பொருநர்க்கு யானை முதலிய பரிசுகளைப் பாண்டியன் கொடுத்தல்
ஒரு சார், விழவு நின்ற வியல் ஆங்கண்
முழவுத் தோள் முரண் பொருநர்க்கு,
உரு கெழு பெருஞ் சிறப்பின் 100
இரு பெயர்ப் பேர் ஆயமொடு
இலங்கு மருப்பின் களிறு கொடுத்தும்,
பொலந் தாமரைப் பூச் சூட்டியும்,
நலம் சான்ற கலம் சிதறும்
பல் குட்டுவர் வெல் கோவே! 105
முதுவெள்ளிலை என்னும் ஊரின் சிறப்பு
கல் காயும் கடு வேனிலொடு
இரு வானம் பெயல் ஒளிப்பினும்,
வரும் வைகல் மீன் பிறழினும்,
வெள்ளம் மாறாது விளையுள் பெருக,
நெல்லின் ஓதை, அரிநர் கம்பலை, 110
புள் இமிழ்ந்து ஒலிக்கும் இசையே, என்றும்
சலம் புகன்று சுறவுக் கலித்த
புலவு நீர் வியன் பெளவத்து,
நிலவுக் கானல் முழவுத் தாழைக்
குளிர்ப் பொதும்பர் நனித் தூவல், 115
நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலை,
இருங் கழிச் செறுவின் வெள் உப்புப் பகர்நரொடு,
ஒலி ஓவாக் கலி யாணர்
முதுவெள்ளிலை
முதுவெள்ளிலையார் ஏவல் கேட்ப, தலையாலங் கானத்தில் பகைவர்களை வென்றமை
மீக்கூறும்,
வியல் மேவல் விழுச் செல்வத்து, 120
இரு வகையான், இசை சான்ற,
சிறுகுடிப் பெருந் தொழுவர்,
குடி கெழீஇய நால் நிலவரொடு,
தொன்று மொழிந்து, தொழில் கேட்ப
கால் என்னக் கடிது உராஅய், 125
நாடு கெட எரி பரப்பி,
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து,
அரசு பட அமர் உழக்கி,
முரசு கொண்டு களம் வேட்ட
அடு திறல் உயர் புகழ் வேந்தே! 130
கொற்கைக்குத் தலைவன்
நட்டவர் குடி உயர்க்குவை
செற்றவர் அரசு பெயர்க்குவை
பேர் உலகத்து மேஎந் தோன்றிச்
சீருடைய விழுச் சிறப்பின்,
விளைந்து முதிர்ந்த விழு முத்தின், 135
இலங்கு வளை, இருஞ் சேரி,
கள் கொண்டிக் குடிப் பாக்கத்து,
நல் கொற்கையோர் நசைப் பொருந!
செழியன் பரதவரை வென்றமை
செற்ற தெவ்வர் கலங்கத் தலைச்சென்று,
அஞ்சு வரத் தட்கும் அணங்குடைத் துப்பின், 140
கோழ் ஊஉன் குறைக் கொழு வல்சி,
புலவு வில், பொலி கூவை,
ஒன்று மொழி, ஒலி இருப்பின்,
தென் பரதவர் போர் ஏறே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.