44. பாலை
காலே பரி தப்பினவே; கண்ணே
நோக்கி நோக்கி வாள் இழந்தனவே;
அகல் இரு விசும்பின் மீனினும்
பலரே மன்ற, இவ் உலகத்துப் பிறரே.
இடைச்சுரத்துச் செவிலித்தாய் கையற்றுச் சொல்லியது
வெள்ளிவீதியார்
45. மருதம்
காலை எழுந்து, கடுந் தேர் பண்ணி,
வால் இழை மகளிர்த் தழீஇய சென்ற
மல்லல் ஊரன், "எல்லினன் பெரிது" என,
மறுவரும் சிறுவன் தாயே;
தெறுவது அம்ம, இத் திணைப் பிறத்தல்லே.
தலைமகற்குப் பாங்காயினார் வாயில் வேண்டியவழி, தோழி வாயில் நேர்ந்தது
ஆலங்குடி வங்கனார்
46. மருதம்
ஆம்பற் பூவின் சாம்பல் அன்ன
கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ
முன்றில் உணங்கல் மாந்தி, மன்றத்து
எருவின் நுண் தாது குடைவன ஆடி,
இல் இறைப் பள்ளித் தம் பிள்ளையொடு வதியும்
புன்கண் மாலையும், புலம்பும்,
இன்றுகொல்-தோழி!-அவர் சென்ற நாட்டே?
பிரிவிடை "ஆற்றாள்" எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது
மாமிலாடன்
47. குறிஞ்சி
கருங் கால் வேங்கை வீ உகு துறுகல்
இரும் புலிக் குருளையின் தோன்றும் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை அல்லை-நெடு வெண்ணிலவே!
இரா வந்து ஒழுகுங்காலை, முன்னிலைப் புறமொழியாக நிலாவிற்கு உரைப்பாளாகத் தோழி உரைத்தது
நெடு வெண்ணிலவினார்
48. பாலை
"தாதின் செய்த தண் பனிப் பாவை
காலை வருந்தும் கையாறு ஓம்பு" என,
ஓரை ஆயம் கூறக் கேட்டும்.
இன்ன பண்பின் இனை பெரிது உழக்கும்
நன்னுதல் பசலை நீங்க, அன்ன
நசை ஆகு பண்பின் ஒரு சொல்
இசையாதுகொல்லோ, காதலர் தமக்கே?
பகற்குறிக்கண் காணும் பொழுதினும் காணரப் பொழுது பெரிதாகலின், வேறு பட்ட கிழத்தியது வேறுபாடு கண்டு, தோழி சொல்லியது
பூங்கணுத்திரையார்
49. நெய்தல்
அணிற் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து
மணிக் கேழ் அன்ன மா நீர்ச் சேர்ப்ப!
இம்மை மாறி மறுமை ஆயினும்,
நீ ஆகியர் எம் கணவனை;
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே.
தலைமகன் பரத்தைமாட்டுப் பிரித்தவழி ஆற்றாளாகிய தலைமகள் அவனைக் கண்ட வழி அவ்வாற்றாமை நீங்குமன்றே; நீங்கியவழி, பள்ளியிததானாகிய தலைமகற்குச் சொல்லியது
அம்மூவனார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.