் தொகுபு இடித்த தாது உகு சுண்ணத்தர்,
தகை செய் தீம் சேற்று இன் நீர்ப் பசுங் காய், 400
நீடு கொடி இலையினர், கோடு சுடு நூற்றினர்,
இரு தலை வந்த பகை முனை கடுப்ப,
இன் உயிர் அஞ்சி, இன்னா வெய்து உயிர்த்து,
ஏங்குவனர் இருந்து, அவை நீங்கிய பின்றை,
பல் வேறு பண்ணியம் தழீஇத் திரி விலைஞர், 405
மலை புரை மாடத்துக் கொழு நிழல் இருத்தர
முது மகளிர் நுகர்பொருள்களை ஏந்தித் திரிதல்
இருங் கடல் வான் கோடு புரைய, வாருற்றுப்
பெரும் பின்னிட்ட வால் நரைக் கூந்தலர்,
நன்னர் நலத்தர், தொல் முது பெண்டிர்
செந் நீர்ப் பசும் பொன் புனைந்த பாவை 410
செல் சுடர்ப் பசு வெயில் தோன்றியன்ன
செய்யர், செயிர்த்த நோக்கினர், மடக் கண்,
ஐஇய கலுழும் மாமையர், வை எயிற்று
வார்ந்த, வாயர், வணங்கு இறைப் பணைத் தோள்,
சோர்ந்து உகுவன்ன வயக்குறு வந்திகை, 415
தொய்யில் பொறித்த சுணங்கு எதிர் இள முலை,
மை உக்கன்ன மொய் இருங் கூந்தல்,
மயில் இயலோரும், மட மொழியோரும்,
கைஇ, மெல்லிதின் ஒதுங்கி, கை எறிந்து,
கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்ப, 420
புடை அமை பொலிந்த வகை அமை செப்பில்
காமர் உருவின் தாம் வேண்டு பண்ணியம்
கமழ் நறும் பூவொடு மனைமனை மறுக
திருவிழாக் காட்சிகள்
ஏழாம் நாளில் தீர்த்த நீரில் ஆடுதல்
மழை கொளக் குறையாது, புனல் புக மிகாது,
கரை பொருது இரங்கும் முந்நீர் போல, 425
கொளக் கொளக் குறையாது, தரத் தர மிகாது,
கழுநீர் கொண்ட எழு நாள் அந்தி,
ஆடு துவன்று விழவின், நாடு ஆர்த்தன்றே
மாடம் பிறங்கிய மலி புகழ்க் கூடல்,
நாள்அங்காடி நனந் தலைக் கம்பலை. 430
செல்வர்கள் செல்லும் நிலை
வெயில் கதிர் மழுங்கிய படர் கூர் ஞாயிற்றுச்
செக்கர் அன்ன, சிவந்து நுணங்கு உருவின்,
கண் பொருபு உகூஉம் ஒண் பூங் கலிங்கம்,
பொன் புனை வாளொடு பொலியக் கட்டி,
திண் தேர்ப் பிரம்பின் புரளும் தானை, 435
கச்சம் தின்ற கழல் தயங்கு திருந்து அடி,
மொய்ம்பு இறந்து திரிதரும் ஒரு பெருந் தெரியல்,
மணி தொடர்ந்தன்ன ஒண் பூங் கோதை,
அணி கிளர் மார்பின் ஆரமொடு அளைஇ,
கால் இயக்கு அன்ன கதழ் பரி கடைஇ, 440
காலோர் காப்ப, கால் எனக் கழியும்
வான வண் கை வளம் கெழு செல்வர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.