இரத்தினபுரத் தரசன் மகன் சுவர்ணரதன்
இலங்கொளி மாடவீதி யிரத்தின புரம தாளும் உலங்கெழு வயிரத் திண்டோ ளொளிமுடி யரசன் செம்மல் அலங்கலம் புரவித் தானை யருங்கலத் தேரின் பேரன் குலங்கெழு குரிசில் கண்டாய் கொண்டல்வா னுருமோ டொப்பான் | 316 |
கீதமாபுரத்தரசன் மகன் அரிகண்டன்
நங்கண்மால் வரையின் மேலோன் நன்னகர் கீத மென்னும் திங்கண்மால் புரிசை வேலிச் செழுநக ரரசன் செம்மல் அங்கண்மா ஞால மாளு மரிகண்ட னவனை விண்மேல் செங்கண்மான் முனியு மேனுஞ் செய்வதொன் றில்லை கண்டாய் | 317 |
திரிபுர அரசன் மகன் நளிதாங்கன்
சேந்தெரி செம்பொன் வீதித் திரிபுர மதனை யாளும் வாய்ந்தெரி வயிரப் பைம்பூண் மன்னவன் புதல்வன் மல்லா டேந்துதோ ளரசர் போரே றிவனளி தாங்க னென்பன் காய்ந்தெரி கனலின் வெய்யோன் கல்வியாற் கடலோ டொப்பான் | 318 |
சித்திரகூடத்து அரசன் ஏமாங்கதன்
செந்தளிர் புதைந்த சோலைச் சித்திர கூட மாளும் அந்தளி ரலங்கன் மாலை யரசர்கோன் சிறுவ னந்தார் இந்திரன் புதல்வ னன்னா னேந்தலே மாங்க தற்கிம் மந்திர வுலகின் வாழு மன்னர்மா றில்லை மன்னா | 319 |
அச்சுவபுரத்துக் கனக சித்திரன்
அருமணி யடுத்த வீதி யச்சுவ புரம தாளும் திருமணி திகழும் பூணான் பெருமகன் சிறைவண் டென்னும் கருமணி துதைந்த பைந்தார்க் கனகசித் திரனை யன்றே ஒருமணி திலத மாக வுடையது நிலம தென்றான் | 320 |
சிரீ நிலையத்தரசன் மகன் சித்திராதன்
சீரணி முழவ மோவாச் சிரீநிலை யதனை யாளும் காரணி தடக்கை வேந்தன் கான்முளை கனபொ னார்ந்த தேரணி யரவத் தானைச் சித்திரத் தேரின் பேரான் தாரணி மார்ப னன்றே தரணிக்கோர் திலத மாவான் | 321 |
கனக பல்லவத்தரசன் மகன் சிங்ககேது
கற்றவர் புகழுங் சீர்த்திக் கனகபல் லவத்தை யாளும் கொற்றவன் சிறுவன் கோலக் குங்குமக் குவவுத் தோளான் செற்றவர்ச் செருக்குஞ் செய்கை செருவல்லான் சிங்க கேது மற்றவன் பிறந்த பின்னா மண்மகள் மகிழ்ந்த தென்றான் | 322 |
இந்திர சஞ்சயத்தரசன் மகன் அருஞ்சயன்
இஞ்சிசூழ் ழெரிபொன் மாடத் திந்திரன் மிசைந்த நாமச் சஞ்சய முடைய கோமான் றாண்முளை தரணி யெல்லாம் அஞ்சுநீ ரலங்கல் வேலா னருஞ்சய னவனை நங்கண் மஞ்சுசூழ் மலைக்கோர் சூளா மணியெனக் கருது மன்னா! | 323 |
எங்கிவர் தம்முள் யாவ ரிலங்கிரும் பவழச் செவ்வாய்க் கோங்கிவர் குவிமென் கொங்கைக் கொம்பினுக் குரிய காளை ஆங்கவன் றன்னை யாராய்ந் தறிந்தருள் செய்க வென்றான் வாங்கிரும் பரவை முந்நீர் மணிகொழித் தனைய சொல்லான் | 324 |
வேறு - பவச்சுதன் கூறியவற்றிற்கு எல்லாரும் உடன்படுதல்
மன்னர் நீண்முடி மென்மணித் தொத்தொளி துன்னு சேவடி யாற்குச் சுருங்கவே பன்னு கேள்விப் பவச்சுதன் சொல்லலும் அன்னதே யென்றெல் லார்களு மொட்டினார் | 325 |
சுதசாகரன் என்பவன் சொல்லுதல்
