சுயம்பிரபைக்கு சுயம்வரமும் கூடாது என்றல்
வாரணி முரச மார்ப்ப வயிரொடு வளைக ளேங்கத் தாரவர் குழாங்க ளீண்டச் சயமர மறைது மேனும் ஆரவி ராழி யனை யஞ்சுது மறிய லாகா காரவி தடக்கை வேந்தே கழலவர் கரும மென்றான் | 351 |
ஊழ்வினையின் ஆற்றல் உரைத்தல்
ஒன்றுநாங் கருதிச் சூழி னூழது விளைவு தானே கன்றிநாங் கருதிற் றின்றி மற்றோர்வா றாக நண்ணும் என்றுநாந் துணிந்த செய்கை யிதன்றிறத் தென்ன மாட்டாய் இன்றுநாந் துணிது மாயி னினிச்சிறி துரைப்ப னென்றான் | 352 |
சதவிந்து என்னும் நிமித்திகனைக் கலந்தெண்ணி ஆவனபுரிவோம் என்றல்
வீழ்புரி விளங்கு நூலோய் மேலுநங் குலத்து ளார்கட் கூழ்புரிந் துறுதி கூறு முயர்குல மலர நின்றான் தாழ்புரி தயங்கு நுண்ணூற் சதவிந்து மொழிந்த வாற்றால் யாழ்புரி மழலை யாள் கண் ணாவதை யறிது மென்றான் | 353 |
சுமந்தரி உரையை மற்றையோர் உடன்பட்டுக் கூறல்
என்றவன் மொழிந்த போழ்தி னேனையா ரினிதி னோக்கி மின்றவழ் விளங்கு வேலோய் மெய்யினு மேவல் வேண்டும் சென்றவன் மனையு ணீயே வினவெனச் சேனை வேந்தன் நன்றவர் மொழிந்த வெல்லா நல்லவா நயந்து கேட்டான் | 354 |
அமைச்சர்கள் அரசனை அவையைக் கலைக்குமாறு கூறுதல்
இந்திர னனைய நீரோ யினிப்பிறி தெண்ணல் வேண்டா மந்திர நீளு மாயின் வருவன வறிய லாகா சந்திரன் றவழ நீண்ட தமனியச் சூல நெற்றி அந்தரந் திவளு ஞாயிற் கோயில்புக் கருளு கென்றார் | 355 |
அரசன் அரண்மனையை அடைதல்
மந்திரக் கிழவர் தம்மை மனைபுக விடுத்து மன்னன் சுந்தரச் சுரும்புந் தேனுஞ் சூழ்கழ னிரையு மார்ப்ப வந்தர மகளிர் போல்வார் வரன்முறை கவரி வீச அந்தரக் கடைக ணீங்கி யகனக ரருளிப் புக்கான் | 356 |
வேறு - நண்பகலாதல்
மிகுகதிர் விலங்கலார் வேந்தன் றேனுடைந் துகுகதிர் மண்டப மொளிர வேறலும் தொகுகதிர் சுடுவன பரப்பிச் சூழொளி நகுகதிர் மாண்டில நடுவ ணின்றதே | 357 |
கண்டிரள் கழைவளர் கரும்பு கைமிகுத் தொண்டிரள் வெள்ளிலை யுரிஞ்சு மோடைமா வெண்டிரண் மணிபுடை சிலம்ப விட்டன வண்டிரள் கிளையொடு வளைக ளார்த்தவே | 358 |
ஒலிவிழா வண்டின மூத வூறுதேன் மலிவிழாப் பிணையலு மணங்கொள் சாந்தமும் பலிவிழாப் பதாகையும் பரந்து பாடுவார் கலிவிழாக் கழுமின கடவுட் டானமே | 359 |
குண்டுநீர்க் குழுமலர்க் குவளைப் பட்டமும் மண்டுநீர் மரகத மணிக்கல் வாவியும் கொண்டுநீ ரிளையவர் குடையக் கொங்கொடு வண்டுநீர்த் திவலையின் மயங்கி வீழ்ந்தவே | 360 |
பங்கயத் துகள்படு பழன நீர்த்திரை மங்கையர் முலையொடு பொருத வாவிகள் அங்கவ ரரிசன மழித்த சேற்றினும் குங்குமக் குழம்பினுங் குழம்பு கொண்டவே | 361 |
அங்கவள்வாய்க் கயம்வல ராம்ப றூம்புடைப் பொங்குகா டேர்பட ஞெறித்துப் பூவொடு கொங்கைவாய்க் குழலவர் குளிப்ப விட்டன திங்கள் வாண் முகவொளி திளைப்ப விண்டவே | 362 |
