1. உஞ்சைக் காண்டம்
கடவுள் வாழ்த்து
மணியுடன் கனக முத்த மலிந்த முக்குடை இலங்க
அணிமலர்ப் பிண்டியின் கீழ அமர்ந்த நேமிநாதர் பாதம்
பணிபுபின் வாணிபாதம் பண்ணவர் தாள்களுக்கு எம்
இணைகரம் சிரத்தில் கூப்பி இயல்புறத்தொழுதும் அன்றே. 1
பொன்னெயில் நடுவண் ஓங்கும் பூநிறை அசோக நீழல்
இன்னியல் ஆலயத்துள் ஏந்தரி ஆசனத்தின்
மன்னிய வாமன் பாதம் வந்தனை செய்து வாழ்த்தி
உன்னத மகிமை மிக்கான் உதயணன் கதை விரிப்பாம். 2
அவையடக்கம்
மணிபொதி கிழியும் மிக்க மணியுடன் இருந்த போழ்தில்
மணிபொதி கிழிய தன்னை மணியுடன் நன்கு வைப்பார்
துணிவினில் புன்சொலேனும் தூய நற்பொருள் பொதிந்தால்
அணியெனக் கொள்வார் நாமும் அகத்தினுள் இரங்கல் செல்லாம். 3
பயன்
ஊறுந் தீவினை வாய் தன்னையுற்றுடன் செறியப் பண்ணும்
கூறுநல் விதி புணர்ந்து குறைவின்றிச் செல்வம் ஆமுன்
மாநுறு கருமம் தன்னை வரிசையின் உதிர்ப்பை யாக்கும்
வீறுறு முறுப்பின் தன்மை விளம்புதற் பால தாமோ. 4
நூல்
நாட்டுச் சிறப்பு
இஞ்சி மூன்றுடைய கோமான் எழில் வீரநாதன் இந்தப்
புஞ்சிய நிலத்தோர்க் கெல்லாம் பொற்பு நல்லற நன்மாரி
விஞ்சவே சொரியுங் காலம் வெண்மதிக் குடைக்கீழ் வாழும்
எஞ்சலில் காட்சி மன்னனிருக்கை நாடு உரைத்தும் அன்றே. 5
நாவந்தீவு
பூவும் நற்றளிரும் செற்றிப் பொழில் மிகச் சூழ்ந்து இலங்கும்
நாவலர் மரத்தினாலே நாமமாய்த் துலங்கி நின்று
தீவுநற்கடல் கடாமும் ஒன்றிற்கொன்று இரட்டி சூழ்ந்த
நாவலந்தீவு நந்தினன் மணி போன்ற தன்றே. 6
வத்தவநாடு
வேதிகை சிலைவளைத்து வேதண்ட நாணேறிட்டுப்
போதவும் வீக்கினாற்போல் பொற்புடைப் பரதந் தன்னில்
ஓதியதரும கண்டத்து ஓங்கிய காவு நின்று
வாதத்தால் சுகந்தம் வீசுன் வத்தவநாடதாமே. 7
கோ நகரம்
இஞ்சிமிக் கெழுந்தே யோங்கி யிலக்கிய அமர லோகம்
எஞ்சலில் எல்லை காணா எழில்பெற நிற்றனோக்கி
அஞ்சல் இல்வருக என்றே அணிபெற விலங்கி நீண்ட
குஞ்சி நன் கொடிகரத்தால் கூவியிட்டு அழைக்குமன்றே. 8
முகில்தவழ் மாடமீதின் முத்தணி மாலை நான்றே
இகலுறும் அமளியின்மேல் எழின் மங்கை மைந்தர் தாமும்
பகலிரவு இன்றிப் போகம் பண்பினால் துய்த்திருப்பார்
நகரி கௌசாம்பி என்னும் நாம மார்ந்து இலங்குமன்றே. 9
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.