அரசன் அடைந்த காரியத்தை சதவிந்து கூறுதல்
மணங்கமழ் மதுமல ரலங்கன் மாலைபோல் வணங்கெழி னுடங்கிடை மாழை நோக்கிநங் கணங்குழை கருமமாங் கருதிற் றென்றனன் அணங்கெழில் விரிந்தநூ லலர்ந்த நாவினான் | 376 |
தெருவில் வலங்கொண்டு சென்றவள் திருமகள் என்றல்
வெண்ணிலா விரிந்தென விளங்கு மாலையள் கண்ணிலாங் கவர்தகைக் கண்ணி மன்னனை மண்ணிலா மறுகிடை வலங்கொண் டெய்தினாள் எண்ணிலாங் கதுதிரு வெதிர்ந்த வன்ணமே | 377 |
பொன்சுலாஞ் சுடரிழை பொறுத்த பூண்முலை மின்சுலா நுடங்கிடை மெல்லி யாடிறம் என்சொலா லின்றியா னியம்பு நீரதோ மன்சுலா வகலநின் றலரும் வாளினாய் | 378 |
சுயம்பிரபைக்குரிய மணமகனை மாபுராணம் கூறுகிறது என்றல்
ஆதிநா ளறக்கதி ராழி தாங்கிய சோதியான் றிருமொழி விளக்கித் தோன்றுமால் போதுவார் புரிகுழற் பொலங்கொம் பன்னவிம் மாதராள் வனமுலைக் குரிய மைந்தனே | 379 |
சதவிந்து மொழியைக்கேட்ட அரசன் மகிழ்ச்சி அடைதல்
அம்மயி லனையவ டிறத்தி னாரியன் செம்மையில் விளம்பிய செல்வங் கேட்டலும் மெய்ம்மையிற் றெரிந்தொளி துளும்பு மேனியன் பொய்ம்மையில் புகழவன் பொலிந்து தோன்றினான் | 380 |
மாபுராணத்தில் கூறப்பட்டிருத்தலைப்பற்றி அரசன் கேட்டல்
முன்னிய வுலகுகண் விடுத்த மூர்த்தியான் மன்னிய திருமொழி யகத்து மாதராள் என்னைகொல் விரிந்தவா றெனலு மன்னனுக் கன்னவ னாதிமா புராண மோதினான் | 381 |
உலகங்கள் எண்ணிறந்தன என்றல்
மூவகை யுலகினு ணடுவண் மூரிநீர்த் தீவின தகலமுஞ் சிந்து வட்டமும் ஓவல வொன்றுக்கொன் றிரட்டி கண்ணறை ஏவலாய் விரிந்தவை யெண்ணி றந்தவே | 382 |
உலக அமைப்பு உரைத்தல்
மந்தர நெடுமலை நடுவின் வாய்ந்தது சுந்தர வேதிகை மருங்கு சூழ்ந்தது நந்திய நளிசினை நாவன் மாமரம் அந்தரத் துடையதிவ் வவனி வட்டமே | 383 |
உலகில் உள்ளன
குலகிரி யாறுகூர் கண்ட மேழ்குலாய் மலைதிரை வளர்புன லேழி ரண்டதாய்க் கொலைதரு வேலினாய் கூறப் பட்டதிவ் வலைதிரை நெடுங்கட லவனி வட்டமே | 384 |
மாற்றறு மண்டில மதனு ளூழியால் ஏற்றிழி புடையன விரண்டு கண்டமாம் தேற்றிய விரண்டினுந் தென்மு கத்தது பாற்றரும் புகழினாய் பரத கண்டமே | 385 |
பரதகண்டம் மூன்று ஊழிக்காலம் இன்ப நிலமாக இலங்கி நின்றது
மற்றது மணிமய மாகிக் கற்பகம் பொற்றிர ளணிபொழிற் போக பூமியாய் முற்றிய வூழிமூன் றேறி மீள்வழிப் பிற்றகை யூழிவட் பிரமர் தோன்றினார் | 386 |
போக காலம் கழிதல்
வெங்கதிர்ப் பரிதியும் விரைவு தண்பனி அங்கதிர் வளையமு மாதி யாயின இங்கிவர் படைத்தன ரிழிந்த திவ்வகை பொங்கிய புரவியாய் போக காலமே | 387 |
அருகக் கடவுள் தோற்றம்
ஊழிமூன் றாவதோய்ந் திறுதி மன்னுயிர் சூழ்துயர் பலகெடச் சோதி மூர்த்தியாய் ஏழுய ருலகுடன் பரவ வீண்டருள் ஆழியங் கிழமையெம் மடிக டோ ன்றினாய் | 388 |
