102. நெய்தல்
உள்ளின், உள்ளம் வேமே; உள்ளாது
இருப்பின், எம் அளவைத்து அன்றே; வருத்தி
வான் தோய்வற்றே, காமம்;
சான்றோர் அல்லர், யாம்மரீஇயோரே.
"ஆற்றாள்" எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி, "யான் யாங்ஙனம் ஆற்றுவேன்?" என்றது
ஒளவையார்
103. நெய்தல்
கடும்புனல் தொடுத்த நடுங்கு அஞர் அள்ளல்,
கவிர் இதழ் அன்ன தூவி செவ் வாய்,
இரை தேர் நாரைக்கு எவ்வம் ஆகத்
தூஉம் துவலைத் துயர் கூர் வாடையும்
வாரார் போல்வர், நம் காதலர்;
வாழேன் போல்வல்-தோழி!-யானே.
பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது
வாயிலான் தேவன்
பாலை
நூல் அறு முத்தின் தண் சிதர் உறைப்ப,
தாளித் தண் பவர் நாள் ஆ மேயும்
பனி படு நாளே, பிரிந்தனர்;
பிரியும் நாளும் பல ஆகுபவே!
காவன்முல்லைப் பூதனார்
105.
குறிஞ்சி
புனவன் துடவைப் பொன் போல் சிறு தினைக்
கடி உண் கடவுட்கு இட்ட செழுங் குரல்
அறியாது உண்ட மஞ்ஞை, ஆடுமகள்
வெறி உறு வனப்பின் வெய்துற்று, நடுங்கும்
சூர் மலை நாடன் கேண்மை
நீர் மலி கண்ணொடு நினைப்பு ஆகின்றே.
வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது
நக்கீரர்
106.
குறிஞ்சி
வரை இழி அருவியின் தோன்றும் நாடன்
தீது இல் நெஞ்சத்துக் கிளவி நம் வயின்
வந்தன்று-வாழி, தோழி!-நாமும்
நெய் பெய் தீயின் எதிர்கொண்டு,
"தான் மணந்தனையம்" என விடுகம் தூதே.
கபிலர்
107.
மருதம்
குவி இணர்த் தோன்றி ஒண்பூ அன்ன
தொகு செந் நெற்றிக் கணம்கொள் சேவல்!-
நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும்
பிள்ளை வெருகிற்கு அல்குஇரை ஆகி,
கடு நவைப் படீஇயரோ, நீயே-நெடு நீர்
யாணர் ஊரனொடு வதிந்த
ஏம இன் துயில் எடுப்பியோயே!
பொருள் முற்றி வந்த தலைமகனை உடைய கிழத்தி காமம் மிக்க கழிபடர் கிளவியால் கூறியது
மதுரைக் கண்ணனார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.