அரண்மனையின் வாயிலை அடைதல்
தெளிர்முத்த மணலுஞ் செம்பொற் சுண்ணமுஞ் சிதர்ந்து தீந்தேன் தளிர்முத்த மலரும் போதும் சாந்தமு வண்டார் ஒளிர்முத்த முறுவ லார்த முழைக்கலங் கலந்து மாலைக் குளிர்முத்த நிழற்றுங் கோயிற் பெருங்கடை குறுகச் சென்றார் | 501 |
பயாபதி மன்னன் பொற்கூடத்தில் அமருதல்
மற்றவை ரடைந்த போழ்கின் வாயிலோ ருணர்த்தக் கேட்டு கொற்றவ னருவி தூங்குங் குளிர்மணிக் குன்றம் போல முற்றிநின் றிலங்குஞ் செம்பொன் முடிமிசை முத்த மாலைக் கற்றைகள் தவழச் சென்றோர் கனககூ டத்தி ருந்தான் | 502 |
பயாபதி மன்னன் மூவரையும் அமரச் செய்தல்
மன்னவ குமர ரோடும் விஞ்சையன் மகிழ்ந்து வையத் தின்னருள் புரிந்த வேந்த னிடையறிந் தினிதி னெய்திக் கன்னவில் தோளி னான்றன் கழலடி தொழுது நின்றான் அன்னவர்க் கிருக்கைத் தான மரசனு மருளிச் செய்தான் | 503 |
பயாபதி அம்மன்னன் வீற்றிருக்கும் காட்சி
வீரியக் குமர ரொடும் விஞ்சையஞ் செல்வ னோடும் காரியக் கிழவர் சூழக் கவின்றுகண் குளிரத் தோன்றி ஆரியன் னலர்ந்த சோதி யருங்கலப் பீட நெற்றிக் தாரகை யணிந்து தோன்றுஞ் சந்திர சவிய னானன் | 504 |
மன்னவன் விஞ்சையனுக்கு முகமன் கூறியிருத்தல்
அலகையில் தானை வேந்த னம்பர சரனை நோக்கி உலகுப சார மாற்ற முரைத்தலுக் குரிய கூறி விலகிய கதிர வாகி விளங்கொளிக் கடகக் கையான் மலரகங் கழுமப் போந்து மனமகிழ்ந் திருந்த போழ்தின் | 505 |
மருசி கொண்டுவந்த திருமுகத்தை மதிவரன் வாங்குதல்
விஞ்சைய னெழுந்து தங்கோன் வெள்ளிவே தண்ட நோக்கி அஞ்சலித் தடக்கை கூப்பி யரக்கிலச் சினையின் வைத்த எஞ்சலி லோலை காட்ட விறைமகன் குறிப்பு நோக்கி வஞ்சமில் வயங்கு கேள்வி மதிரவன் கரத்தில் வாங்கி | 506 |
மதிவரன் திருமுகவோலையைப் படித்தல்
நிகரிகந் தழகி தாகி நெரிவடுப் படாத வேழப் புகர்முகப் பொறிய தாய புகழ்ந்தசொல் லகத்துப் போகா மகரவாய் மணிகட் செப்பின் மசிகலந் தெழுதப் பட்ட பகரரும் பதங்கள் நோக்கிப் பயின்று பின் வாசிக் கின்றான் | 507 |
இதுவும் அடுத்த பாடலும் திருமுகச் செய்தி
போதனத் திறைவன் காண்க விரதநூ புரத்தை யாளும் காதுவேன் மன்ன னோலை கழலவன் றனக்கு நாளும் ஆதிய வடிசி லொண்கே ழஞ்சன முள்ளிட் டெல்லாம் தீதுதீர் காப்புப் பெற்றுச் செல்கென விடுத்த தன்றே | 508 |
அல்லதூஉங் கரும தலங்குதா ரிவுளித் திண்டேர் வல்லக னிளைய நம்பிக் குரியளா வழங்கப் பட்டாள் மல்லக மார்பி னன்றான் மருமக ளிவளைக் கூவி வல்லிதிற் கொடுக்க மன்னன் வாழ்கதன் கண்ணி மாதோ | 509 |
திருமுகச்செய்திகேட்ட பயாபதிமன்னன் யாதுங் கூறாதிருத்தல்