உலகம் அருகக்கடவுளின் வழிப்பட்டது
ஆரரு டழழுவிய வாழிக் காதியாம் பேரருண் மருவிய பிரான்றன் சேவடி காரிருள் கழிதரக் கண்க வின்றரோ சீரருள் சரணென வுலகஞ் சேர்ந்ததே | 389 |
அருகக்கடவுள் அறம் முதலியவற்றை ஆக்குதல்
அலந்தவ ரழிபசி யகற்றும் வாயிலும் குலங்களுங் குணங்களுங் கொணார்ந்து நாட்டினான் புலங்கிளர் பொறிநுகர் விலாத புண்ணியன் நலங்கிளர் திருமொழி நாத னென்பவே | 390 |
பரதன் என்னும் அரசன்
ஆங்கவன் றிருவரு ளலரச் சூடிய வீங்கிய விரிதிரை வேலி காவலன் ஓங்கிய நெடுங்குடை யொருவ னாயினான் பாங்குயர் பரிதிவேற் பரத னென்பவே | 391 |
பரதன் அருகக் கடவுளைப் போற்றிப் பணிதல்
ஆழியா லகலிடம் வணக்கி யாண்டவன் பாழியா நவின்றதோட் பரத னாங்கொர்நாள் ஊ ழியா னொளிமல ருருவச் சேவடி சூழிமால் யானையான் றொழுது வாழ்த்தினான் | 392 |
பரதன் அருகக் கடவுளைப் போற்றி எதிர்கால நிகழ்ச்சி கேட்டல்
கதிரணி மணிமுடி வணங்கிக் காவலன் எதிரது வினவினா னிறைவன் செப்பினான் அதிர்தரு விசும்பிடை யமிர்த மாரிசோர் முதிர்தரு முகிலிடை முழங்கிற் றென்னவே | 393 |
அருகக் கடவுள் கூறுதல்
என்முத லிருபத்தீ ரிருவர் நாதர்கள் நின்முத லீரறு வகையர் நேமியர் மன்முதல் பலவர்கே சவர்கண் மாற்றவர் தொன்முத லவர்தொகை யொன்ப தொன்பதே | 394 |
முதல் வாசுதேவனை மொழிதல்
மன்னவ நின்மகன் மரிசி மாற்றிடைப் பொன்னவிர் போதன முடைய பூங்கழல் கொன்னவில் வேலவன் குலத்துட் டோ ன்றினான் அன்னவன் கேசவர்க் காதி யாகுமே | 395 |
அவன் அச்சுவனைக் கொன்று அரசாட்சியைக் கைப்பற்றுவான் என்றல்
கேசவ னார்திறங் கிளப்பின் வெண்மலை காசறு வனப்பினோர் கன்னி யேதுவால் ஆசர வச்சுவக் கிரீவ னாவியும் தேசறு திகரியுஞ் செவ்வன வெளவுமே | 396 |
பிறகு அவன் கடவுள் ஆவான் என்றல்
தேரணி கடற்படைத் திவிட்டன் சென்றுபின் ஆரணி யறக்கதி ராழி நாதனாம் பாரணி பெரும்புகழ்ப் பரத வென்றனன் சீரணி திருமொழித் தெய்வத் தேவனே | 397 |
அருகக் கடவுள் கூறியதைப் பரதன் கேட்டு மகிழ்ந்தான் என்று நிமித்திகன் முடித்தல்
ஆதியு மந்தமு நடுவு நம்மதே ஓதநீ ருலகுடை யுரிமை யென்றரோ காதுவே லரசர்கோக் களிப்புற் றானிது போதுசே ரலங்கலாய் புராண நீர்மையே | 398 |
மாபுரணத்துட் கூறிய வாசுதேவனே திவிட்டன் என்றல்
அன்னணம் புராணநூ லகத்துத் தோன்றிய கன்னவி விலங்குதோட் காளை யானவன் மின்னவில் விசும்பின் றிழிந்து வீங்குநீர் மன்னிய வரைப்பக மலிரத் தோன்றினான் | 399 |
இதுவுமது
திருவமர் சுரமைநா டணிந்து செம்பொனால் பொருவரு போதன முடைய பூங்கழல் செருவமர் தோளினான் சிறுவ ராகிய இருவரு ளிளையவ னீண்டந் நம்பியே | 400 |
அவனுக்குச் சுயம்பிரபை உரியவள் என்றல்
