தொழுமகன் ஆயினும் துற்றுடை யானைப் பழுமரம் சூழ்ந்த பறவையின் சூழ்ப விழுமிய ரேனும் வெறுக்கை உலந்தால் பழுமரம் வீழ்ந்த பறவையின் போப. |
66 |
பொருள்இல் குலனும் பொறைமைஇல் நோன்பும் அருள்இல் அறனும் அமைச்சுஇல் அரசும் இருளினுள் இட்ட இருண்மையிது என்றே மருள்இல் புலவர் மனம்கொண்டு உரைப்ப. |
67 |
[சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லார் உரையில் மேற்கோளாக வருபவை]
துக்கம் துடைக்கும் துகளறு காட்சிய நிக்கந்த வேடத்து இருடி கணங்களை ஒக்க அடிவீழ்ந்து உலகியல் செய்தபின் அக்கதை யாழ்கொண்டு அமைவரப் பண்ணி. |
68 |
[சிலம்பு: கனாத்திறம்: 13-க்கு மேற்கோளாகச் சொல்லப்பட்டது]
பண்ணால் திறத்தில் பழுதின்றி மேம்பட்ட தொண்ணூற்று அறுவகைக் கோவையும் வல்லவன் விண்ணாறு இயங்கும் விறலவர் ஆயினும் கண்ணாறி நோக்கிக் கடுநகை செய்வான். |
69 |
[சிலம்பு: கனாத்திறம்: 14-க்கு மேற்கோளாகச் சொல்லப்பட்டது]
அன்றைப் பகற்கழிந் தாள் இன்று இராப்பகற்கு அன்றில் குரலும் கறவை மணிகறங்கக் கொன்றைப் பழக்குழல் கோவலர் ஆம்பலும் ஒன்றல் சுரும்பு நரம்பென ஆர்ப்பவும். |
70 |
[சிலம்பு: ஆய்ச்சியர்குரவை: 3-க்கு மேற்கோளாகச் சொல்லப்பட்டது]
[யாப்பருங்கலக்காரிகை உரையாசிரியர் மேற்கோளாகக் காட்டியது]
நீல நிறத்தனவாய் நெய்கனிந்து போதவிழ்ந்து கோலம் குயின்ற குழல்வாழி நெஞ்சே! கோலம் குயின்ற குழலும் கொழும்சிகையும் காலக் கனல் எரியின் வேம்வாழி நெஞ்சே! காலக் கனல் எரியின் வேவன கண்டாலும் சால மயங்குவது என்வாழி நெஞ்சே! |
71 |
[யாப்பருங் கலம்: 93-ஆம் நூற்பாவிற்கு மேற்கோளாகச் சொல்லப்பட்டது]
வித்தகர் செய்த விளங்கு முடிகவித்தார் மத்தக மாண்பழிதல் காண்வாழி நெஞ்சே! மத்தக மாண்பழிதல் கண்டால் மயங்காதே உத்தம நன்னெறிக்கண் நில்வாழி நெஞ்சே! உத்தம நன்னெறிக்கண் நின்றுஊக்கஞ் செய்தியேல் சித்தி படர்தல் தெளிவாழி நெஞ்சே. |
72 |
[யாப்பருங் கலம்: 93-ஆம் நூற்பாவிற்கு மேற்கோளாகச் சொல்லப்பட்டது]
வளையாபதியிற் கிட்டியுள்ள செய்யுள்களின் தொகை முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.