என்றவ னோலைவாசித் திருந்தன னிறைவன் கேட்டு வென்றியம் பெருமை விச்சா தரரென்பா ரெம்மின் மிக்கார் இன்றிவன் விடுத்த திவ்வா றென்கொலோ வென்று சிந்தித் தொன்றுமற் றுரைக்க மாட்டா திருந்தன னுரங்கொ டோ ளான் | 510 |
மருசி சினத்துடன் கூறத்தொடங்குதல்
தீட்டருந் திலதக் கண்ணிச் செறிகழ லரசர் கோமான் மீட்டுரை கொடாது சால விம்மலோ டிருப்ப நோக்கி வாட்டரும் பெருமை யெங்கோ னோலையை மதியா வாறென் றோட்டருங் கதத்த னாகிக்கேசர னுரைக்க லுற்றான் | 511 |
மருசி சினந்து கூறுவன
முன்னமோர் கருமம் வேண்டி மொழிபவேல் மனிதர் தம்மால் என்னவ ரேனு மாக விகழ்ந்திடப் படுப போலாம் அன்னதே யுலக வார்த்தை யாவதின் றறியும் வண்ணம் மின்னவின் றிலங்கும் வேலோய் நின்னுழை விளங்கிற் றன்றே | 512 |
பூவிரி யுருவக் கண்ணிப் பொலங்குழை யிலங்கு சோதித் தேவரே யெனினுந் தோறச் சில்பகல் செல்ப வாயில் ஏவரே போல நோக்கி யிகழ்ந்துரைத் தெழுவ தன்றே மாவிரி தானை மன்னா மனிதர தியற்கை யென்றான் | 513 |
வரைமலி வயங்கு தோளாய் வியாதியான் மயங்கி னார்க்குச் சுரைமலி யமிர்தத் தீம்பால் சுவைதெரிந் துண்ண லாமோ விரைமலி விளங்கு பைந்தார் விஞ்சையர் செல்வந் தானும் நுரைமலி பொள்ளல் யாக்கை மனித்தர்க்கு நுகர லாமோ | 514 |
அறவிய மனத்த ரன்றி யழுங்குத லியல்பி னார்க்குப் பிறவியை யறுக்குங் காட்சிப் பெருநிலை யெய்த லாமோ வெறிமயங் குருவக் கண்ணி விஞ்சையர் விளங்கு தானம் மறவியின் மயங்கி வாழும் மனித்தர்க்கு நிகழ்த்த லாமோ | 515 |
அருங்கடி கமழுந் தாரை யழிமதக் களிற்றி னாற்றல் மரங்கெடத் தின்று வாழுங் களபக்கு மதிக்க லாமோ இரங்கிடு சிறுபுன் வாழ்க்கை யிந்நிலத் தவர்கட் கென்றும் வரங்கிடந் தெய்த லாமோ மற்றெமர் பெருமை மன்னா | 516 |
உள்ளிய மரங்கொள் சோலை மண்மிசை யுறையு மாந்தர் ஒள்ளிய ரேனுந் தக்க துணர்பவ ரில்லை போலாம் வெள்ளியஞ் சிலம்பி னென்கோன் விடுத்தே யேது வாக எள்ளியோ ருரையு மீயா திருந்தனை யிறைவ வென்றான் | 517 |
பயாபதி மன்னன் பதில் உரைத்தல்
ஆங்கவ னுரைப்பக் கேட்டே யம்பர சரனை நோக்கித் தேங்கம ழலங்கன் மார்ப சிவந்துரை யாடல் வேண்டா ஓங்கிய வோலை மாற்றக் குரியவா றுரைக்க மாட்டா தீங்கியா னிருந்த தென்றா னெரிசுடர் வயிரப் பூணான் | 518 |
வெஞ்சுடர் தெறுதீ விச்சா தரரென்பார் மிக்க நீரார் செஞ்சுடர்த் திலதக் கண்ணித் தேவரே தெரியுங் காலை மஞ்சிடை மண்ணுள் வாழும் மக்களுக் கவர்க டம்மோ டெஞ்சிய தொடர்ச்சி இன்ப மெய்துதற் கரிது மாதோ | 519 |