கானுடை விரிதிரை வையங் காக்கிய மானுட வுடம்பினான் மறைந்து வந்தவத் தேனுடை யலங்கலான் றெய்வ மார்பகம் தானடைந் தமர்வதற் குரிய டையலே | 401 |
திவிட்டனால் அடையவிருக்குஞ் சிறப்பைக் கூறுதல்
ஆங்கவற் கீந்தபி னாழி தாங்கிய ஈங்கவற் கொன்றுனக் கிரண்டு சேடியும் தாங்கிய திருவினாற் றருமற் றென்றலும் வீங்கிய வுவகையன் வேந்த னாயினான் | 402 |
சதவிந்து தான் கூறும் நிமித்தத்திற்கு அடையாளமாகத் திவிட்டன் ஒரு சிங்கத்தின் வாயைப் பிளப்பான் என்றல்
கொங்கலர் தெரியலான் றிறத்திற் கொள்குறி இங்கியா னிசைத்ததே யமையு மல்லதோர் திங்கணா ளகவையிற் றிவிட்ட னாங்கொரு சிங்கம்வாய் பிளந்திடுந் தெளியீ தென்னவே | 403 |
நிமித்திக னுரைத்தது நிறைந்த சோதியான் உமைத்தகை யிலாததோ ருவகை யாழ்ந்துகண் இமைத்ததில னெத்துணைப் பொழுது மீர்மலர்ச் சுமைத்தகை நெடுமுடி சுடரத் தூக்கினான் | 404 |
சடியரசன் சதவிந்துவிற்குப் பரிசில் வழங்குதல்
இருதிலத் தலைமக னியன்ற நூற்கடல் திருநிதிச் செல்வனச் செம்பொன் மாரியாச் சொரினிதிப் புனலுடைச் சோதி மாலையென் றருநிதி வளங்கொணா டாள நல்கினான் | 405 |
அரசன் தன் மனைவி வாயுவேகைக்குச் செய்தி கூறுவித்தல்
மன்னவன் பெயர்ந்துபோய் வாயு வேகைதன் பொன்னகர் புக்கனன் பொழுதுஞ் சென்றது கன்னிதன் பெருமையுங் கருமச் சூழ்ச்சியும் அன்னமென் னடையவட் கறியக் கூறினான் | 406 |
மக்கட்பேற்றின் மாண்பு கூறல்
தொக்கின மலர்த்துதை விலாத சோலையும் புக்கிளந் தாமரை நகாத பொய்கையும் மிக்கிளம் பிறைவிசும் பிலாத வந்தியும் மக்களை யிலாததோர் மனையு மொக்குமே | 407 |
குலத்தைக் கற்பக மரமாகக் கூறுதல்
தலைமகள் றாடனக் காகச் சாகைய நிலைமைகொண் மனைவியர் நிமிர்ந்த பூந்துணர் நலமிகு மக்களா முதியர் தேன்களாக் குலமிகு கற்பகங் குளிர்ந்து தோன்றுமே | 408 |
நன்மக்களைப் பெறுதல் நங்கையர்க்கு அருமை என்றல்
சூழிநீண் முகத்தன துளைக்கைம் மாவொடு மாழைநீண் மணியிவை யெளிய மாண்பினால் வாழுநீர் மக்களைப் பெறுதன் மாதரார்க் காழிநீர் வையகத் தரிய தாவதே | 409 |
நின்மகள் விளக்குப் போன்றவள் என்றல்
தகளிவாய்க் கொழுங்சுடர் தனித்துங் கோழிருள் நிகளவாய்ப் பிளந்தகஞ் சுடர நிற்குமே துகளிலாச் சுடர்மணி துளும்பு பூணினாய் மகளெலாத் திசைகளு மலிர மன்னினாள் | 410 |
மகளாற் குலஞ் சிறப்படைந்தது என்றல்
வலம்புரி வயிற்றிடைப் பிறந்த மாமணி நலம்புரி பவித்திர மாகு நாமநீர் பொலம்புரி மயிலனாய் பயந்த பூங்கொடி குலம்புரிந் தவர்க்கெலாங் கோல மாகுமே | 411 |
நீ சிறப்படைந்தாய் எனல்
மக்களை யிலாதவர் மரத்தொ டொப்பவென் றொக்கநின் றுரைப்பதோ ருரையு மூய்த்துநீர் நக்கவா னிளம்பிறை வளர்ந்த நாட்கதிர்ச் செக்கர்வா னனையதோர் திருவு மெய்தினாய் | 412 |
சுயம்பிரபையின் பெருமை
