இருவரும் ஊடல் தீர்ந்து கூடுதல்
நங்கைதன் மனங்கலங்கா நலம்புகழ்ந் தூடனீக்கி வெங்களி யானை மற்றப் பிடியொடு மகிழ்வ வேபோற் பொங்கிள முலையில் வாசப் பூசுசாந் தழியப் புல்லிச் சிங்கவே றனைய காளை செல்வியைச் சேர்ந்தானன்றே. | 203 |
உருவிலி மதன்கணைகளுற்றுடன் சொரியப் பாய இருவரும் பவளச் செவ்வா யின்னமிர் துண்டு வேல்போல் திரிநெடுங் கண்சி வப்ப வடிச்சிலம் போசை செய்ய மருவிய வண்டு நீங்க மலர்க்குழல் சரிய வன்றே. | 204 |
கோதையுஞ் சுண்ணத் தாதுங் குலைந்துடன் வீழ மிக்க காதலிற் கழுமி யின்பக் கரையழிந் தினிதினோடப் போதவும் விடாது புல்லிப் புரவலனினியனாகி ஏதமொன் றின்றிச் செங்கோ லினிதுடன் செலுத்து நாளில். | 205 |
உதயணன் உருமண்ணுவாவைச் சிறப்பித்தல்
ஆனதன்னாம மிட்ட வாழிமோ திரத்தை யீந்தே ஊனுமிழ் கதிர்வேன் மன்னனுருமண்ணுவாவு தன்னைச் சேனைநற்பதிநீ யென்று திருநிகர் பதுமை தோழி ஈனமி விராசனைய யெழில்வேள்வி யாற்கொ டுத்தான் . | 206 |
உருமண்ணுவாவிற்கும் இடபகனுக்கும் உதயணன் ஊர் வழங்குதல்
சயந்தியம் பதியுஞ் சால விலாவாண நகரு மீந்தே இயைந்தநல் லிடபகற்கு மினியபுட் பகத்தைச் சூழ்ந்த செயந்தரு வளநன்னாடு சிறந்தவைம் பதும் அளித்து வயந்தகன் றனக்கு வாய்ந்த பதினெட்டூர் கொடுத்தானன்றே. | 207 |
யூகிக்கு உதயணன் ஊர் வழங்குதல்
ஆதிநன் மாமன் வைத்த வருந்திறை யளக்கு நல்ல சேதிநன்னாட்டை யூகிக் காக நற்றிறத்தினீந்து சோதிநல்லரசன் மிக்க சூழ்ச்சியின் மற்றோர்க் கெல்லாம் வீதி நன்னகர்கள் விட்டு வீறுடன் வீற்றிருந்தான். | 208 |
உதயணனுக்கு பிரச்சோதனன் ஓலையனுப்புதல்
பேசரும் பெருமை சால்ப்ரச் சோதனன் தூதர் வந்து வாசகம் தன்னைக் காட்ட வத்தவன் மனம் மகிழ்ந்து வாசவ தத்தை யோடு மன்னிய வமைச்சர் கூட வாசகஞ் சொல்க வென்று வரிசையிற் கேட்கின்றானே. | 209 |
ஓலையில் வந்த செய்தி
பிரச்சோதன னன்றா னென்னும் பெருமகனோலை தன்னை உரவுச்சேர் கழற்கான் மிக்க வுதயண குமரன் காண்க வரவுச்சீர்க் குருகுலத்தின் வண்மையான் கோடல் வேண்டி வரைவனச் சார றன்னில் வன்பொறி யானை விட்டேன். | 210 |
கலந்தவை காண வந்த காவலர் நின்னைப் பற்றிச் சிலந்திநூ றன்னா லார்த்த சிங்கம்போ லார்த்துக் கொண்டு நலந்திகழ் தேரினேற்றி நன்குவுஞ் சயினி தன்னிற் பெலந்திரி சிறையில் வைத்த பிழையது பொறுக்க வென்றும். | 211 |
கோமானே யெனவே யென்னைக் கோடனீ வேண்டு மென்றும் மாமனான் மருகனீ யென் மாமுறை யாயிற் றென்றும் ஆமாகும் யூகி தன்னை யனுப்ப யான் காண்டல் வேண்டும் பூமாலை மார்ப வென்றும் பொறித்தவா சகத்தைக் கேட்டான். | 212 |
உஞ்சைக்குச் சென்ற யூகியை பிரச்சோதனன் வரவேற்றல்
மன்னவனனுப்ப யூகி மாநக ருஞ்சை புக்கு மன்னர்மா வேந்தன் றன்னை வணங்கினன் கண்டிருப்ப மன்னனு முடிய சைத்த மைச்சனை நெடிது நோக்கி மன்னிய வுவகை தன்னான் மகிழ்வுரை விளம்பினானே. | 213 |
பிரச்சோதனன் முரசறைவித்தல்
சீர்ப்பொழி லுஞ்சையுஞ் சீர்க்கெள சாம்பியும் பார்தனில் வேற்றுமை பண்ணுதல் வேண்டோம் ஆர்மிகு முரச மறைகென நகரில் தார்மிகு வேந்தன் றரத்தினிற் செப்பினன். | 214 |