ஈட்டிய வூன்செய் யாக்கை யெம்முழை யின்ன வாறு வாட்டமில் வயங்கு கண்ணி மணிமுடி மன்ன னோலை காட்டிநீ யுரைத்த வெல்லாங் கனவெனக் கருதி னல்லான் மீட்டது மெய்ம்மை யாக வியந்துரை விரிக்க லாமோ | 520 |
இன்னவ னின்ன நீரா னின்னவே யெய்து கென்று முன்னவன் செய்த மொய்ம்பின் வினைகளே முயல்வ தல்லால் பின்னவன் பிறந்து தன்னாற் பெறுதலுக் குரிய வாய துன்னுவ தென்றுக் கான்று துணியுமோ சொல்ல வென்றான் | 521 |
மெய்ப்புடை தெரிந்து மேலை விழுத்தவம் முயன்று நோற்றார்க் கொப்புடைத் துங்கள் சேரி யுயர்நிலைச் செல்வ மெல்லாம் எப்படி முயறு மேனு மெங்களுக் கெய்த லாகா தப்படி நீயு முன்னர் மொழிந்தனை யன்றே யென்றான் | 522 |
விஞ்சைச் சாரணான் நாணிச் சினம் மறுதல்
இறைவனாங் குரைத்த சொற்கேட் டென்னைபா வம்பொ ருந்தாக் கறையவா மொழிகள் சொன்னேன் காவலன் கருதிற் றோரேன் பொறையினாற் பெரியன் பூபன் சிறியன்யா னென்று நாணி அறிவினாற் பெரிய நீரா னவிந்தன கதத்த னானான் | 523 |
பயாபதியின் ஐயத்தை மருசி அகற்றுதற்கு உரைக்கத் தொடங்கல்
கிளர்ந்தொளி துளும்பும் மேனிக் கேசர ரோடு மண்மேல் வளர்ந்தொளி திவளும் பூணோர் மணவினை முயங்க லில்லென் றளந்தறி வரிய சீரோற் கையமீ தகற்று கென்றாங் குளர்ந்துன னுணர்வி னூக்கி யுரைக்கிய வெடுத்துக் கூறும் | 524 |
விஞ்சையரும் மனிதரே என்பதை மருசி விளக்கிக் கூறுதல்
மஞ்சிவர் மணங்கொள் சோலை மணிவரைச் சென்னி வாழும் விஞ்சையர் விச்சை யாலே விழுமிய ரென்ப தல்லால் அஞ்சலில் தானை வேந்தே மனிதரே யவரும் யாதும் வெஞ்சுடர் விளங்கு வேலோய் வேற்றுமை யின்மை கேண்மோ 100 | 525 |
விஞ்சையன் தன்னை விளக்கிக் கூறுதல்
மண்ணவில் முழவின் மாநீர்ப் பவபுர முடைய மன்னன் பண்ணவில் களிதல் யானைப் பவனவே கற்குத் தேவி கண்ணவில் வடிவிற் காந்தி மதியவள் பாவை வண்ணவிற் புருவ வாட்கண் வாயுமா வேகை யென்பான் | 526 |
மற்றவ ளோடும் வந்தேன் மன்னன்யான் மருசி யென்பேன் அற்றமில் கேள்வி யெந்தை யஞ்சுமா னென்னும் பேரான் பெற்றதா யருசி மாலை பெருமக னருளினால் யான் கற்றநூல் பல்ல வாகுங் கருமணிக் கடகக் கையான் | 527 |
அலகைசா லாதி காலத் தரசர்கள் தொடர்ச்சி யெல்லாம் உலகநூல் பலவு மோதி யுணர்ந்தன னுரைப்பக் கேண்மோ விலகிய கதிர வாகி விடுசுடர் வயிரக் கோலத் திலகம்வீற் றிருந்த கண்ணித் திருமுடிச் செல்வ என்றான் | 528 |
மருசி நமியின் வரலாறு கூறுகின்றான்
ஆதிநா ளரசர் தங்க ளருங்குல மைந்து மாக்கி ஓதநீ ருலகின் மிக்க வொழுக்கமுந் தொழிலுந் தோற்றித் தீதுதீர்ந் திருந்த பெம்மான் திருவடி சாரச் சென்று நீதி நூற் றுலகம் காத்து நிலத்திரு மலர நின்றான் | 529 |