மாவினை மருட்டிய நோக்கி நின்மகள் பூவினுண் மடந்தைபொற் பூவை நாளொளித் தேவனுக் கமிர்தமாந் தெய்வ மாமென ஓவினூற் புரோகித னுணர வோதினான் | 413 |
வாயுவேகை பதிலுரைக்கத் தொடங்குதல்
மத்தவார் மதகளிற் றுழவன் மற்றிவை ஒத்தவா றுரைத்தலு மூவகை கைம்மிக முத்தவாண் முகிழ்நகை யடக்கி மொய்குழல் தொத்துவார் பிணையலா டொழுது சொல்லினாள் | 414 |
சுயம்பிரபை நின்னருளினாற் சிறந்தவளாயினாள் என்றல்
மின்னவிர் மணிமுடி வேந்தர் வேந்தவிக் கன்னிநின் னருளினே கருதப் பட்டனள் மன்னவ ரருளில ராயின் மக்களும் பின்னவர் பெறுவதோர் பெருமை யில்லையே | 415 |
இதுவும் அது
பிடிகளை மகிழ்களிற் றரசர் பெய்ம்மலர் முடிகளின் மணிபொர முரலு மொய்கழல் அடிகள தருளினா லம்பொன் சாயலிக் கடிகமழ் குழலினாள் கவினு மெய்தினாள் | 416 |
அரசன் இன்புற்றிருத்தல்
திருமனைக் கிழத்திதன் றேங்கொள் சின்மொழி மருமணி முடியினான் மகிழ்ந்து மற்றவள் பருமணிப் பூண்முலை பாய மார்பிடை அருமணித் தெரியறே னழிய வைகினான் | 417 |
மறுநாள் மன்னன் மன்றங்கூடிப் பேசுதல்
மற்றைநாண் மகனையு மமைச்சர் தம்மையும் கொற்றவாட் டடக்கையான் கூவிக் கொண்டிருந் திற்றியான் கருதிய தென்று தொல்லைநூல் கற்றநா வலனது கதையுஞ் சொல்லினான் | 418 |
சுயம்பிரபை மணச்செய்தியை அரசன் சொல்ல அமைச்சர் பதில் கூறத்தொடங்குதல்
வீங்கிய முலையவ டிருவும் வெம்முலைக் கோங்கிய முகிலவ னுரிய பெற்றியுந் தாங்கிய புகழவன் மொழியத் தாரவர் தேங்கிய வுவகையர் தெரிந்து சொல்லினார் | 419 |
பயாபதி யரசனிடம் தூது அனுப்புவோம் என்றல்
தெய்வமே திரிகுழற் சிறுமி யாவதற் கையமே யொழிந்தன மனலும் வேலினாய் செய்யதோர் தூதினித் திவிட்டன் றாதையாம் வெய்யவே லவனுழை விடுத்தும் வேந்தனே | 420 |
மரீசியே தூது செல்வதற்கு ஏற்றவன் என்றல்
கற்றவன் கற்றவன் கருதுங் கட்டுரைக் குற்றன வுற்றவுய்த் துரைக்கு மாற்றலான் மற்றவன் மருசியே யவனை நாம்விடச் சுற்றமுங் கருமமுஞ் சொல்ல வல்லனே | 421 |
மரீசியைத் தூது அனுப்புதல்
காரியந் துணிந்தவர் மொழியக் காவலன் மாரியந் தடக்கையான் வருக வென்றொரு சீரிய திருமுகஞ் சிறப்பொ டீந்தனன் ஆரியன் கழலடி யவனும் வாழ்த்தினான் | 422 |
மரீசி சுரமைநாட்டுப் புட்பமாகரண்டப் பொழிலை வந்து சேர்தல்
மன்னவன் பணியொடு மருசி வானிடை மின்னவிர் முகிற்குழா முழங்கும் வீதிபோய்த் துன்னினன் சுரமைநாட் டகணி சூடிய பொன்னகர் புறத்ததோர் பொழிலி னெல்லையே | 423 |
வண்டினம் களியாட்டயர்தல்
புதுமலர்ப் புட்பமா கரண்ட மென்னுமப் பொதுமலர்ப் பூம்பொழில் புகலும் பொம்மென மதுமலர் பொழிதர மழலை வண்டினம் கதுமல ரினையொடு கலவி யார்த்தவே. | 424 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.