அல்லி நாண்மலர்த் தாருமுத் தாரமும் வல்லி யாங்கனி சாந்தும் வனைந்துராய் மல்லி னான்மலி மார்பற்கு மற்றிவை சொல்லி னான்சுத சாகர னென்பவே | 326 |
பவச்சுதன் கூறியது உண்மை என்றல்
ஆழி யாள்கின்ற வச்சுவ கண்டன்மேல் பாழி யாகின்ற திண்டோ ட் பவச்சுதன் சூழி யானையி னாய் சொலப் பட்டன ஊழி யாருரை யும்மொத் துள கண்டாய் | 327 |
பிறருக்குக் கொடுப்பினும் பகையாகுமென்றல்
ஆயி னுஞ்சிறி துண்டறி வண்டினம் பாயி னும்பனிக் கும்படர்க் கோதைதன் வேயி னும்பணைக் கின்றமென் றோள்பிறர் தோயி னும்பகை யாஞ்சுடர் வேலினாய் | 328 |
அச்சுவகண்டன் ஆற்றலிற் சிறந்தவனென்றல்
வண்ட வாமுடி மன்னருண் மற்றவன் தண்ட மாற்றுநர் தாமிலை யாற்சிறி துண்டி யானுரைப் பானுறு கின்றது விண்டு வாழுநர் மேனகு வேலினாய் | 329 |
சுரேந்திரகாந்தத்து மேகவாகனன்
போக மாண்டவிச் சேடியோர் பொன்னகர்க் கேக நாயக னாயினி தாள்பவன் மேக வாகன னென்றுளன் வீழ்மத வேக மால்களி றும்மிகு வேலினான் | 330 |
மேகவாகனன் மனைவி மேகமாலினி
நாக மாலைகண் மேனகு வண்டினம் ஏக மாலைய வாயிசை கைவிடாத் தோகை மாமயில் போற்சுரி கூந்தலாள் மேக மாலினி யென்றுரை மிக்குளாள் | 331 |
அவர்களுடைய மகன் விச்சுவன்
தேவி மற்றவ டெய்வம் வழிபட மேவி வந்தனன் விச்சுவ னென்பவன் ஓவி றொல்புக ழானுளன் கூற்றமும் ஏவி நின்றினி தாண்டிடு மீட்டினான் | 332 |
விச்சுவன் பெருமை
மையில் வானுல காண்டுமண் ணோர்களுக் குய்யும் வாயி லாணுர்த்திய தோன்றிய ஐய னற்பிற வாரஞர் நீங்கியிவ் வைய மாயதெல் லாம்வளர் கின்றதே | 333 |
இவ்வுலகிற்கருள் செய்தபின் மீண்டும் தேவருலகை யடைவான்
மங்குல் வானுல காண்டு வரத்தினால் இங்கு வந்தென னீணண்டளி யீந்தபின் திங்கள் வானொளி யிற்றிகழ் சோதியாய்த் தங்கு வானுல கிற்றகை சான்றதே | 334 |
தன்னி னாய்விளை வித்திரு ளைத்தவிர்த் தின்ன னாகவென் றெண்ணிய வெண்ணமோ டன்ன னாதலி னாலவன் மேற்பிறர் என்ன ரேனுமின் னாதன வெண்ணிலார் | 335 |
சுயம்பிரபைக்கு விச்சுவன் தகுந்தவன் ஆவன் எனல்
காம்பின் வாய்ந்தமென் றோளியக் காதலன் தீம்பன் மாலைநன் மார்பகஞ் சேருமேல் ஆம்பன் மாலையு மாய்கதிர்த் திங்களும் தாம்பன் மாலையுஞ் சார்ந்த தனைத்தரோ | 336 |
விச்சுவன் தங்கை
நம்பி தங்கை நகைமலர்க் கற்பகக் கொம்பி னன்னவன் கொங்கணி கூந்தலாள் அம்பி னீண்டரி சிந்திய மாக்கயல் வம்பி னீண்டமை வாணெடுங் கன்ணினாள் | 337 |
அவளுடைய பெயர் சோதிமாலை
கோதின் மாலைகள் மேற்குதி கொண்டெழு கீத மாலைய கின்னர வண்டினம் ஊதி மாலைய வாயுறை யுங்குழல் சோதி மாலையென் பாள்சுடர்ப் பூணினாள் | 338 |
சோதிமாலை அருக்ககீர்த்திக்குரியவள் எனல்
வெம்பு மால்களி யானை விலக்குநீர் நம்பி ஞாயிறு சேர்பெய ராற்கணி அம்பி னீளரி வாணெடுங் கண்ணவள் வம்பு சேர்முலை வாரி வளாகமே | 339 |
சுதசாகரன் முடிவுரை
இன்ன வாறிசை யப்பெறின் யாவரும் என்ன வாறு மிகப்பவ ரின்மையால் அன்ன வாறரு ளுண்டெனி லாய்ந்தியான் சொன்ன வாறுகொண் டீசுடர் வேலினோய் | 340 |