முசிநாச் சுரும்பு பாய முருகுடைத் துருக்குஞ் சோலைக் காசிநாட் டரசன் செங்கோற் கதிர்முடிக் கச்ச னென்பான் மாசினாற் கடலந் தானை மன்னவற் றவற்குத் தேவி தூசினாற் றுளும்பு மல்குல் சுதஞ்சனை சுடரும் பூணாய் | 530 |
வேய்ந்தக நிழற்றுங் கோதை மிளிர்மணிக் கலாப வட்டம் போந்தகந் திகழ்ந்து மின்னுப் பூந்துகில் பொலிந்த வல்குல் வாய்ந்தகங் கமழுங் கோதை யவள்பெற்ற வரச சிங்க நாந்தகக் கிழவர் கோவே நமியென்பான் நலத்தின் மிக்கான் | 531 |
அங்கவ னரசு வேண்டா னற்கடல் படைத்த நாதன் பங்கயங் கமழு மேனி பவித்திர பரம யோகி தங்கிய தியானப் போழ்தி றாழ்ந்துதன் றடக்கை கூப்பிப் பொங்கிய காதல் கூரப் பாடினன் புலமை மிக்கான் | 532 |
அருகக் கடவுள் வணக்கம்
அலகிலா ஞானத் தகத்தடங்க நுங்கி உலகெலாம் நின்று னொளித்தாயு நீயே ஒளித்தாயு நீயே யுயிர்க்கெலாங் கண்ணா யளித்தாயுங் காத்தாயு நீயேவாழி யறவேந்தே | 533 |
அழனாறும் வெங்கதிரோ னாண வலராது நிழனாறு மூர்த்தியாய் நின்றாயு நீயே நின்றாயு நீயே நிறைபொரு ளெல்லைக்கட் சென்றாயும் வென்றாயு நீயேவாழி திருமாலே | 534 |
நிறைதரு கேவலத்தோய் நின்னடியார்க் கெல்லாங் குறைதலி லின்பங் கொடுப்பயு நீயே கொடுப்பயு நீயேயெங் குற்றவேல் வேண்டாய் விடுத்தாயு நீத்தாயு நீயேவென்ற பெருமானே | 535 |
நமிபாடிய இசையின் தன்மை
என்றவன் பாடக் கேட்டே யிறஞ்சின குறிஞ்சி யேகா நின்றன விலங்கு சாதி நிலங்கொண்ட பறவை எல்லா மன்றுமெய் மறந்து சேர்ந்தார் கின்னர ரமரர் தாழ்ந்தார் வென்றவன் றியானத் துள்ளான் வியந்திலன் சிறிதும் வேந்தே | 536 |
நமியின் இசைகேட்டு ஆதிசேடன் வருதல்
மணநிரைத் திலங்குந் தாரோய் மற்றவ னுலோக நாதன் குணநிரைத் திசைத்த கீதங் கேட்டலு மணிகொள் கோவைக் கணநிரைத் திலங்குங் காய்பொன் முடிமிசை யீரைஞ்ஞாறு பணநிரைத் திலங்கப் புக்கான் பணதர ரரச னன்றே | 537 |
நமியை வணங்குதல்
பன்னக ருலகங் காக்கும் பாய்கதிர்ப் பசும்பொன் மேனி மின்னவிர் வயிரச் சூட்டு விடுசுடர் மணிப்பொற் பூணான் தன்னிக ரிகந்த தோன்றல் சரணெனப் பரமன் பாதம் மன்னர்கட் கரசன் முன்னை வலங்கொடு வணக்கங் செய்தான் | 538 |
நமியின் இசையில் தேவர்கள் ஈடுபட்டமை
தேந்துண ரிலங்கு கண்ணித் தேவனத் தேவர் கோனைத் தீந்தொடை நரம்பின் றெய்வச் செழுங்குரல் சிலம்ப வேத்தப் பூந்துணர்க் கற்ப லோகம் புடைபெயர்ந் திட்ட போற்றா வேந்துடை மான மெல்லாம் வேலினால் விடுத்த வேந்தே | 539 |
ஆதிசேடன் நமியரசனை வினவுதல்
