10. தோழி கூற்று
வான் கடற் பரப்பில் தூவற்கு எதிரிய,
மீன் கண்டன்ன மெல் அரும்பு ஊழ்த்த,
முடவு முதிர் புன்னைத் தடவு நிலை மாச் சினை,
புள் இறைகூரும் மெல்லம் புலம்ப!
5 நெய்தல் உண்கண் பைதல கலுழ,
பிரிதல் எண்ணினைஆயின், நன்றும்
அரிது உற்றனையால் பெரும! உரிதினின்
கொண்டு ஆங்குப் பெயர்தல்வேண்டும் கொண்டலொடு
குரூஉத் திரைப் புணரி உடைதரும் எக்கர்ப்
10 பழந் திமில் கொன்ற புது வலைப் பரதவர்
மோட்டு மணல் அடைகரைக் கோட்டுமீன் கெண்டி,
மணம் கமழ் பாக்கத்துப் பகுக்கும்
வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலனே.
இரவுக்குறி வந்து தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டு நின்று, தோழி சொல்லியது
நெய்தல்
அம்மூவனார்
11. தலைவி கூற்று
வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம்
நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் அம் காட்டு,
இலை இல மலர்ந்த முகை இல் இலவம்
கலி கொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த
5 அம் சுடர் நெடுங் கொடி பொற்பத் தோன்றி,
கயம் துகள் ஆகிய பயம் தபு கானம்
எம்மொடு கழிந்தனர்ஆயின், கம்மென,
வம்பு விரித்தன்ன பொங்கு மணற் கான் யாற்றுப்
படு சினை தாழ்ந்த பயில் இணர் எக்கர்,
10 மெய் புகுவு அன்ன கை கவர் முயக்கம்
அவரும் பெறுகுவர் மன்னே! நயவர,
நீர் வார் நிகர் மலர் கடுப்ப, ஓ மறந்து
அறு குளம் நிறைக்குந போல, அல்கலும்
அழுதல் மேவல ஆகி,
15 பழி தீர் கண்ணும் படுகுவமன்னே!
தலைமகன் பொருள்வயிற் பிரிந்த இடத்து, ஆற்றாளாய தலைமகள் வேறுபாடு கண்டு ஆற்றாளாய தோழிக்கு, தலைமகள், 'ஆற்றுவல்' என்பது படச் சொல்லியது
பாலை
ஔவையார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.