சுமந்திரி என்பவன் கூறத்தொடங்குதல்
கொங்குவண் டலைந்த தாரான் குறிப்பறிந் திவைக ளெல்லாம் அங்கவன் மொழிந்த பின்னை யவனையு மமைதி கூறி நங்கைதன் றாதை தோழர் நால்வரு ணால்வ னாவான் தொங்கலந் துணர்கொள் மார்பிற் சுமந்திரி சொல்ல லுற்றான் | 341 |
எல்லோரையும் விலக்கிக் கூறுதல்
அண்ணலங் களிகொள் யானை யச்சுவ கண்டன் மூத்தாற் கெண்ணலுந் தகுவ தன்றா லிவன்பணி யகற்ற லாற்றாக் கண்ணலங் கவரும் வேலோர்க் கீயினுங் கரும மன்றால் பெண்ணலங் கனிந்த பேதை யிருப்பதும் பெருமை யன்றே | 342 |
விச்சுவனை விலக்கிக் கூறுதல்
சூழ்கதிர்ப் புரிசை வேலிச் சுரேந்திர மாளும் தாழ்கதி ரார மார்பிற் றமனியக் குழையி னான்றன் போழ்கதிர்க் கடவுள் போலும் புதல்வனுக் குரிமை செய்ய தாழ்கதிர் விலங்க லாளு மரசவஃ தரிது கண்டாய் | 343 |
விலக்கியதற்குக் காரணம் காட்டுதல்
மங்கையர் முகத்தி னீண்டு மைகடை மதர்ப்ப மாந்தி அங்கயல் பிறழ்வ போலு மையரி யடர்த்த வாட்கண் பங்கயச் செங்க ணான்மேற் படைத்தொழில் பயின்ற போழ்தும் தங்கிய மனத்த னாகித் தளர்விலன் றவத்தின் மிக்கான் | 344 |
விச்சுவன் இயல்பு
மண்கனி முழவச் சீரு மடந்தையர் தூக்கு மற்றும் பண்கனி பாட லாடற் பாணியும் பயின்று மேவான் விண்கனிந் தனைய வின்ப வெள்ளமும் வெறுத்து நின்றான் கண்கனி யுருவக் காளை கடவுளர் தகையன் கண்டாய் | 345 |
மேகவாகனன் விச்சுவன் வரலாறு கேட்டல்
செறிகழ லவற்குத் தாதை சித்திர கூட மென்னும் அறிவரன் கோயி லெய்தி யணிவிழ வயர்த்த காலை இறுதியி லவதி ஞானி யசோதர னென்னும் பேர உறுவனை வணங்கிக் கேட்டான் மகன்றிற முலங்கொ டோ ளான் | 346 |
அவதிஞானி விச்சுவனது பழம்பிறப்பு வரலாறு கூறுதல்
பங்கயப் பழன வேலிப் பவகிரி யரசன் பைந்தார் தங்கிய தடங்கொண் மார்பன் சயசேன னவற்குத் தேவி செங்கய னெடுங்கட் செவ்வாய்ப் பிரீதிமதி பயந்த காளை வெங்களி யானை வல்ல விசயபத் திரனென் பானே | 347 |
இதுவுமது
மந்திரத் தரசர் கோவே மற்றவன் வையங் காக்கும் தந்திரந் துறந்து நோற்று மறைந்தசா சார மென்னும் இந்திர வுலக மெய்தி யேழொடீ ரைந்து முன்னீர் அந்தர காலந் தேவர்க் கரசனா யாண்டு வந்தான் | 348 |
ஆதலா லமர போக நுகர்ந்தவ னரைசர் செல்வம் போதுலா மலங்கன் மார்ப பொருளென மருளல் செல்லான் தீதெலா மகல நோற்றுச் சிவகதி சேரு மென்றக் கோதிலா முனிவன் சொன்ன வுரையிவை கூறக் கேட்டாம் | 349 |
இறைநிலையை எய்துவார்க்கு உறவினர் வேண்டியவரல்லர்
அம்மையாற் றவங்க டாங்கி யலர்ந்தநல் லறிவி னாலும் இம்மையா னுடம்பு நீங்கி யிகந்துபோ மியற்கை யாலும் செம்மையாற் கடவுட் டானஞ் சேர்வதே சிந்தை யாற்கு மெய்ம்மையாற் கருமச் சுற்றம் வேண்டுவ தில்லை வேந்தே | 350 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.