மாண்டதன் நிலைமை யுள்ளி வருபொருண் மெய்ம்மைநோக்கித் தூண்டிய சுடரி னின்ற தியானத்தைத் துளங்கு வாய்போ லீண்டுவந் திசைக்குற் றேவ லெம்மிறை யடிக்கட் செய்தாய் வேண்டுவ தெவன்கொ லென்றான் மிடைமணிப் பூணினானே | 540 |
நமியரசன் விடையிறுத்தல்
பண்மிசைப் படர்ந்த சிந்தைப் பணதரற் பணிந்து மாற்றத் துண்மிசைத் தொடர்பு நோக்கி யுறுவலி யதனைக் கேளா விண்மிசை யவர்கள் போல வேண்டிய விளைக்குஞ் செல்வ மண்மிசைப் பெறுவ னாக மற்றிதென் மனத்த தென்றான் | 541 |
ஆதிசேடன் நமிக்கு வரமளித்துச் செல்லுதல்
இச்சையங் குரைப்ப கேட்டாங் கிமைய வரியற்கை யெய்தும் வீச்சையுந் துணையும் வெள்ளி விலங்கலுங் கொடுத்து வேந்தாய் நிச்சமு நிலாக வென்று நிறுவிப்போய் நிலத்தின் கீழ்த்த னச்சமி லுலகஞ் சேர்ந்தா னாயிரம் பணத்தி னானே | 542 |
நமியின் வழித்தோன்றலே சடியரசன் என்று மரீசி பயாபதிக்குப் பகர்தல்
ஆங்கவன் குலத்து ளானெம் மதிபதி யவனோ டொப்பா யோங்கிய குலமுஞ் செல்வப் பெருமையு முடைய நீயு மீங்கிரு குலத்து ளீர்க்குங் கருமம்வந் திசைத்த போழ்தி னீங்கரு நறுநெய் தீம்பால் சொரிந்தோர் நீர்மைத் தென்றான் | 543 |
பயாபதியின் வரலாறு கூறத்தொடங்குதல்
தங்குலத் தொடர்ச்சி கூறித் தானவ னிருந்த போழ்தி னுங்குல நிலைமை யெல்லா நூலினீ யுரைத்த வாறே எங்குல நிலைமை யானு முரைப்பனென் றெடுத்துக் கொண்டு பொங்கலர்ப் பிணைய லான்றன் புரோகிதன் புகல லூற்றான் | 544 |
அங்கனிமித்திகன் கூறுதல்
யாவனாற் படைக்கப் பட்ட துலகெலாம் யாவன் பாத்த தேவனால் வணக்கப்பட்ட தியாவன தகலஞ் சேர்ந்து பூவினாள் பொறியொன் றானாள் புண்ணிய வுலகங் கான ஏவினான் யாவ னம்மை யாவன துலக மெல்லாம் | 545 |
மற்றவ னருளின் வந்தான் மரகத மணிக்குன் றொப்பச் சுற்றி நின் றிலங்கு சோதித் தோள்வலி யெனும்பே ரானக் கொற்றவ னுலகங் காத்த கோன்முறை வேண்டி யன்றே கற்றவ ரின்று காறுங் காவனூல் கற்ப தெல்ல்லம் | 546 |
வாகுவலி தவஞ்செய்யச் செல்லுதல்
கொடிவரைந் தெழுதப் பட்ட குங்குமக் குவவுத் தோளான் இடிமுர சதிருந் தானை யிறைத்தொழில் மகனுக் கீந்து கடிமண் மனுக்குந் தெய்வக் கழலடி யரசர் தங்கள் முடிபொர முனிவிற் றான்போய் முனிவன முன்னினானால் | 547 |
கயிலாயத்து முடியில் தவஞ்செய்தல்
விண்ணுயர் விளங்கு கோட்டு விடுசுடர் விளங்க மாட்டாக் கண்ணுயர் கதலி வேலிக் கார்க்கயி லாய நெற்றிப் புண்ணியக் கிழவன் போகிப் பொலங்கலம் புலம்ப நீக்கித் திண்ணிய தியானச் செந்தீச் செங்சுடர் திகழ நின்றான் | 548 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.