கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

புதன், 14 மார்ச், 2012

குறுந்தொகை-35

133. குறிஞ்சி

புனவன் துடவைப் பொன்போல் சிறுதினை
கிளி குறைத்து உண்ட கூழை இருவி
பெரும் பெயல் உண்மையின் இலை ஒலித்தாங்கு, என்
உரம் செத்தும் உளெனே-தோழி!-என்
நலம் புதிது உண்ட புலம்பினானே.
வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் சொல்லியது
உறையூர் முதுகண்ணன் சாத்தன்

134. குறிஞ்சி

அம்ம வாழி-தோழி!-நம்மொடு
பிரிவு இன்று ஆயின் நன்றுமன் தில்ல-
குறும் பொறைத் தடைஇய நெடுந் தாள் வேங்கைப்
பூவுடை அலங்கு சினை புலம்பத் தாக்கிக்
கல்பொருது இரங்கும் கதழ் வீழ் அருவி,
நிலம் கொள் பாம்பின், இழிதரும்
விலங்கு மலை நாடனொடு கலந்த நட்பே.
வரைவிடை ஆற்றாளாகிய தலைமகள் ஆற்றுவிக்கும் தோழிக்குச் சொல்லியது
கோவேங்கைப் பெருங்கதவன்



135. பாலை

"வினையே ஆடவர்க்கு உயிரே; வாள் நுதல்
மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர்" என,
நமக்கு உரைத்தோரும் தாமே,
அழாஅல்-தோழி!-அழுங்குவர் செலவே.
"தலைமகன் பிரியும்" என வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது
பாலை பாடிய பெருங்கடுங்கோ.

136. குறிஞ்சி

"காமம் காமம்" என்ப; காமம்
அணங்கும் பிணியும் அன்றே; நுணங்கிக்
கடுத்தலும் தணிதலும் இன்றே; யானை
குளகு மென்று ஆள் மதம் போலப்
பாணியும் உடைத்து, அது காணுநர்ப் பெறினே.
தலைமகன் பாங்கற்கு உரைத்தது
மிளைப்பெருங் கந்தன்

137. பாலை

மெல் இயல் அரிவை! நின் நல் அகம் புலம்ப,
நிற் துறந்து அமைகுவென் ஆயின்-எற் துறந்து
இரவலர் வாரா வைகல்
பல ஆகுக!-யான் செலவுற தகவே.
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிவச்சம் உரைத்தது
பாலை பாடிய பெருங்கடுங்கோ

138. குறிஞ்சி

கொன் ஊர் துஞ்சினும், யாம் துஞ்சலமே-
எம் இல் அயலது ஏழில் உம்பர்,
மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே.
ஊர் துஞ்சிய மரம் பூவின் பாடு கேட்டுத் துஞ்சும் முதல் நாள் உரியவிடத்தே வந்து தலைவியைக் காணாதவன் மறுநாள் அணிமையில் வந்து நிற்கத் தலைவி நேற்றிரவு ஈங்கு அவா வந்திலர் என்றாள்
கொல்லன் அழிசி

139. மருதம்

மனை உறை கோழிக் குறுங் கால் பேடை,
வேலி வெருகினம் மாலை உற்றென,
புகும் இடன் அறியாது தொகுபு உடன் குழீஇ
பைதற் பிள்ளைக் கிளை பயிர்ந்தா அங்கு
இன்னாது இசைக்கும் அம்பலொடு
வாரல், வாழியர்!-ஐய!-எம் தெருவே.
வாயில் வேண்டி புக்க தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது
ஒக்கூர் மாசாத்தியார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;