யூகியின் சொற்போர் வெற்றியும், மன்னனின் பாராட்டும்
தருமநன்னூல்வகை சாலங் காயனோ டருமதி யூகியு மன்பினுரைத்தான் பெருவிறல் வேந்தனும் பெறுத லரிதெனத் திருநிறை யூகியைச் செல்வன் மகிழ்ந்தான். | 215 |
கல்விய தகலமுங் காட்சிக் கினிமையும் சொல்லருஞ் சூட்சியுஞ் சொற் பொருட் டிண்மையும் வல்லமை யிவனலான் மாந்த ரில்லையின் றெல்லையில் குணத்தினன் என்றுரை செய்தனன். | 216 |
இன்னவற் பெற்றவர்க் கேற்ற வரசியல் இன்னவ ரின்றி யிலையர சென்றே இன்னன நீடிய வியல் பிற் பிறவுரை மன்னவனாடி மகிழ்வித் திருந்த பின் 217 |
யூகியின் திருமணம்
சாலங் காயன் சகோதர மானநன் னீலங் காய்ந்த நெடுவேல் விழிநுதற் பாலங் கோர்பிறை யாம்படா வெம்முலைக் கோலங் காரன்ன கூரெயி றாப்பியும். | 218 |
பரதகன்றங்கை பான்மொழி வேற்கணி திருநிலம்புகழ் திலதமா சேனையும் பெருநில மறிய மணமிகப் பெற்றுடன் அரிய யூகிக் கரசன் கொடுத்தளன். | 219 |
சென்மதி நீயெனச் செல்ல விடுத்தனன் நன்முது நகர்முன்னாடிப் போவெனப் பன்மதி சனங்கள் பரவி வழிபட வென்மதி யூகிபோய் வேந்தனைக் கண்டனன். | 220 |
யூகி உதயணனை அடைதல்
வத்தவ குமரன் பாதம் வந்தனை செய்த மைச்சன் இத்தல முழுது மாளுமினியநன் மாமன் சொன்ன ஒத்தநன் மொழியைக் கேட்டே யுவந்துடனிருந்த போழ்தில் சித்திரப் பாவை மார்கள் செல்வனை வணங்கிச் செல்வார். | 221 |
உதயணன் மாந்தர்களின் பந்து விளையாட்டைக் காணல்
பந்தடி காண்க வென்னப் பார்த்திபனினியனாகிக் கலந்துகப் பூசல் காணக் களிற்றின்மீதேறி வந்து கொந்தலர் மாலை மாதர் குழுவுடன் சூழ நிற்ப வந்தனன் பதுமை தோழி வனப்பிராசனையென் பாளாம். | 222 |
மகளிரின் பந்துப் போர்
ஓரெழுபந்து கொண்டே யொன்றொன்றி நெற்றிச் செல்ல பாரெழு துகளு மாடப் பலகலனொலிப்ப வாடிச் சீரெழு மாயி ரங்கை சிறுந்தவ ளடித்துவிட்டாள் காரெழு குழலி நல்ல காஞ்சன மாலை வந்தாள். | 223 |
வேய்மிகு தடக்கை தன்னால் வியந்துபந் துடனே யேந்திக் காய்பொனின் கலன்களார்ப்பக் கார்மயிலாட்டம் போல ஆயிரத் தைஞ்நூறேற்றி யடித்தன ளகல வப்பால் ஆய்புகழ்ப் பதுமை தாதி யயிராபதிபந்து கொண்டாள். | 224 |
சீரேறும் இமில் போற் கொண்டைச் சில்வண்டுந் தேனும் பாடப் பாரோர்கள் இனிது நோக்கும் பலகலஞ் சிலம்போடார்ப்ப ஈராயிரங்கை யேற்றி யிருகரத் தடித்து விட்டாள் தோராத வழகி தத்தை தோழிவிச்வ லேகை வந்தாள். | 225 |
கருங்குழ நெடுவேற் கண்ணாள் காரிகை பந்தெடுத்துப் பெருங்கலனினிதினார்ப்பப் பெய்வளை கலக லென்ன ஒருங்குமுன் கையின் மீதி லோரைஞ் நூ றடிட்த்து விட்டாள் கருங்கணி பதுமை தோழி காரிகை யொருத்தி வந்தாள். | 226 |
ஆரியை யென்னு நாம வரிவைகைக் கொண்டு பந்தைச் சேரமின் சிலம்பு மார்ப்பச் சிறுநுதன் முத்த ரும்பச் சீரின்மூவாயிரங்கை சிறந்தவ ளடித்த பின்பு பேரிசைத் தத்தை யாயம் பெருங்குழாத் தினிதினோக்கா. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.