மாயிரும் பனித்தடம் படிந்து மையழி சேயரி நெடுமலர்க் கண்கள் சேந்தெனத் தாயரை மறைக்கிய குவளைத் தாதுதேன் பாயமோந் திறைஞ்சினார் பாவை மார்களே | 363 |
ஈரணிப்பள்ளி வண்ணனை
சந்தனத் துளித்தலை ததும்பச் சாந்தளைந் தந்தரத் தசைப்பன வால வட்டமு மெந்திரத் திவலையு மியற்றி யீர்மணல் பந்தருட் பாலிகைக் குவளை பாய்த்தினார் | 364 |
குருமணித் தாமரைக் கொட்டை சூடிய திருமணிப் பீடமுஞ் செதுக்க மாயவும் பருமணிப் பளிங்கென விளங்கு வான்பலி அருமணிக் கொம்பனா ரலர வூட்டினார் | 365 |
பொழுதுணர்மாக்கள் நாழிகை கூறுதல்
அன்னரும் பொழுதுகண் ணகற்ற வாயிடைப் பன்னருங் காலநூல் பயின்ற பண்புடைக் கன்னலங் கருவியோர் கழிந்த நாழிகை மன்னவ னடிமுத லுணர்த்தி வாழ்த்தினார் | 366 |
மன்னன் உண்ணுதல்
வாரணி முலையவர் பரவ மன்னவன் ஈரணிப் பள்ளிபுக் கருளி னானிரந் தோரணி யின்னிய மிசைத்த வின்பமோ டாரணி தெரியலா னமிர்த மேயினான் | 367 |
அரசன் தெருவில் நடந்து செல்லுதல்
வெள்ளிழை பொலிந்தொளி துளும்பு மேனியன் வள்ளிதழ் மல்லிகை மலர்ந்த மாலையான் அள்ளிதழ்ப் புதுமல ரடுத்த வீதிமேல் கள்ளிதழ்க் கண்ணியான் காலி னேகினான் | 368 |
அரசன் நடந்து செல்லுதல்
பொன்னலர் மணிக்கழல் புலம்பத் தேனினம் துள்ளலர் தொடையலிற் சுரும்போ டார்த்தெழ மன்னவன் னடத்தொறு மகர குண்டலம் மின்மலர்த் திலங்குவில் விலங்க விட்டவே | 369 |
மெய்காவலர் வேந்தனைச் சூழ்தல்
நெய்யிலங் கெஃகினர் நிறைந்த விஞ்சையர் கையிலங் கீட்டியர் கழித்த வாளினர் மெய்யிலங் குறையினர் விசித்த கச்சையர் வையகங் காவலன் மருங்கு சுற்றினார் | 370 |
அரசன் நிமித்திகன் வாயிலை அடைதல்
சுரும்புசூழ் பிணையலுஞ் சுண்ண மாரியும் கரும்புசூழ் கிளவியர் சொரிந்து கைதொழ நிரம்புநூ னிமித்திகன் மாட நீள்கடை அரும்புசூழ் தெரியலா னருளி னெய்தினான் | 371 |
நிமித்திகன் அரசனை வரவேற்றல்
எங்குலம் விளங்கவிக் கருளி வந்தவெங் கொங்கலர் தெரியலாய் கொற்றங் கொள்கென மங்கல வுழைக்கலம் பரப்ப மன்னனுக் கங்கலர் கேள்வியா னாசி கூறினான் | 372 |
அரசன் மண்டபத்தை அடைதல்
கொண்டமர்ந் தகிற்புகை கழுமிக் கோதைவாய் விண்டமர்ந் தொழுகுவ மதுக்கள் வீழ்ந்துராய் வண்டமர்ந் தொலிசெய மருங்குல் கொண்டதோர் மண்டப மணித்தல மன்ன னெய்தினான் | 373 |
அரசன் தான்வந்த காரியத்தை எண்ணுதல்
தழையவிழ் சந்தனப் பொதும்பு போன்மது மழைதவழ் மண்டப மலிர வீற்றிருந் துழையவர் குறிப்பறிந் தகல வொண்சுடர்க் குழையவன் குமரிதன் கரும மென்னினான் | 374 |
நிமித்திகன் பேசத் தொடங்குதல்
கனைத்தெதிர் கதிர்மணிக் கடகஞ் சூடிய பனைத்திர ளனையதோட் படலை மாலையான் மனத்தினை மறுவினூல் வாயி னாற்சொல நினைத்திவை விளம்பினா னிமித்த நீதியான் | 375 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.